கோவைக்கு ஜூன் 15-ம் தேதி வரை சிறுவாணி அணை நீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணை, கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 49.50 அடி. அணையில் இருந்து பெறப்படும் நீர், வழியோரமுள்ள 22 கிராமங்கள் மற்றும் மாநகரின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, சிறுவாணி அணையில் 29 அடிக்கு நீர் உள்ளது. 90 எம்.எல்.டி. நீர் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பருவமழைக் காலங்களில், சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, கேரள அரசு விதித்த கட்டுப்பாட்டால் 45 அடிக்கு மேல் நீர் தேக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், தொடர்ச்சியாக மழை பெய்தாலும் சிறுவாணி அணை நிரம்பவில்லை. மேலும், 45 அடியை தாண்டாத அளவுக்கு, தொடர்ந்து அணையின் நீர் இருப்பு பராமரிக்கப்பட்டது.
அணையில் 49.50 அடிக்கு நீர்மட்டம் இருந்தாலே, கோடைக் காலங்களில் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருக்கும். இந்நிலையில், நீர் தேக்க அளவை குறைத்ததால், நடப்பு கோடைக் காலத்தில் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. மேலும், அணையில் இருந்து நீர் வெளியேறும் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் நீர்க்கசிவு உள்ளது. இதனால், குறிப்பிட்ட அளவுக்கு நீர் கசிந்து வெளியேறி வீணாகிறது.
இதுகுறித்து மாநகராட்சி மற்றும் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘சிறுவாணி அணையின் நீர்க்கசிவுகளை சரி செய்ய, உயர் அதிகாரிகள் மூலமாக கேரள அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு, ரூ.5 கோடி மதிப்பில் திட்ட அறிக்கையை, கேரள அரசு தயாரித்துள்ளது. இதுதவிர, தற்போதைய சூழலில் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீரில், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் இல்லை’’ என்றனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கோவை பிரிவு செயற்பொறியாளர் செல்லமுத்து கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், சிறுவாணி அணையில் இருந்த நீரின் அளவைவிட, தற்போது 12 அடி கூடுதலாக இருப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அணையில் 29 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. தினசரி தேவையான கொள்ளளவு நீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து மாவட்டத்துக்கும், மாநகருக்கும் விநியோகிக்கப்படுகிறது. இதனால், ஜூன் 15-ம் தேதி வரை சிறுவாணி அணை நீரை எடுப்பதில் எந்தவித தடையும் இருக்காது. அதன் பின், பருவ மழைக்காலம் தொடங்கிவிடும் என்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து நீர் எடுப்பதில் இடையூறுகள் இருக்காது.
பில்லூர் அணையின் நீர்மட்டமும் போதிய அளவில் உள்ளதால், மாவட்டப் பகுதி, மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் இல்லை’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago