சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் ஏற்பட்டிருக்கும் பலனை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து மக்கள் மீது இருக்கும் சுமையைத் தவிர்க்காமல், கலால் வரியை உயர்த்தி மேலும் சுமையை ஏற்றுவதா? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஒரு பீப்பாய் 61.13 டாலராக இருந்தது. அப்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 78.12 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 71.86 ஆகவும் இருந்தது.
ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை 32 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.57 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.49 ஆகவும் விற்கப்பட வேண்டும். ஆனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 72.57 ஆகவும், டீசல் விலை ரூபாய் 66.2 ஆகவும் உள்ளது. இத்தகைய விலை உயர்வுக்குக் காரணம் மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலன் மக்களுக்குச் சென்றடைகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜக அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 2-ல் இருந்து 8 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 2-ல் இருந்து ரூபாய் 4 ஆகவும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதைத் தவிர, சாலை வரி ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூபாய் 1 ஆகவும், டீசலில் ரூபாய் 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22.98 ஆகவும், டீசலுக்கு ரூபாய் 18.83 ஆகவும் கடுமையாக உயர்த்தியிருக்கிறது. பாஜக ஆட்சியில் இதுவரை 9 முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு ரூபாய் 39 ஆயிரம் கோடி கூடுதல் வருமானத்தை கலால் வரி மூலம் பெற்றிருக்கிறது. 2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சி அமைந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 3.56 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம், பெட்ரோலில் ரூபாய் 13.50 மற்றும் டீசலில் ரூபாய் 15.27 கூடுதலாக கலால் வரி விதித்து மத்திய அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதைவிட மக்கள் விரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் ஏற்பட்டிருக்கும் பலனை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து மக்கள் மீது இருக்கும் சுமையைத் தவிர்க்கக்கூடிய நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்திருக்க வேண்டும். இதன் மூலம் விலைவாசிகள் குறைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
ஆனால், கடுமையான நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க கலால் வரியை விதித்து, மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றி, துன்பத்திற்கு ஆளாக்கும் மத்திய பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago