மூன்று அம்சங்களும் புதிதாக சேர்க்கப்பட்டதனால் சிறுபான்மையின மக்கள் அச்சம் கொள்கிறார்கள். அதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். மாறுதல் வரும் என்ற நம்பிக்கையுடன் என்பிஆர் கணக்கெடுப்பை இன்னும் நாம் துவங்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்..
இன்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமைச் செயலகத்தில் என்பிஆர் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
2003-ல் திமுக மத்தியிலே ஆட்சியிலே இடம் பெற்றிருந்தபொழுது தான் முதன்முதலாக என்பிஆர் சட்டம் இயற்றப்பட்டது. அப்பொழுது இயற்றப்பட்ட சட்டத்தை 2010-ல் இந்தியா முழுவதும் என்பிஆர் சட்டத்தை முதன்முதலாக அமல்படுத்தினார்கள். அப்பொழுது மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இந்தக் கணக்கெடுப்பு அப்பொழுதே நடத்தப்பட்டது என்பதும் நீங்கள் அறிவீர்கள். அதற்கு முன்பு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் என்பிஆர் என்ற கணக்கெடுப்புப் பணி கிடையாது.
» சாலையில் கிடந்த ரூ.80 ஆயிரம் பணம்: போலீஸில் ஒப்படைத்த மதுரை வழக்கறிஞர்- குவியும் பாராட்டு
இப்பொழுது என்பிஆர் குறித்து பல்வேறு விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 2010-ல் இருந்த என்பிஆர் கணக்கெடுப்பைக் காட்டிலும், 2020-ல் எடுக்கப்படும் கணக்கெடுப்பில் மூன்று புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது, இது எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த புதிதாக சேர்க்கப்பட்ட மூன்று புதிய அம்சங்களில் தான் நம்முடைய இரத்த உறவாக இருக்கின்ற சிறுபான்மையின மக்கள், இசுலாமிய சகோதரர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் அவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பல்வேறு தடைகள் இருப்பதை கண்கூடாக நாம் பார்க்கின்றோம். இந்த அச்சத்தைப் போக்குகின்ற வகையில், இந்த மூன்று அம்சங்களில் திருத்தம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் மூலம் விளக்கம் கேட்டுள்ளார்கள்.
இந்த விளக்கத்திற்கான பதில் இதுவரை நமக்கு கிடைக்கப் பெறாத காரணத்தினால் என்பிஆர் கணக்கெடுப்புப் பணி தற்பொழுது வரை தொடங்கப்படவில்லை. பல மாநிலங்களில் என்பிஆர்-க்காக நோட்டிபிகேஷன் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான நோட்டிபிகேஷன் மட்டும் தான் வெளியிடப்பட்டிருக்கிறது.
மத்திய அரசால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசிற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இது எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றாகத் தெரியும். நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, ஜனாதிபதி அவர்களால் ஒப்புதல் வழங்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்வதற்கு மாநில சட்டமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
சட்ட வல்லுநர்களிடம் ஆய்வு செய்தாலும், அவர்களிடம் விளக்கம் கேட்டாலும் நமக்கு அது தெளிவாகப் புரியும். எதிர்க்கட்சித் தலைவர் என்பிஆர் கணக்கெடுப்பின் பொழுது ஆவணங்கள் வலியுறுத்தப்படுகிறது என்ற தவறான தகவலை நேற்று சட்டப்பேரவையில் கொடுத்துள்ளார், நாங்கள் மீண்டும் சொல்கிறோம், என்பிஆர் கணக்கெடுப்பிற்கு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
கணக்கெடுப்பின் போது தனி நபர் கொடுக்கக்கூடிய தகவல்களை கணக்கெடுப்பு அலுவலர்கள் அப்படியே பதிவு செய்து கொள்வார்கள். நிதி ஒதுக்கீடு செய்வது, திட்டங்களைச் செயல்படுத்துவது, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்பது, புதிய திட்டங்கள் போன்றவற்றிற்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பே அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பது போலவே இந்த முறையும் எடுக்கப்படும். இந்த என்பிஆர் கணக்கெடுப்பு ஒரு மதத்திற்கு மட்டும் சார்ந்ததல்ல, அனைத்து மதங்களுக்கும், அனைத்து சாதிகளுக்கும், அனைத்து பிரிவினர்களுக்கும் எடுக்கப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு அனைத்து மாநிலத்திலும் என்பிஆர் கணக்கெடுப்புப் படிவம் மத்திய அரசால் வழங்கப்படுகிறபொழுது, அது ஒரே மாதிரியான படிவமாகத் தான் இருக்கும். அதில், புதிதாக இணைக்கப்பட்ட தாய்மொழி, தந்தை, தாயார், துணைவியார் விவரம், பிறந்த இடம், பிறந்த தேதி விவரம் மற்றும் ஆதார் எண், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய 3 அம்சங்களும் இடம் பெற்றிருக்கும்.
2010 என்பிஆர்-ன்படி கணக்கெடுப்பினை நடத்த சட்டசபையில் அறிவியுங்கள் என்று எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள், அதிலே எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியானால் 2010-ன்படி கணக்கீடு செய்யலாம் என சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு, 2020-ன்படி கணக்கீடு செய்தால், இது மக்களை ஏமாற்றுகிற செயலாகும். நாங்கள் அந்தத் தவறை செய்யாமல் வெளிப்படையாக, உண்மையாக சிறுபான்மை மக்கள் விரும்புகின்ற என்பிஆர் கணக்கீடு செய்ய வேண்டும் என்றுதான் மத்திய அரசிடம் புதிதாக சேர்க்கப்பட்ட அந்த மூன்று அம்சங்களுக்கு விளக்கம் கேட்டுள்ளோம்.
30 ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகின்ற அதிமுக அரசு சிறுபான்மையினர்களுக்கு, இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு எப்படியெல்லாம் பாதுகாப்பு அரணாக இருந்தது என்பதை இசுலாமிய சகோதர, சகோதரிகள் அருள்கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். திறந்த மனதோடு என்றைக்கும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கின்றபடி என்பிஆர்-ஐ செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து வகையிலும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
2010-ல் திமுக ஆட்சியில் எப்படி கணக்கெடுத்து அனுப்பினார்களோ அதே போல்தான். இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது திமுக மத்தியிலே அங்கம் வகித்தபோது தான் இன்றைக்கு சிறுபான்மையின மக்களை வைத்து போராட்டத்தைத் தூண்டி, பல்வேறு சதித் திட்டங்களை நிறைவேற்ற திமுகவினர் நடவடிக்கைகளிலே இறங்கியிருக்கின்றார்கள். இதற்கு சிறுபான்மையின மக்கள் இரையாக வேண்டாம், துணை போக வேண்டாம்.
100 சதவீதம் அதிமுக அரசு சிறுபான்மையினர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். உண்மை ஒரு நாள் வெளிவரும், அப்போது, எல்லாம் இந்த உலகத்திற்குப் புரியும். நான் மீண்டும் சொல்கிறேன், இந்த என்பிஆர் கணக்கெடுப்பு ஒரு மதத்திற்கு மட்டும் சார்ந்தது அல்ல, அனைத்து மதத்திற்கும், சாதிகளுக்கும், பிரிவினர்களுக்கும் பொதுவானது, இந்த நிமிடம் வரை அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மக்கள் தொகை பதிவேட்டிற்கான அறிவிப்பு மட்டும்தான் தமிழ்நாட்டிலே வெளியிடப்பட்டிருக்கிறது.
கேள்வி: இந்த மூன்று அம்சங்கள் குறித்து சந்தேகம் தமிழக அரசிற்கு இருக்கிறது, அதனால்தானே விளக்கங்கள் கேட்டிருக்கிறீர்கள்? அந்த விளக்கம் வந்தால் மட்டும்தானே, சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படுவார்களா, பாதிக்கப்படமாட்டார்களா என்று நாம் தெரிந்து கொள்ள முடியும்?
பதில்: இது சந்தேகம் இல்லை. இந்த மூன்று அம்சங்களும் புதிதாக சேர்க்கப்பட்டதினாலே சிறுபான்மையின மக்கள் அச்சம் கொள்கிறார்கள்.
அவர்களுடைய உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு நாம் இந்த என்பிஆர் கணக்கெடுப்பை இன்னும் நாம் துவங்கவில்லை. ஆகவே, இதில் சந்தேகம் எல்லாம் இல்லை, தெளிவாக இருக்கிறது. பிறந்த தேதி என்ன? தாயார் யார்? தகப்பனார் யார்? ஒரு தவறான பிரச்சாரத்தினாலே, அதிலே அச்சம் கொள்கின்றார்கள்
அதாவது இந்துக்களோடு பண்டிகை குறிப்பாக, தீபாவளி போன்ற பண்டிகைகளெல்லாம் குறிப்பிடப்படும்பொழுது, பிற மதத்தினுடைய பண்டிகை என்கின்றபோது அது சார்ந்த விஷயங்கள் அதற்குள் வருகின்ற ஒரு சந்தேகம் வருகிறதே?
இது சம்பந்தமாக பல்வேறு விவாதங்கள் நடைபெறுகிறது. என்பிஆர் பட்டியலில்-லில் இந்த இசுலாமிய திருவிழாக்கள் இடம்பெறவில்லை என்று ஒரு விவாதம் இருக்கிறது. 2010-ல் என்னென்ன திருவிழாக்கள் அந்த என்பிஆர் பட்டியலில் இடம் பெற்றிருந்ததோ, அதே திருவிழாக்கள் தான் இப்போது 2020-லும் இடம் பெற்றிருக்கிறது. இசுலாமிய திருவிழாக்களை பொறுத்தவரையில், பிறையை நாம் அடிப்படையாக வைத்து தேதிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிற காரணத்தினால் 2010 என்பிஆர்-ல் இடம் பெறாதது, அப்போதே அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.
ஆனால், அந்த பட்டியலை வைத்துத் தான் கணக்கெடுப்பு எடுத்து மத்திய அரசிற்கு சமர்ப்பித்தார்கள். அப்பொழுது அவர்கள் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 2020-லும் அதே பட்டியல்தான் கடைபிடிக்கப்படுகிறது.
அப்பொழுது குடியுரிமை திருத்தச் சட்டம் கிடையாது, இப்பொழுது என்பிஆர் எடுக்கப்பட்டால் அது குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வரும் என்பது தான் பிரச்சினை.
இந்தத் குடியுரிமை திருத்தச் சட்டம் வந்ததினால் இந்த ஐயம் ஏற்படுகிறது.
2003-ல் இந்தத் திருத்தத்தின் அடிப்படையில் தான் என்பிஆர் கொண்டு வரப்பட்டது. இப்பொழுது செய்த திருத்தத்தினால் என்பிஆர் கொண்டு வரப்படவில்லை. 2003-ல் பா.ஜ.க. ஆட்சியின்போதும், 2010-ல் காங்கிரஸ் ஆட்சியின்போதும் திமுக அங்கம் வகித்தபொழுது அந்தத் திருத்தத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இப்பொழுது அதே பட்டியல் தான் கடைபிடிக்கப்படுகிறது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அது அந்தச் சட்டத்தைக் கட்டுப்படுத்தாது என்கிறீர்கள். ஆனால், பீகார், தெலுங்கானா, ஆந்திராவில் தீர்மானம் நிறைவேற்றும்பொழுது தமிழ்நாட்டில் ஏன் முடியாது? அது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதா? அல்லது மாநில அரசிற்கு அதிகாரம் இல்லையா?
தேசிய மக்கள் தொகை பதிவேடு செயல்படுத்துவது குறித்து சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான், பீகார், கர்நாடகா, கோவா, உத்திரப் பிரதேசம், உத்திரகாண்ட், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களும், புதுச்சேரி தவிர அனைத்து யூனியன் பிரதேசங்களும் மற்ற வடகிழக்கு மாநிலங்களும் அறிவிக்கை செய்துள்ளனர். தீர்மானம் இயற்றிய சில மாநிலங்களும் நோட்டிபிகேஷன் கொடுத்துள்ளார்கள்.
இந்தச் சட்டத்திற்கு தீர்மானம் நிறைவேற்றினால் அமைச்சர்கள் சிறைக்குச் சென்று விடுவோம் என்று அச்சம் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்கிறாரே?
இது மிகவும் சென்சிடிவான பிரச்சினை இந்தியா முழுவதும் ஒரு முழுமையான விழிப்புணர்வை கொண்டு செல்வதற்கு அரசு முயற்சிக்கிறது. இன்னொருபுறம் எதிர்க்கட்சிகள் இதனை வைத்து முழுமையாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலே குழந்தைகளிலிருந்து, பெரியோர்கள் வரை எல்லோரும் வீதிக்கு வந்து, புரிதலுக்காக, பெரிய தேடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் நான் அரசியல் வசனம் பேசுவதற்குத் தயாராக இல்லை. ஸ்டாலினை விடவும் அரசியல் வசனம் பேசுவோம், இது சென்சிடிவான பிரச்சினை. சிறுபான்மையின மக்கள் புதிதாக சேர்க்கப்பட்ட மூன்று அம்சங்களினால்தான் அச்சம் கொள்கிறார்கள். மத்திய அரசிடம் நாங்கள் விளக்கம் கேட்டுள்ளோம். அரசு, முதல்வர் பாதுகாவலராக இருந்து பாதுகாப்பார்கள், எனவே, சிறுபான்மையின மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
இசுலாமிய ஜமாத்தினர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றார்களே?
அவர்கள் சொல்லவில்லை, நேற்று சட்டசபை முடிந்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர் நேரடியாக போராட்டம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறுவதைப் போல, நீங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தராதீர்கள் என்று பகிரங்கமாக, போராட்டத்தைத் தூண்டுகிற நடவடிக்கையில் ஈடுபட்டார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்று சொன்னால், திட்டங்களுக்கான நிதியை எப்படி பெறுவது? திட்டங்களுக்கான அளவீட்டை எப்படி மதிப்பீடு செய்வது? எதிர்காலத் திட்டங்களை எப்படி வகுப்பது? மக்கள் தொகை கணக்கீடு இல்லையென்று சொன்னால், அரசு நிர்வாகத்தை எப்படி செயல்படுத்த முடியும்? ஆகவே, இது அரசுக்கு அடிப்படையான, அத்தியாவசியத் தேவையான ஒரு புள்ளிவிவரம்.
நம் தமிழ்நாட்டிலே இத்தனை கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, போக்குவரத்து வசதி போன்றவை செய்து தர வேண்டும். அவர்களுக்கு எதிர்காலத்தில் தேவையான வளர்ச்சித் திட்டங்களை செய்து தரவேண்டும். அப்போது மக்கள் தொகையின் புள்ளிவிவரம் இருந்தால் தானே செய்து தரமுடியும்.
34 அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் இருந்தால் தான் திட்டம் தீட்ட முடியும். இதில் முழுக்க, முழுக்க அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு சிறுபான்மையினரை பலிகடாவாக ஆக்குவதற்காக அவர்கள் திட்டமிட்டு சதிச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
என்பிஆர் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறீர்கள், அப்படி விளக்கம் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் என்பிஆர் கணக்கெடுப்பை தொடங்காமல் இருப்பீர்களா? அறிவிப்பு வெளியிடாமல் இருப்பீர்களா?
பதில்: இந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான கணக்கெடுப்பு மற்றும் புதுப்பிக்கும் பணி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியின்போதே நடத்திட வேண்டும் என்று நீங்கள் சொல்வதைப் போல் தான் உத்தரவு என்பது இருக்கிறது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பும் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் அட்டவணை House listing and Housing census schedule விவரங்கள் நாடு முழுவதும் 1.4.2020-லிருந்து 30.9.2020 வரையுள்ள 6 மாத காலகட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் வசதிக்கேற்ப ஏதாவது 45 நாட்கள் தொடர்ந்து நடத்திட வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நாம் அந்த கணக்கெடுப்புப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதன் காரணமாக அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு ஜுன் 16 முதல் ஜுலை 30, 2020 வரை 45 நாட்கள் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உகந்த நாளாக முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பின்போது, குடும்ப உறுப்பினர்களின் விவரத்தை ஒன்றாகச் சேர்த்து வீடு வாரியான வீட்டின் வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்படும்.
2010-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் விவரங்களும் தற்பொழுது சேகரிக்கப்படவுள்ள விவரங்களும் ஒன்று தான். இதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. நான் ஏற்கனவே தெரிவித்ததைப்போல, இதுவரை என்பிஆர் நோட்டிபிகேஷன் கொடுக்கவில்லை, மத்திய அரசிடமிருந்து தெளிவுபடுத்துதல் வந்த பிறகு தான் நாம் அதை எடுப்போம். அதுவரை என்பிஆர் கணக்கெடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
என்பிஆர் கணக்கெடுப்பின் போது ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
இது அடிப்படைக் கடமை. ஒரு மாநிலத்தின் அடிப்படையான புள்ளிவிவரம்.
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago