என்பிஆர் கணக்கெடுப்புப் பணி நிறுத்தம் சரியான நடவடிக்கை; அச்சத்தை முழுமையாகப் போக்க வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

என்பிஆர் கணக்கெடுப்புப் பணி நிறுத்தம் சரியான நடவடிக்கை என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (மார்ச் 13) வெளியிட்ட அறிக்கையில், "என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்குவது குறித்து மத்திய அரசிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு இதுவரை எந்த விளக்கமும் வராத நிலையில், தமிழகத்தில் என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அதேபோல், என்பிஆர் கணக்கெடுப்பின்போது சந்தேகத்துக்கிடமானோர் என்று எவரும் குறிப்பிடப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இவை இரண்டும் சரியான நடவடிக்கைகள் ஆகும்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் வழக்கம் கடந்த 2010-ம் ஆண்டில் தொடங்கியது. அதன்பின் 2015-ம் ஆண்டில் மக்கள்தொகை பதிவேடு மேம்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் தேசிய மக்கள்தொகை பதிவேடு மீண்டும் தயாரிக்கப்படவிருக்கிறது.

ஆனால், 2010-ம் ஆண்டில் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பின்போது மக்களிடம் எழுப்பப்பட்ட கேள்விகளை விட இப்போது கூடுதலாக 6 கேள்விகள் எழுப்பப்படவுள்ளன. பெற்றோரின் பிறப்பிடம், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவை குறித்த 6 கேள்விகள் மக்களிடையே அச்சத்தை விதைத்துள்ளன. இந்தக் கேள்விகளை நீக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். இதை வலியுறுத்தி அண்மையில் நடந்த பாமகவின் இரு பொதுக்குழு கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சர்ச்சைக்குரிய 6 கேள்விகளையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ள போதிலும், அதற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இத்தகைய சூழலில் சர்ச்சைக்குரிய கேள்விகளுடன் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்புக்கான பணிகளைத் தொடங்கினால், முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் அச்சம் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்புக்கான கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்திருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு தற்காலிக நிம்மதியை அளிக்கக்கூடும்.

அடுத்தகட்டமாக, மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து என்பிஆர் கணக்கெடுப்பில் சர்ச்சைக்குரிய கேள்விகளை முழுமையாக நீக்கவும், அதன் மூலம் தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரின் அச்சத்தை முழுமையாகப் போக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

மற்றொருபுறம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் இந்திய முஸ்லிம் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த விளக்கத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கான சர்ச்சைக்குரிய கேள்விகள் பற்றி விளக்கமளித்த அவர், என்பிஆர் கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் கேள்விகளில், அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; தெரிந்த தகவல்களை மட்டும் அளித்தால் போதுமானது; எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை; தகவல்களைத் தராதவர்கள் சந்தேகத்துக்கிடமானவர்கள் என்று குறிப்பிட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய மக்கள்தொகை பதிவெடு தயாரிப்பு குறித்து எந்தவிதமான அச்சமும் தேவையில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பின்போது சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பப்படும்; அவற்றுக்கு விடை அளிக்காவிட்டால் சந்தேகத்துக்கு இடமானவர்களாக அறிவிக்கப்பட்டு, குடியுரிமை பறிக்கப்படும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு பொய்யான பரப்புரை செய்து வந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கத்திற்குப் பிறகு பொய்யான பரப்புரைகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன.

தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இனியும் குடியுரிமை சட்டத் திருத்தம், என்பிஆர் பற்றி தேவையற்ற, பொய்யான தகவல்களைக் கூறி மக்களை அச்சுறுத்தும் செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்