திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது இருவேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் காலி குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனுக்களை அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த திருநெல்வேலி அருகே மேலஇலந்தைகுளம் பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனு:
மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்த மேலஇலந்தைகுளம் பகுதியை தென்காசி மாவட்டம் பிரிந்தபின், மானூர் ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்துள்ளனர். இங்கு யாதவர் குடியிருப்பு பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. சுத்தமல்லி அணைக்கட்டிலிருந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்குநாமே திட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து பணம் வசூலிக்கப்பட்டும் மேற்கொண்டு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அம்பாசமுத்திரம் தாலுகா பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் இடைகால் ஊராட்சிக்கு உட்பட்ட கலிதீர்த்தான்பட்டி கிராமத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் எஸ். நாகக்கனி தலைமையில் அளித்த மனு:
கலிதீர்த்தான்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை. குடிநீர் இணைப்பு வீடுகளுக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுகுடிநீர் குழாய் வசதிகளும் போதுமான அளவுக்கு இல்லை. தாழ்வான இடத்திலுள்ள பொது குடிநீர் குழாயில் மட்டுமே தண்ணீர் வருகிறது. அங்கு அப்பகுதி மக்கள் கூட்டமாக வந்து குடங்களுடன் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். இதுபோல் இங்குள்ள ரேஷன்கடை தெருவில் சாலை சேதமடைந்து பலமாதங்களாக சீரமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பகுதியில் குடிநீர் மற்றும் சாலை வசதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி பேட்டை சத்யாநகரிலுள்ள தொழுநோயாளர் காலனி தலைவர் எஸ்.வி. ஸ்டீபன்ராஜ் உள்ளிட்டோர் அளித்த மனு:
பேட்டை சத்யாநகரில் 30 ஆண்டுகளுக்குமேலாக தொழுநோயாளர் காலனியில் வசித்து வருகிறோம். இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கான சுடுகாடு நரசிங்கநல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இப்பகுதியில் வீடுகள் கட்டித்தருவதற்காக வருவாய்த்துறையினரால் அளவீடு செய்யப்பட்டு சர்வே கல் நடப்பட்டிருக்கிறது. இங்கு வீடுகள் கட்டித்தருவதற்கு தடைவிதித்து, கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்திவந்த சுடுகாட்டை காப்பாற்றி தரவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி புதுக்குளம் ஊராட்சி ரெட்டியார்பட்டி, மூலைக்கரைப்பட்டி சாலையிலுள்ள ஷ்ரினிவாசா அவென்யூ குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த மனு:
ரெட்டியார்பட்டி மூலைக்கரைப்பட்டி சாலையிலுள்ள ஷ்ரினிவாசா அவென்யூ பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. இங்கு தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரமுடியவில்லை. விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமுள்ளதால் மக்கள் அச்சப்படுகிறார்கள்.
மேலும் வீடுகளில் சேரும் குப்பைகளையும் அகற்றவில்லை என்பதால் கொசுத்தொல்லையும் அதிகரித்திருக்கிறது. இந்த அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பலமுறை கோரிக்கைகள் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து இதேநிலை நீடித்தால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க இப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மா. மாரியப்பபாண்டியன் உள்ளிட்டோர் அளித்த மனு:
திருநெல்வேலி சந்திப்பு சாலைக்குமார சுவாமி திருக்கோயில் எதிரே அமைந்துள்ள, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான பொதுநிகழ்ச்சிக்கான சமுதாய நலக்கூட கட்டிடம் தாட்கோ கட்டுப்பாட்டில் சில காலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
அப்போது பட்டியலினத்தை சேர்ந்த ஏழை பெண்களின் திருமணத்துக்கு குறைந்த வாடகையில் இங்கு நடத்தப்பட்டு வந்தது. அம்மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருந்தது. பின்னர் இந்த கட்டிடம் வேறுசில பயன்பாடுகளுக்கு சென்றதால் சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுவது தடைபட்டது. தற்போது அச்சமுதாய நலக்கூடம் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்துள்ளது. சுற்றிலும் முள்செடிகள், புதர்கள் மண்டியிட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில பாழடைந்துள்ள இந்த கட்டிடத்தை சீர்படுத்தி ஏழை பட்டியின மக்களின் சுபநிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago