ஹைதராபாத்தில் உதவி மேலாளர் பணியில் இருந்த கோவை எம்பிஏ பட்டதாரி இளைஞர், அந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரில் கோவை மாநகராட்சி துப்புரவாளர் பணியில் சேர்ந்துள்ளார்.
சமீபத்தில் கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவுப் பணியிடங்களுக்கு ஆட்கள் எடுக்கப்பட்டனர். தமிழ் படிக்கத் தெரிந்தால் போதும் என்கிற தகுதி மட்டுமே இதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பி.இ, எம்.எஸ்.சி, எம்.பி.ஏ பட்டதாரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சமீபத்தில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் எம்எஸ்சி பட்டதாரியான ஒரு பெண், எம்பிஏ பட்டதாரி ஒருவர் உள்ளிட்ட ஏராளமான பட்டதாரிகளும் துப்புரவுப் பணியாளராக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
கோவையில் பிறந்து எம்பிஏ பட்டம் பயின்று, ஹைதராபாத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்துடன் உதவி மேலாளர் பணியில் இருந்த செய்யது முக்தார் அகமதுவும் துப்புரவுப் பணியாளராக நியனமம் செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான செய்யது, கோவை குனியமுத்தூர் அருகிலுள்ள இடையர்பாளையம் பகுதியில் வசிக்கிறார். நேர்த்தியாக உடையணிந்து ஏசி அறையில் பணியாற்றி வந்த செய்யது, அரசு வேலைக்காக தற்போது கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் துப்புரவுப் பணியாளராக சேர்ந்து குப்பை லாரியில் 4 தொழிலாளர்களில் ஒருவராக குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணத்துடன் துப்புரவுத் தொழில் எனும் மக்கள் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர் செய்யதுவிடம் 'இந்து தமிழ் திசை' சார்பில் பேசினோம்.
நல்ல சம்பளத்துடன் அலுவலகப் பணியை விட்டு துப்புரவுப் பணிக்கு வர என்ன காரணம்?
எனக்கு அரசு வேலையில் இணைய வேண்டும் என்று ஆசை. அதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதினேன். கிடைக்கவில்லை. மற்றொரு புறம் குடும்பத்துடன் இணைந்து வாழ்வதும் இயலாத விஷயமாக இருந்தது. ஆகவே, துப்புரவாளர் பணி காலியாக இருப்பதை அறிந்து விண்ணப்பித்து சேர்ந்தேன்.
நீங்கள் நேர்காணலுக்குச் சென்றபோது அதிகாரிகள் எம்பிஏ படித்துவிட்டு இந்தப் பணியில் இணைந்துள்ளீர்களே என்று கேட்கவில்லையா?
நான் வேலையில் சேர்ந்தவுடன் கையெழுத்து போடும்போது என்ன வேலை கொடுக்கிறார்களோ அதைச் செய்யவேண்டும். எம்பிஏ படித்துள்ளேன் என்பதை மூளையில் ஏற்றிக்கொண்டு பணியாற்ற முடியாது. வேலைக்கு வந்தால் சொன்னதைச் செய்யவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் இந்தப் பணியில் சேர்ந்தேன்.
அதிகாரிகள் நேர்காணலில் இதுகுறித்துக் கேட்டார்களா?
ஆமாம். அவர்கள் கேட்டபோதும் இதே பதிலைத்தான் சொன்னேன். நான் அரசு வேலைக்காக முயற்சி செய்து பார்த்து எங்கும் கிடைக்கவில்லை. அதனால் இந்தப் பணிக்காக விண்ணப்பித்தேன். பணி நேரத்தில் பணி பற்றி மட்டுமே யோசிப்பேன் என்று சொன்னேன்.
உங்கள் உறவினர்கள், குடும்பத்தார் உங்கள் முடிவை ஏற்றுக்கொண்டார்களா?
ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடப்பட்டார்கள். அதன் பின்னர் நான் என் எண்ணத்தை விளக்கிச் சொன்னேன். இதுவும் அரசுப் பணிதான். இது ஆரம்பம்தான். நான் இன்னும் முயற்சி செய்து முன்னுக்கு வருவேன் என்று விளக்கினேன். புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்கள்.
இந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டே வேறு அரசுத் தேர்வு எழுதும் எண்ணம் உண்டா?
இப்போதைக்கு இந்தப் பணியில் எனக்கு முழு திருப்தி உள்ளது. எடுத்தவுடன் எனக்கு வேறு பணிக்குச் செல்லும் எண்ணம் இல்லை. முதலில் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடவே விரும்புகிறேன். மேலே வர வேண்டும் என்கிற எண்ணம் 200 சதவீதம் உள்ளது. முதலில் எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை முழுமையாகச் செய்து பின்னர் வாய்ப்பு வரும்போது கட்டாயம் அதை முயற்சிப்பேன்.
நீங்கள் குரூப்-1 தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்தீர்களா?
அப்படி எதுவும் பயிற்சி மையத்தில் சேரவில்லை. கோச்சிங் கிளாஸ் எதற்கும் போகவில்லை. புத்தகங்களை நேரடியாகப் படித்துதான் தேர்வு எழுதினேன். குடும்பச் சூழ்நிலை காரணமாக அதற்கு நிதியில்லை.
நீங்கள் எம்பிஏக்கு மேல் ஏன் படிக்கவில்லை?
வறுமையான என் குடும்பச் சூழ்நிலைதான் காரணம். 91-ம் ஆண்டு புற்று நோயால் என் தந்தை இறந்த பின்னர் என் படிப்பு நின்று போனது. அதன் பின்னர் வேலைக்குச் சென்றுகொண்டே படித்தேன். அதனால் எனது படிப்புக்கும் பட்டம் வாங்குவதற்கும் பல ஆண்டுகள் இடைவெளி இருக்கும். இடையிடையே இரண்டு மூன்று ஆண்டுகள் தடைபட்டு, பின்னர் படிப்பைத் தொடர்ந்து எம்பிஏ முடித்தேன்.
உங்கள் பட்டப்படிப்பை அஞ்சல் வழியில் படித்தீர்களா?
இல்லை. அனைத்துப் படிப்புகளையும் நேரடியாக கல்லூரியில்தான் படித்தேன். எனக்கு இளங்கலை படிப்புக்கும் முதுகலை படிப்புக்குமே 3 ஆண்டுகள் இடைவெளி இருந்தன. அதன் பின்னர் கல்லூரியில் சேர்ந்து எம்பிஏ முடித்தேன்.
உங்கள் குடும்பம் குறித்துச் சொல்லுங்கள்?
மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். பெற்றோர் இல்லை. சித்தி, மாமா என்று கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம்.
வேறு ஏதேனும் உதவி எதிர்பார்க்கிறீர்களா?
நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன், பெரிதான எதிர்பார்ப்பு எதுவுமில்லை. இந்தப் பணியே எனக்குத் திருப்திதான். வருங்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் முயற்சி செய்வேன்.
உங்களை சக தொழிலாளிகள் எப்படிப் பார்த்தார்கள்?
முதலில் என்னிடம் நெருங்குவதில் தயக்கப்பட்டார்கள். என்னங்க பட்டப்படிப்பு முடிச்சுட்டு எங்கள் பணிக்கு வந்திருக்கிறீர்களே என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனால் நான் அதுகுறித்து யோசிக்கவே இல்லை. நான் அவர்களுடன் நெருங்கிப் பழகினேன். எனக்குக் கொடுத்த வேலையை இறங்கி வேலை செய்தேன். இரண்டு, மூன்று நாட்களில் அனைவரும் நெருங்கிவிட்டார்கள். எங்கள் குழுவில் 4 பேர் இருக்கிறோம். எங்களுக்குக் கொடுத்த வேலையை குறித்த நேரத்திற்குள் முடித்ததால் அனைவருக்கும் சந்தோஷம்.
மேலதிகாரிகள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?
அவர்கள் அனைவரும் பாராட்டினர். நீங்கள் படித்துப் பட்டம் வாங்கியுள்ளதை நினைத்து இந்த வேலையைப் பார்க்காதீர்கள். நன்றாக இறங்கி வேலை செய்யுங்கள். இந்த வேலை செய்ய நாம் புண்ணியம் செய்துள்ளோம் என்று தெரிவித்தனர். மத்திய மண்டலத்தில் உள்ள அதிகாரிகள் முழு ஆதரவு தருகிறார்கள்.
இவ்வாறு தன்னம்பிக்கையுடன் செய்யது பேசினார்.
அரசுத் தேர்வுகளைத் தொடர்ந்து எழுதுவேன் என்றும் செய்யது தெரிவித்தார். பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்க முடியாத வறுமையான சூழலில் இருக்கும் செய்யது, எப்படியும் சாதிப்பேன் என்கிற தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago