இனமான இமயம்; போய்வாருங்கள் பெரியப்பா’’ - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

திமுக பொதுச்செயலாளர் மறைவு குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
‘‘யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிடம் யார் தேறுதல் பெறுவது?

கண்ணீரும் புன்னகையும் மாறி மாறிப் பயணிக்கும் வாழ்க்கையிலும், வெற்றியும் தோல்வியும் அடுத்தடுத்து ஏற்படும்
இயக்கத்திலும், எந்தச் சூழலையும் சமமான மனநிலையுடன் அணுகும் அதிசயிக்கத்தக்க ஆற்றல் வாய்ந்த நம் கழகத்தின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள், 98 வயதில் தன் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்; நம்மையெல்லாம் கண்ணீரில் மிதக்கவிட்டுச் சென்றிருக்கிறார்.

நிறை வாழ்வு கண்டவர்; கண்டு இனத்திற்கும் மொழிக்கும் மிகுபயன் விளைத்தவர் நம் பேராசிரியர் பெருந்தகை. முதுமையினால்
ஏற்படும் உடல்நலக்குறைவினால் அவர் முடிவெய்தினார் என்றாலும், இன்னும் சில ஆண்டுகள் அவர் இருந்திருக்கக்கூடாதா, நூற்றாண்டு வயது கண்ட திராவிட இயக்கத்தின் தலைவர்களில் நூறாண்டு கண்ட ஒரே தலைவர் என்ற பெருமையையும், வாழ்த்துகளையும் நம் அனைவருக்கும் வழங்கி, கழகம் மீண்டும்
ஆட்சியில் அமரும் மாட்சிமை கண்டு பெருமிதம் கொண்டு, அதனை வழிநடத்தும் முறைகளை நமக்குக் கற்றுத்தரும் அந்தத் தத்துவப் பேராசிரியரை, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இழக்கச் சம்மதிப்போமா?

19-12-1922ஆம் ஆண்டில் பிறந்து, 7-3-2020ஆம் ஆண்டில் மறைவெய்திய பேராசிரியப் பெருந்தகையின் கொள்கை வழிப்
பயணம் நெடுகிலும், இலட்சியப் பற்று - செயல்பாட்டு உறுதி - தலைமைக்குத் துணை நிற்கும் கட்டுப்பாடு - தகைமைசால் பெருமக்களும் போற்றும் கண்ணியம் இவற்றிலிருந்து இம்மியும் விலகாமல் கறுப்பு - சிவப்பு நிறத்தை உறவாக - உதிரமாக - உயிராகப் போற்றி வாழ்ந்தவர். அந்த இருவண்ணக்
கொடியின் நிழலில் வளர்ந்தவர்களான நாம், அந்தக் கொடி காட்டும் கொள்கையை எந்நாளும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதைத் தன் வாழ்நாளெல்லாம் வலியுறுத்தியவர் பேராசிரியர் அவர்கள்.

தந்தை பெரியாரிடம் அன்புடன் பழகி, இலட்சியங்களைப் பயின்றவர். பேரறிஞர் அண்ணாவிடம் தம்பியாக நெருங்கி இயக்கம்
வளர்த்தவர். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் தோழராக - மூத்த சகோதரராக, தோள் கொடுத்து சோதனைகளிலும் நெருக்கடிகளிலும் கழகத்தை மீட்பதில் உற்றதுணையாக நின்றவர். அண்ணா அறிவாலயத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் வரும் நாளெல்லாம், பேராசிரியர் எங்கே என்று கேட்டு, அவர் வருகையை
உறுதி செய்து, அவருடன் நெடுநேரம் ஆலோசனைகளை மேற்கொண்டதை நேரில் கண்ட என் மனது எப்படி மறக்கும்?

தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றிய நேரத்திலும், பேராசிரியர் அவர்கள் சந்திக்க வந்துவிட்டால், புதிய
உற்சாகம் பெற்று, இளமைக்கால நினைவுகளுடன் இயக்கம் பற்றிய சிந்தனைகளில் அவர்கள் இருவரும் மூழ்கியதையும் நேரில் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். தன்னைவிட வயதில் மூத்த - தன் வயதுக்கு இணையான தலைவர்களுடன் மட்டுமல்ல, தன்னைவிட வயதில் மிகவும் இளையவர்களிடமும் அதே அன்பை
அள்ளி வழங்கியவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள்.

அந்த அன்பை அவரிடமிருந்து அதிகமாகப் பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தன் பெயரில் உள்ள அன்பை என்னிடம்
கொடையாக வார்த்த இனமானப் பேராசிரியர் அன்பழகனார் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றைத்தான்.

அது, கழகம் எனும் இலட்சியக் கோட்டையைக் கட்டிக் காத்திடும் கடின உழைப்பு - வலிமை மிகு உழைப்பு.

1966ஆம் ஆண்டு கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பினை முடி திருத்தும் நிலையத்தில் அன்றைய மாணவனான நானும்,
என் வயதையுடைய கழக நண்பர்களும் சேர்ந்து உருவாக்கியபோது, அந்த அமைப்பைத் தொடங்கி வைத்து வாழ்த்தியவர் பேராசிரியர் அவர்கள்தான். 1980-ல் கழகத்தின் துணை அமைப்பாக இளைஞரணி உருவாக்கப்பட்டபிறகு, அதன் செயலாளராக நான் நியமிக்கப்பட்டபோதும் வாழ்த்தியவர் பேராசிரியர். ஓராண்டுகால
“மிசா” சிறைவாசம் முடிந்து கழக முன்னோடிகளுடன் நானும் விடுதலை பெற்றபோது, தலைவர் கலைஞர் அவர்களிடமும் இனமானப் பேராசிரியரிடமும் வாழ்த்துப் பெற்றோம். இளமைப் பருவத்தில் சிறைவாசத்தை உறுதியுடன் எதிர்கொண்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கழகத்திற்குரிய “அன்பகம்” கட்டடத்தைப் பெறுவதில் இளைஞரணி, சென்னை மாவட்டக் கழகம், தொழிலாளர் முன்னேற்றச்
சங்கம் (தொ.மு.ச) ஆகியவற்றுக்கிடையே ஆரோக்கியமான போட்டி ஒன்றை வைத்தவரும் பேராசிரியர் அவர்கள்தான். எந்த அமைப்பு, 10 லட்ச ரூபாய் நிதி திரட்டித் தருகிறதோ அந்த அமைப்புக்கே அன்பகம் எனப் பேராசிரியர் வைத்த போட்டியினை ஏற்றுக்கொண்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து,
கழகக் கொடிகளை ஏற்றியும், படிப்பகங்களைத் திறந்து வைத்தும், பலவித விழாக்களை நடத்தியும், நிதி திரட்டி, 11 லட்ச ரூபாயாகப் பேராசிரியரிடம் வழங்கி, இளைஞரணிக்கு அன்பகம் உரிமையானது.

தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தின் பொருளாளராக இருந்தபோது, 1967 தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் 10 லட்ச
ரூபாய் தேர்தல் நிதி திரட்டப் பணித்து, தலைவர் அவர்கள் 11 லட்ச ரூபாயாக வழங்கியதை, ‘அன்பகம்’ நிகழ்வில் பேராசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டி, “கழகத்தை வழிநடத்தும் தலைமைக்குரிய ஆற்றல் தம்பி ஸ்டாலினிடம் இருக்கிறது” என்று மனமார வாழ்த்தினார். அவற்றை வெறும் வார்த்தைகளாக
நான் கருதவில்லை. பேராசிரியர் வைத்த தேர்வில் தேறிய மாணவன் பெற்ற சான்றிதழாகக் கருதினேன்.

கழகத்திற்காகப் பணியாற்றும் ஒவ்வொரு நாளும் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுக்கு முன்பாக பேராசிரியப்
பெருந்தகை அவர்களின் வாழ்த்துகள் என்னை ஊக்கப்படுத்தும். 2003ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த மண்டல மாநாட்டிற்குத் தலைமையேற்கும் வாய்ப்பு எனக்கு அமைந்த போதும், பேராசிரியர் அவர்கள் தன்னுடைய சிறப்புரையில் என்னை வாழ்த்தி, இன்னும் பல பொறுப்புகளைப் பெற்றுச் செயலாற்றிட வேண்டும் என வாழ்த்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் இலட்சியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக ஒவ்வொரு பொறுப்பினைப் பெற்றபோதும், பேராசிரியரின் வாழ்த்துகள் எனக்கு ஊக்கமும் உரமுமாக அமைந்தன. சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக, ஒவ்வொன்றாகப் பொறுப்புகளை சுமந்த காலத்திலும் பேராசிரியரின் ஆலோசனைகளைக் கேட்டு, செயலாற்றி, அவரது அன்பான வாழ்த்துகளைப் பெறத் தவறியதில்லை.

கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு உங்களில் ஒருவனான நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் பேராசிரியரின் வாழ்த்துகள், தலைவர் கலைஞர் இல்லாத சூழலில் அந்தக் குறை தெரியாதபடி செய்தன. தலைவர் கலைஞர் அவர்களுக்கு உடன்பிறந்த அண்ணன் இல்லை. ஆனால், அவரது ‘உடன்பிறப்பான’ அண்ணனாக பேராசிரியர் இருந்தார். தலைவர் கலைஞரின் மகனான எனக்கு பெரியப்பா இல்லை. பேராசிரியர்தான் பெரியப்பா என்ற நிலையில் பெரும் பாசத்துடன் அரவணைத்து, ஆலோசனைகள் - அறிவுரைகள் வழங்கி, வழிநடத்தினார்.

அப்பாவையும் பெரியப்பாவையும் இரண்டாண்டு இடைவெளிக்குள்ளாக அடுத்தடுத்து இழந்த நிலையில், இயற்கை பறித்துக்கொண்ட
சதியால், கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட வகையிலும் கலங்கி நிற்கிறேன்.

உங்களில் ஒருவனான நான் மட்டுமல்ல, ஒரு கோடிக்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவருமே உயிரும் உடலும் கலங்கித்தான் நிற்கிறோம்.

யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிடம் யார் தேறுதல் பெறுவது? என்று தெரியாத நிலையில், நமக்கு நாமே ஆறுதலாகவும், நம்மை நாமே தேற்றிக்கொண்டும், இனமானப் பேராசிரியர் வாழ் நாளெல்லாம் எண்ணிய வழியில், இலட்சியச் சுடரை ஏந்திச் செல்வதுதான், நம் முன் உள்ள முக்கியக் கடமையாகும்.

துயரம் மேலோங்கும் இந்த நேரத்தில், கழகத்தினர் அனைவரும் தங்கள் கண்ணீரால் பேராசிரியப் பெருந்தகை அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, இறுதி ஊர்வலத்தில் ஆயிரமாயிரம் கழகத்தினரின் பங்கேற்று, கண்ணீர் கலந்த அன்பு செலுத்தியது, பேராசிரியர் மீது இந்த இயக்கத்தினர் வைத்துள்ள மரியாதையையும், அவரைப்
போலவே இலட்சியப் பாதையில் பயணிக்க வேண்டிய பொறுப்பையும் சுட்டிக் காட்டியது.

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் பண்புடன் பழகிய பேராசிரியப் பெருந்தகை அவர்களுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக முதலமைச்சர், நேரில் வந்து மரியாதை செலுத்திய துணை முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சித் தலைவர்கள் - நிர்வாகிகள், ஓய்வுப் பெற்ற உயர் அதிகாரிகள், மற்ற கட்சிகளின் தலைமைப் பொறுப்பில்
உள்ளவர்கள், தமிழறிஞர்கள், பொதுநல ஈடுபாடு கொண்டோர், கலையுலகத்தினர், வணிகத்துறையினர், பலதுறைகளையும் சார்ந்த சான்றோர்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் குடும்பத்தின் தலைவன் என்ற முறையில், கண்ணீர் கலந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

இனமானப் பேராசிரியப் பெருந்தகையே.. இதயத்தில் வீற்றிருக்கும் பெரியப்பா அவர்களே..

இந்த இயக்கத்தின் தலைவர் - எனது தந்தையை நீண்ட காலம் பிரிந்திருக்க மனமின்றி, நீங்களும் அவர் சென்ற இடத்திற்கே எம்மை தவிக்க விட்டுச் சென்றுவிட்டீர்கள்..

போய்வாருங்கள் பெரியப்பா...

திராவிடச் சிகரமாக, இனமான இமயமாக உயர்ந்து நிற்கும் உங்கள் புகழினைக் கட்டிக்காத்திடும் வகையில், நீங்கள் வழங்கிய ஆலோசனைகளோடும், தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளோடும் இலட்சியப் பாதையில், எங்கள் பயணம் தொடரும்.

தமிழ் இனம் - மொழி - பண்பாடு காக்கும் திராவிட இயக்கத்தின் சளைக்காத நெடும்பயணத்தை நீங்கள் தந்த சுடரினை ஏந்தி, அந்தச் சுடரொளியில் தொடர்ந்திடுவோம். பெறப் போகும் வெற்றி மலர்களை, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இனமானப் பேராசிரியரான தங்களுக்கும் காணிக்கையாக்கிடுவோம்! இது உறுதி.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்