மாநகராட்சியின் 156 உடற்பயிற்சிக் கூடங்களில் கிருமி நீக்க நடவடிக்கை அவசியம் என்று கோவிட்-19 வைரஸ் ஒழிப்பு முன்னெச்சரிக்கை குறித்து மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நகர்ப்புறங்களில் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே நீரிழிவு நோய் மற்றும் இதய நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில், இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாநகரம் முழுவதும் 156 இடங்களில் இலவச உடற்பயிற்சிக் கூடங்களைத் திறந்து, பராமரித்து வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட கூடங்கள் மின்னணு உடற்பயிற்சி சாதனங்களைக் கொண்ட நவீன உடற்பயிற்சிக் கூடங்களாகும். இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர்.
சென்னை கடலோரப் பகுதி என்பதால், காற்றில் ஈரப்பதம் மிகுந்திருக்கும். உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சி மேற்கொள்ளும்போது வியர்வை சிந்துவதும், அதிகமாக மூச்சு வாங்கும்போது மூக்கில் ஒழுகுவதும் வழக்கமான நிகழ்வாகும். இவை அனைத்தும் உடற்பயிற்சிக் கூடங் களிலேயே நடைபெறுகிறது.
பயனாளிகள் துடைத்துக்கொள்வதற்கான துணி துண்டுகளை கொண்டுவருமாறு மாநகராட்சி நிர்வாகமும் அறிவுறுத்துவதில்லை. இவற்றில் உள்ள கழிவறைகளையும் தூய்மைப்படுத்துவதே இல்லை. இவ்வாறு அசுத்தமாக இருக்கும் உடற்பயிற்சிக் கூடங்கள், ஆயுதபூஜைக்காக ஒரு நாள் மட்டும் பயனாளிகளால் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
மாநகராட்சி நிர்வாகத்தால் தூய்மைப் பணியே நடைபெறுவதில்லை. இதுபோன்ற பகுதிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமி நீக்கம் செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால் இதுவரை அங்கு கிருமி நீக்கம் நடந்ததே இல்லை. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் மாநகராட்சியிடம் இல்லை என்று கூறப்படுகிறது. தனியார் உடற்பயிற்சிக் கூடங்களில் கூட தூய்மைப் பணிதான் நடக்கும். கிருமி நீக்கம் நடைபெறாது.
தற்போது கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு, மழலையர் வகுப்புகள் முதல், 5-ம் வகுப்பு வரை மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. மாநில எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகமும், தனியார் மருத்துவர்கள், வங்கிகள், உணவகங்கள், வணிக வளாக நிர்வாகிகளை அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து வருகிறது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகங்களில் கிருமி நீக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொடர்பாக 14-ம் தேதி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 1,601 பேர், சுகாதாரத் துறை கண்காணிப்பில் உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 560 பேர் உள்ளனர்.
இந்தச் சூழலில் காய்ச்சல் பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அடைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. ஆனால் அசுத்தத்தின் பிடியில் உள்ள, எளிதில் வைரஸ் பரவ வாய்ப்புள்ள உடற்பயிற்சிக் கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று பயனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக ராயபுரத்தை சேர்ந்த மாநகராட்சி உடற்பயிற்சிக் கூட பயனாளிகள் கூறியதாவது:
இங்குதான் வியர்வை சிந்துவதும், மூக்கை சிந்துவதும் அதிகமாக உள்ளது. அதனால் கோவிட்-19 வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ள பகுதி உடற்பயிற்சிக் கூடங்கள்தான். நோய் தாக்கியவர் எப்படி கூடத்துக்கு வருவார் என தோன்றலாம். ஒரு நபரை வைரஸ் தாக்கி, முதல் அறிகுறி தென்படுவதற்கு முன்பாகவே, வைரஸை பரப்பும் வேலையை அவரது உடல் செய்யும். எனவே உடற்பயிற்சிக் கூடங்கள் அனைத்திலும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடற்பயிற்சிக் கூடங்களில் கிருமி நீக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுமா என்று மாநகராட்சி பூங்காத் துறை (பூங்கா, விளையாட்டு திடல், உடற்பயிற்சிக் கூடம்) அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளை கேளுங்கள்" என்றனர். சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "உடற்பயிற்சிக் கூடங்களில் கிருமி நீக்கம் செய்வது தொடர்பாக பூங்கா துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago