கோவிட்-19 வைரஸ் எச்சரிக்கை: 15 இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் நிறுத்திவைப்பு

By ரெ.ஜாய்சன்

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 15 இலங்கை மீனவர்களையும் கோவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக கரைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் 15 மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் நடுக்கடலில் நிறுத்தி வைத்துள்ளனர். அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய கடல் பகுதியில் அந்நியர்கள் ஊடுறுவலை தடுக்கும் வகையில் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கோவாவில் இருந்து மாலத்தீவு வரையிலான கடல் பகுதியில் கொச்சி கடலோர காவல்படையினர் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கன்னியாகுமரியில் இருந்து 70 கடல்மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் இலங்கையைச் சேர்ந்த மூன்று மீன்பிடிப் படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்ததைக்கண்டனர்.

இதைத் தொடர்ந்து கடலோர காவல்படையினர் அங்கு விரைந்து சென்று அத்துமீறி நுழைந்து, 3 இலங்கை படகுகளையும் மடக்கிப் பிடித்தனர். சுகந்தி, செரல், நெட்மி என்ற பெயர்களைக் கொண்ட அந்த 3 படகுகளிலும் 15 இலங்கை மீனவர்கள் இருந்தனர். மூன்று படகுகளையும் சிறைபிடித்த கடலோர காவல் படையினர், அவற்றில் இருந்த 15 மீனவர்களையும் கைது செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி கடலோர காவல்படையைச் சேர்ந்த அபிராஜ் என்ற ரோந்து கப்பலில் கடலோர காவல்படை வீரர்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் மற்றும் 3 படகுகளை கொச்சி கடலோர காவல்படையினர் ஒப்படைத்தனர்.

இதையடுத்து 3 படகுகளையும், 15 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் தூத்துக்குடி நோக்கி அழைத்து வந்தனர். இலங்கை படகுகளையும், மீனவர்களையும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்துவர கடலோர காவல் படையினர் அனுமதி கோரினர்.

ஆனால், கோவிட்-19 வைரஸ் எச்சரிக்கை காரணமாக வெளிநாட்டினர் மற்றும் படகுகளை துறைமுகத்துக்குள் அனுமதிக்க முடியாது என துறைமுக நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் அவர்களை கரைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக இலங்கை படகுகள் மற்றும் மீனவர்களை தூத்துக்குடியில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் நடுக்கடலிலேயே கடலோர காவல் படையினர் நிறுத்தி வைத்தனர். இன்று மாலை வரை மீனவர்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மீனவர்களை என்ன செய்வது என்பது குறித்து மத்திய அரசின் உத்தரவுக்காக கடலோர காவல் படையினர் காத்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 15 பேரும் மீனவர்கள் தான் என்பதற்கான முறையான ஆவணங்கள் அவர்களிடம் உள்ளன. எனவே, அவர்கள் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் இலங்கை கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் 3 படகுகளும், 15 மீனவர்களும் ஒப்படைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்