குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து 2 வாரங்களில் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கெடு

By ஆர்.பாலசரவணக்குமார்

நிலத்தடி நீரை எடுக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள 690 குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து 2 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிமம் இல்லாமல் நிலத்தடி நீர் எடுக்கும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்டது.

பின், உரிமம் கோரி விண்ணப்பித்த குடிநீர் அலைகளிடம் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் பெற்று விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு இன்று (மார்ச் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலத்தடி நீர் எடுக்க உரிமம் கேட்டு 1,054 விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளதாகவும், அதில் 690 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்க தகுதி உடையதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தடி நீர் இருப்பு அளவை அறிந்து அதன் அடிப்படையில் உரிமம் வழங்குவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இரண்டு வாரங்களில் உரிமம் கோரிய விண்ணப்பங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் சம்பந்தப்பட்ட துறை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது எனத் தெரிவித்தார்.

இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை மார்ச் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

விசாரணையின் போது, சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024-ம் ஆண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு மழையை எதிர்பாராமல், பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்