கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: 5-ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை, தியேட்டர், ஷாப்பிங் மால்களை மூட அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை, தியேட்டர், ஷாப்பிங் மால்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுத்துறைகளுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பு:

“கரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக (Pandemic) அறிவித்துள்ளது.

தமிழக அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

* தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளிநாட்டு பயணிகள் வருகையை தடை செய்துள்ளது.

எனினும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்தப்படும்.

* அண்டை மாநிலங்களில் இருந்து கரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (LKG&UKG) துவக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை) 31.3.2020 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

* எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் (TALUK) உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (MALLS) 31.3.2020 வரை மூட உத்தரவு.

* கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட மாநில பேரிடர் நிதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கு ரூ.30 கோடி, போக்குவரத்துத்துறைக்கு ரூ.5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடி, நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ.2 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.3 கோடி, பள்ளிக் கல்வி மற்றும் உயர்க்கல்வித்துறைக்கு ரூ.2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.0.5 கோடி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.2.5 கோடி ஆக மொத்தம் ரூ.60 கோடி உடனடியாக வழங்க உத்தரவு.

* மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள திரை யரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு உத்தரவு.

* பொது இடங்களில் குறிப்பாக, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து, அத்தகையோரை மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதைத் தடுக்க தகுந்த தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும், தேசிய நலவாழ்வு குழும நிதியிலிருந்தும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியதன்பேரில், முதல்வர் போர்க்கால அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

*மேலும், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த வருவாய் நிருவாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வருவாய் நிருவாக ஆணையருக்கு தினந்தோறும் அனுப்ப வேண்டும் என்றும், வருவாய் நிருவாக ஆணையர் அந்த அறிக்கைகளைத் தொகுத்து, சுகாதாரத் துறை அமைச்சருக்கும், முதல்வருக்கும் தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

* மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்