விடாமுயற்சியும், கடின உழைப்பும் வெற்றியைத் தேடித் தரும். சாதிக்க வேண்டுமென்ற வெறி இருந்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என்று தமிழக காவல் துறை இயக்குநர் (ரயில்வே மற்றும் தீயணைப்புத் துறை) சி.சைலேந்திர பாபு கூறினார்.‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக காவல் துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு பேசியதாவது:
மாணவர்களின் ஐஏஎஸ் கனவை நனவாக்க உதவும் `இந்து தமிழ் திசை' நாளிதழ் மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு பாராட்டுகள். தற்போது யுபிஎஸ்சி தேர்வில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே, வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரிடமும் சாதிக்க வேண்டிய வெறி இருக்க வேண்டும். அதனோடு, விடாமுயற்சியும், கடின உழைப்பும் முக்கியம். அரசுத் துறையில் சேர விரும்புவோருக்கு, நாட்டுப் பற்றும், சேவை மனப்பான்மையும் மிகவும் அவசியம். அடிப்படை வசதிகள்கூட இல்லாத லட்சக்கணக் கானோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த அரசு அதிகாரிகளால்தான் இயலும்.
யுபிஎஸ்சி முதல்கட்டத் தேர்வு, பொதுப் பாடங்களை அடிப்படையாக கொண்டது. எனவே, நடப்பு நிகழ்வுகள், வரலாறு, சுதந்திரப் போராட்டம், உலக புவி அமைப்பியல், இந்திய அரசியலமைப்புச் சட்டம், பொருளாதாரம், சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல், பொது அறிவியல் குறித்தெல்லாம் நிறைய தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதற்கு பாடப் புத்தகங்களுடன், நாளிதழ் வாசிப்பு மிக உதவியாக இருக்கும். நம் ஒவ்வொருவரிடமும் நிறைய ஆற்றல் உள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் டி.பிருந்தா, செயலர் கண்ணையன், சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர்.தீனதயாளன், `இந்து தமிழ் திசை' பொது மேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். `இந்து தமிழ் திசை' முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாடத் திட்ட கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.
சிறப்பு சந்தா சலுகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், ‘இந்து தமிழ் இயர்புக் 2020' (800 பக்கங்கள், விலை ரூ. 250), ‘கேள்வி நேரம்' ஆகிய புத்தகங்கள் 10 சதவீத சிறப்புச் சலுகை விலையிலும் வழங்கப்பட்டன. அடுத்த நிகழ்ச்சி தஞ்சாவூரில் மார்ச் 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
போட்டித் தேர்வுகளில் வென்று சாதித்த மாணவிகள்!
இந்திய வனப் பணித் தேர்வில் (ஐ.எஃப்.எஸ்.) தேர்ச்சி பெற்றுள்ள கீதாஞ்சலி, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சுவேதா, குரூப்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பிஎஸ்ஜி கல்லூரி மாணவி சுபாஷினி ஆகியோர் பேசும்போது, "சிறு வயது முதலே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது.
குறிப்பாக, அரசுப் பணியில் சேர்ந்து, தேசத்துக்கும், சமூகத்துக்கும் சேவையாற்ற வேண்டுமென்ற விருப்பம் கொண்டிருந்தோம். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, திட்டமிட்ட உழைப்பு ஆகியவை வெற்றியைத் தேடித் தந்தன. உயர்ந்த இலக்கை கனவாகக் கொண்டு, அதை நோக்கிப் பயணித்தால் வெற்றி நிச்சயம்" என்றனர்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு:
புத்தக வாசிப்பு வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்தது. சில தேசங்களின் வரலாற்றையே புத்தகங்கள் மாற்றியுள்ளன. எனவே, பாடப் புத்தகங்களைத் தாண்டி, நிறைய படிக்க வேண்டும். புத்தகங்கள் நமக்கு நல்ல நண்பராய், வழிகாட்டியாய் அமையும்.
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் மூத்த பயிற்சியாளர் எஸ்.சந்துரு:
2013-14-ம் ஆண்டில் மத்திய குடிமைப் பணி தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,400-ஆக இருந்தது. தற்போது காலியிடங்கள் 800 முதல் 900-ஆக உள்ளன. குடிமைப் பணித் தேர்வுக்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், இவர்களில் 5 லட்சம் பேர்தான் முதல்நிலைத் தேர்வு எழுதுகின்றனர். ஆயிரம் காலி இடங்கள் இருந்தால் 180 பேருக்கு ஐஏஎஸ் பணியும், 25 முதல் 40 பேருக்கு ஐ.எஃப்.எஸ். பணியும், 150 பேருக்கு ஐபிஎஸ் பணியும் ஒதுக்கப்படும். விருப்பப் பாடத்தை மாணவர்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
அதிகாரம் மிக்கதாக வேண்டும் தமிழ்!
‘இந்து தமிழ் திசை’ நடுப் பக்க ஆசிரியர் சமஸ்: நாம் நம் மொழியை நேசிக்கிறோமா; பெருமிதமாகக் கருதுகிறோமா? தமிழர் ஒவ்வொருவரும் ‘ஆம்’ என்று உரக்கச் சொல்கிறோம். ஆனால், உள்ளூரிலேயே ஒரு நட்சத்திர விடுதிக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
அங்குள்ள வரவேற்பாளரிடம் தமிழில் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறோமா அல்லது ஆங்கிலத்திலா? எது தமிழைக் கவுரவக் குறைச்சலாக நம்மைக் கருத வைக்கிறது? ஏன் நமக்கு இந்தத் தாழ்வு மனப்பான்மை? உண்மை என்னவென்றால் நம் மொழிக்கு அதிகாரம் இல்லை.
நமக்குத் தொலைநோக்குப் பார்வையும், கற்பனையும் இல்லை. இன்றைக்கு உலகிலேயே கல்விக்கான முன்னுதாரணமாகச் சொல்லப்படும் பின்லாந்தின் மக்கள்தொகை வெறும் 55 லட்சம். தொடக்கக் கல்வி முதல் மருத்துவக் கல்வி வரை ஃபின்னிஷ் மொழியில் படிக்கும் சூழல் அங்கே இருக்கிறது.
எட்டு கோடி பேர் பேசும் தமிழ் அந்த நிலையில் இல்லை என்றால், நம்முடைய மொழி அபிமானம் போலி என்பதே பொருள். அதிகாரம் மிக்கதாக தமிழ் மாற வேண்டும் என்றால், நமக்கு முதலில் விசாலமான கற்பனை வேண்டும்; அதற்கு ஆழமான வாசிப்பு வேண்டும்; நிறைய பயணிக்க வேண்டும்.
‘ஆளப் பிறந்தோம்’ என்பது நம்மை நாமே ஆண்டுகொள்வதையே குறிக்கிறது. தன்னை ஆளத் தெரிந்த ஒருவரே உலகுக்குச் சேவையாற்றுபவராக உருவெடுக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago