நாளை திருநெல்வேலி எழுச்சி தினம்: பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் வரலாறு இடம்பெறுமா?

By அ.அருள்தாசன்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி எழுச்சி தினம் நாளை (மார்ச் 13) கொண்டாடப்படுகிறது.

இந்த நாளின் முக்கியத்துவம் குறித்தும் இதன் வரலாற்றுப் பின்னணி குறித்தும் இளைய தலைமுறையினர் மனதில் பதிய வைக்கும் வகையில் அதை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1908-ம் ஆண்டில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் உள்ளிட்டோர் பங்கேற்ற சுதேசி பிரசார இயக்க கூட்டங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடியில் நடத்தப்பட்டன.

இந்த கூட்டங்களில் பேசிய தலைவர்கள், அன்னிய நாட்டுப் பொருள்களை புறக்கணிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனால் சுதேசி உணர்வு மக்களிடம் தூண்டப்பட்டது. இந்நிலையில் விபின் சந்திரபால் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியை சுயராஜ்ய நாளாக சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் தற்போது தைப்பூச மண்டபம் அமைந்துள்ள பகுதியில் தடையை மீறி இந்த விடுதலை விழா அடுத்த நாள் (மார்ச் 9-ம் தேதி) நடந்தது. அதில் வ.உ.சி.,சுப்ரமணிய சிவா,பத்மநாப அய்யங்கார் எழுச்சி உரையாற்றினர். அவர்கள் மார்ச் 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக திருநெல்வேலியில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

அடுத்த நாள் (மார்ச் 13) அடித்தட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதில் பொதுச்சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. நிலமையை கட்டுக்குள் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையாண்டனர். திருநெல்வேலியில் சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் மக்கள் கிளர்ந்தெழுந்த இச் சம்பவம் வரலாற்றில் திருநெல்வேலி எழுச்சி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்ற இந்த கிளர்ச்சியை குறித்து இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு ஆண்டிலும் மறக்கப்பட்டு வருகிறது.

தைப்பூச மண்டபத்தின் மேற்கூரையில் நின்றுதான் 112 ஆண்டுகளுக்குமுன் வ.உ.சியும், சுப்ரமணிய சிவாவும், பத்மநாப ஐயங்காரும் முழக்கமிட்டிருக்கிறார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை இளைய தலைமுறைக்கு நினைவூட்டி அவர்களிடையே தேசபக்தியையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இந்த வரலாறு சேர்க்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இது குறித்து எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் கூறியதாவது:

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில், தேசமே வாய்ப்பூட்டு சட்டத்தால் துயில் கொண்டு இருக்கையில், வெள்ளையர்களுக்கு எதிராக வங்கத்திலும், தேசத்தின் கடைக்கோடியில் இருந்த தமிழகத்திலும் உள்ள இளைஞர்கள் வெகுண்டெழுந்தனர்.

அதுவே திருநெல்வேலி எழுச்சி நாள். அப்போது நடைபெற்ற கலவரத்திற்கு காரணம் என வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரே என்று குற்றம் சுமத்தப் பட்டது.வழக்கு நடந்தது. வழக்கில் சாட்சிகள் நூற்றுக்கும் மேல் இருந்தனர். அவர்களில் பாரதியும் ஒருவர். இறுதியில் வ.உ.சி.க்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சிவாவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது.

மார்ச் 13-கலவரம் குறித்து, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதை "திருநெல்வேலிக் கலகம்" என்று தான் அவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு நெல்லை மாநகராட்சியில் இதை திருநெல்வேலி எழுச்சி நாள் என்று ஒரு தீர்மானம் மூலம் திருத்தியிருந்தது.

திருநெல்வேலி கலகத்துக்கு பின்னரே தேசமெங்கும் சுதந்திரப் போராட்ட உணர்வு வீறு கொண்டு எழுந்தது. இந்த தினத்தின் முக்கியத்துவத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் பேச வேண்டும். பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் திருநெல்வேலி எழுச்சி தின வரலாற்றை இடம்பெற செய்ய வேண்டும்.

சாதியத்தால் பிரிந்துகிடக்கும் இச் சமுதாயத்தில் சாதிமதம் பாராமல் நடத்தப்பட்ட போராட்டத்தை குறித்து வருங்கால தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்