திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சிக்கு இலக்கான பகுதிகளை வளப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட வெள்ளநீர் கால்வாய் திட்டம், அரசியல் காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ரூ. 369 கோடியில் முடிக்க வேண்டிய திட்டத்துக்கு இப்போதுள்ள நிலையில் ரூ.872 கோடி ஒதுக்க வேண்டியிருக்கிறது.
தாமிரபரணி ஆற்றிலிருந்து ஆண்டுதோறும் மழைக் காலங் களில் 50 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அவ்வாறு வீணாகும் தண்ணீரை வறண்ட பகுதிகளான திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் வட்டார பகுதிகளுக்கு திருப்பிவிட்டால் பல ஆயிரம் ஏக்கர் நிலம் செழிக்கும். இதனை கருத்தில்கொண்டு தாமிரபரணி ஆறு- கருமேனிஆறு- நம்பியாறு ஆகியவற்றை இணைத்து திசையன்விளை அருகே எம்.எல்.தேரியில் மிகப்பெரிய குளம் அமைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2009-ம் ஆண்டில் அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது.
2 கட்டம் நிறைவு
இத்திட்டம் ரூ.369 கோடியில் தயாரிக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.65 கோடியை ஒதுக்கி அப்போ தைய முதல்வர் மு.கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக 2010-ம் ஆண்டில் ரூ.41 கோடியும், 2011-ல் ரூ.107 கோடியும் ஒதுக்கப்பட்டது. திட்டத்தில் முதல்கட்டமாக கன்னடி யன் கால்வாய் முதல் திடியூர் வரை 20.3 கி.மீ. தூரம், 2-ம் கட்டமாக திடியூர் முதல் மூலக்கரைப்பட்டி வரை 18.6 கி.மீ. தூரம் வரையில் கால்வாய் அமைக்கும் பணிகள் பெரும்பாலும் முடிவுற்றுள்ளன. இதில் மேலச்செவல் கிராமத்தில் ஒரு பாலம், ஒரு ரயில்வே பாலம், நான்கு வழிச்சாலையில் பாலம், இணைப்பு கால்வாயில் இரு பாலங்கள் கட்ட வேண்டியுள்ளது.
திட்டம் சுணக்கம்
இந்நிலையில் 2011-12-ம் ஆண்டுக்குப்பின் 2 கட்டங்களில் எஞ்சியுள்ள பாலங்களின் பணியையும், மூலக்கரைப்பட்டி முதல் காரியாண்டி வரையுள்ள 12.7 கி.மீ. தூரமுள்ள 3-ம் கட்ட பணிகளுக்கும், காரியாண்டி முதல் எம்.எல். தேரி வரையிலான 21.4 கி.மீ. தூரமுள்ள 4-ம் கட்ட பணிகளும் இதுவரை தொடங்கவில்லை. திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு இருக்கிறது.
அரசு கருத்து
இதுகுறித்து ராதாபுரம் சட்டப் பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் அப்பாவு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை கேட்டபோது, கடந்த 28.11.13-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆ.மலைச்சாமி அளித்த பதிலில், இத் திட்டம் முழுவதும் மத்திய அரசின் விரைவு படுத்தப்பட்ட பாசன பயன் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு எதிர்பார்ப்பில் முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகளுக்கு மாநில நிதி ஒதுக்கீட்டின்கீழ் பணிகள் செயல்படுத்தப்பட்டன. தற்பொழுது மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பட்டவுடன் 3 மற்றும் 4-ம் கட்ட பணிகளை தொடங்கலாம் என்று அரசு கருத்து தெரிவித்திருந்தார்.
விவசாயி கோரிக்கை
இத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விவசா யிகள் குறைதீர் கூட்டத்தின் போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி.பெரும் படையார், மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதற்கு திருநெல்வேலி மாவட்ட நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளரான ஆ.மலைச்சாமி அளித்த பதில்:
தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டமானது மத்திய அரசின் வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில் விரைவுபடுத்தப்பட்ட பாசனம் பயன்பெறும் திட்டத்தின்கீழ் திட்டத்தின் மதிப்பீட்டில் 90 சதவீதம் உதவி பெறுதல் என்ற கொள்கை முடிவின்படி செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்நிதி உதவியை பெற மத்திய நீர்வள ஆணையத்தின்கீழ் உள்ள இயக்குநரகத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒப்புதல்
இத் திட்டத்தின் விலை மதிப்பீடு, மத்திய நீர்வள ஆணையத்தின் விலை மதிப்பீட்டு இயக்ககம் (Cost Appraisal Directorate) அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, தற்போது ரூ.872.45 கோடி (2014-15-ம் ஆண்டுக்கான விலை விவரப்பட்டியல் படி) மத்திய நீர்வள ஆணையத்தின் விலை மதிப்பீட்டு இயக்கக அலுவலக கடிதம் (நாள் 7.5.2015)-ம் மூலம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
25.5.2015-ல் நடைபெற்ற மத்திய நீர்வள ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவின் கூட்டத்தில் இத் திட்டத்துக்கான விலை மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் வானிலை மாற்றம் அமைச்சகத்திலிருந்து 28.5.2015-ம் தேதி வரப்பெற்ற கடிதத்தில் சுற்றுச்சூழல் தடைநீக்க சான்று முறைப்படி பெற்று மத்திய நீர்வள ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புதுடில்லியில் கடந்த 16.7.2015-ல் நடைபெற்ற மத்திய நீர்வள ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவின் கூட்டத்தில் இத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. 3 மற்றும் 4-ம் நிலைப்பணிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் மற்றும் தமிழக அரசின் ஒப்புதலுடன் விரைவில் செயலாக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
ரூ. 500 கோடி வீண் செலவு
இத் திட்டத்தை ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி நிறைவேற் றியிருந்தால் கடந்த 2014-ம் ஆண்டிலேயே முடிவுற்றிருக்கும். ரூ.369 கோடியில் பணிகள் நிறைவேறியிருக்கும். ஆனால் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திட்டத்தை கிடப்பில்போட்டுவிட்டு, இப்போது மத்திய அரசிடம் நிதியை எதிர்பார்க்கிறோம் என்று மாநில அரசும், அதிகாரிகளும் கூறுவது அரசியல் இல்லாமல் வேறு என்ன என்று விவசாய பிரதிநிதிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுகுறித்து நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், பெரும்படையார் நேரடியாகவே குற்றஞ்சாட்டி பேசினார். `கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவந்த காரணத்தால் இத் திட்டத்தை இந்த அரசு கிடப்பில் போட்டுவிட்டது. தேர்தல் வரப்போகிறது என்பதால் இப்போது மத்திய அரசிடம் நிதி கேட்டிருக்கிறோம், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியிருந்தது என சமாதானம் செய்யப்பார்க்கிறது.
இத் திட்டத்தின் முதல் 2 கட்ட பணிகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலா நிறைவேற்றப்பட்டது? இப்போது ஏன் சுற்றுச்சூழல் அனுமதி என்று இழுத்தடிப்பு செய்யப்படுகிறது? அரசியல் பார்க்காமல் விவசாயத்துக்காக இத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’ என்று அவர் பேசினார்.
ஆனால் அவரது கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியரும், அதிகாரி களும் சரியான பதில்களை அளிக்கவில்லை. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று ஆட்சியர் சமாளிப்பு பதில் அளித்தார். ரூ. 369 கோடியில் நிறைவேற்ற வேண்டிய திட்டத்தை கிடப்பில் போட்டதால் இப்போது ரூ.872 கோடி ஒதுக்க வேண்டியிருக்கிறது. ரூ. 500 கோடி கூடுதல் செலவுக்கு யார் காரணம்? என்று விவசாயப் பிரதிநிதிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago