கரோனா முன்னெச்சரிக்கை: பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தையும் மூட வேண்டும்; முதல்வர் பழனிசாமி உத்தரவு

By செய்திப்பிரிவு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட அரசு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா செல்லும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தவிர்க்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு, எடுத்துள்ள பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள்:

'' * ரயில்களின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நம் மாநிலத்திற்கும், நம் மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும், ரயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமி நாசினி மூலம் தினந்தோறும் சுத்தம் செய்யுமாறு தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

* மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

* ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி ((Centralised Air Conditioning) உள்ள இடங்களில் அவற்றை (Vent, Duct) வாரம் ஒருமுறையாவது கிருமி நாசினி கொண்டு முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

* தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவை நடவடிக்கைகளைப் பார்வையிட வரும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம் என சட்டப் பேரவைத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சட்டப்பேரவைக்கு வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என சட்டப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். எனவே, தலைமைச் செயலகத்திற்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்கவும்.

* மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

* அரசுத் தேர்வுகள் (10 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தேர்வுகள் – செய்முறைத் தேர்வுகள் (Practical) உட்பட) மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.

* மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.

* அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும். இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை ((Dry Ration) அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.

*மாநிலத்தில் செயல்படும் அனைத்துத் திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் (Malls), கேளிக்கை அரங்கங்கள் (Amusement Parks), நீச்சல் குளங்கள் (Swimming Pools), உடற்பயிற்சி மையங்கள் (Gymnasiums), உயிரியல் பூங்காக்கள் (Zoos) மற்றும் அருங்காட்சியகங்கள் (Museums) மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்.

* ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்டது போக, புதிய நிகழ்ச்சிகள் எதுவும் மார்ச் 31 வரை நடைபெறுவதை திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

* திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளிலும், குறைந்த அளவில் மக்கள் கூடினால், கரோனா வைரஸ் பரவுவது பெரிய அளவில் தடுக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* அதிகமாகக் கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடைகாலப் பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த மார்ச் 31-ம் தேதி வரை அனுமதி வழங்கக் கூடாது.

அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உட்பட) கேளிக்கை விடுதிகள் (clubs) போன்றவை மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும்.

* மேற்கூறியவற்றைத் தவிர பிற அவசிய மற்றும் அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும்.

* கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும், மாநில அரசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் அனைத்து அரசுத் துறைகளும், பொது நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

* அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில், முழுமையாக கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான சோப், கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவற்றைப் போதிய அளவில் இருப்பில் வைத்து, பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

* அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 மற்றும் தொற்று நோய் சட்டம், 1897, மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939-ன்படி பிறப்பிக்கப்பட்ட மேற்கண்ட உத்தரவுகள் மற்றும் நடைமுறைகளைச் சிறிதும் தவறாது நடைமுறைப்படுத்தி, கரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய தங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாகக் கருதி, வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

* மேலும், சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் தனியார் மற்றும் அரசு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் மார்ச் 31-ம் தேதி வரை புதிய சுற்றுலா எதையும் ஒருங்கிணைத்து, பொதுமக்களைச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

* சுற்றுலா பயணியர் தங்குமிடம் (Tourist Resorts) அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும். சுற்றுலா பயணியர் தங்குமிட உரிமையாளர்கள் எவ்வித முன்பதிவும் (ரிசர்வேஷன்) மார்ச் 31-ம் தேதி வரை செய்யக் கூடாது.

* கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்விடங்களில், நோய்த் தடுப்புக்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

* இவ்விடங்களில் தெர்மல் ஸ்கேனர் முறையில் பரிசோதித்து, எவருக்கேனும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்து சமய அறநிலையத் துறையும், சுகாதாரத் துறையும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் நிர்வாகங்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

* யாரேனும் கரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால், இந்திய தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* பொது மக்கள் மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும்,

* கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்,

* மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை, வணிக மையங்கள், திருமணங்கள் மற்றும் இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றைத் தவிர்க்குமாறும், தனி மனித சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

* பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினைப் பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும்போதும், அவ்வப்போதும் கைகளைச் சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்யவும்,

* கைகளைச் சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொட வேண்டாம்.

* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும். வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளைச் சோப்பு போட்டுச் சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,

* அனைத்து அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்குச் செல்பவர்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் கைகளை உரிய கிருமி நாசினியைக் கொண்டு தூய்மைபடுத்திக் கொண்ட பின் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதைத் தவிர்க்கவும். கரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* நோய்க்கான அறிகுறி உள்ள பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

* கரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்துகொள்ள சுகாதாரத் துறையின் 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. இதன் எண்கள் 104, 044-29510400, 044-29510500, 9444340496 மற்றும் 8754448477.

* தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். சில நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை, மத்திய அரசு தடை செய்துள்ளது.

எனினும், அந்நாடுகளிலிருந்து இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கத் தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த வேண்டும்.

* அதேபோல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், உள்நாட்டுப் பயணிகளையும் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி, சோதனை செய்திட இந்திய விமான நிலைய ஆணைய இயக்குநரும், பொது சுகாரதாரத் துறை இயக்குநரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

* அண்டை மாநிலங்களில் இருந்து கரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதை உடனடியாக நடைமுறைப்படுத்திட வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

* தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு தனியார் (ஆம்னி) பேருந்துகள் வாயிலாக லட்சக்கணக்கானவர்கள் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, அண்டை மாநில எல்லையை ஒட்டியுள்ள சுங்கச் சாவடி (டோல்கேட்) அருகிலேயே பயணிகளின் உடல்நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யத் தேவையான கட்டமைப்புகளை சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் ஏற்படுத்த வேண்டும்.

* தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில், ரயில்வே, மாநகரப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பொதுக் கழிவறைகள் போன்ற இடங்களில் பொது சுகாதாரத் துறையினர், போக்குவரத்துத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பேருந்துகளையும், மெட்ரோ ரயில்களையும், தினந்தோறும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்திடவும், கூடுதல் சுகாதார நடவடிக்கைகளையும், கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் நடைமுறைக்கு வரும்.

கரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக உணர்ந்து, முழுமையாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்