கருணாநிதியோடு மாறாத நட்பு பூண்டு கைம்மாறு கருதாத நட்புக்கு சான்றாகத் திகழ்ந்தவர் க.அன்பழகன் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் திமுகவின் பொதுச் செயலாளருமான க.அன்பழகன் மறைவெய்திய செய்தி கேட்டு பேரதிர்ச்சியடைந்தேன். கண்ணியமான அரசியலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த க.அன்பழகன் மொழி, இன நலன் காக்கும் போராட்டங்களில் எப்போதும் முன்னிலை வகித்தவர். அவருடைய மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பு. அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பெரியாரின் பாசறையில் பயின்று, அண்ணாவின் வழிகாட்டலில் வளர்ந்த பேராசிரியர், தலைவர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தோழனாக, தடம் மாறாத தளபதியாக உடன் பயணித்தவர். அரசியலில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் வந்தபோதிலும் கொண்ட கொள்கையில் சற்றும் உறுதி தளராமல் நடை போட்டவர்.
சட்டப்பேரவை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக சுகாதாரம், கல்வி, நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றி தனித்துவமாகத் தடம் பதித்தவர். ஈழத் தமிழருக்காக தனது எம்எல்ஏ பதவியைத் துறந்தவர்.
உலக அரசியலில் கார்ல் மார்க்ஸ் - எங்கெல்ஸ் ஆகியோரின் நட்பை எல்லோருமே வியந்து பாராட்டுவார்கள். அதுபோல தமிழக அரசியலில் தலைவர் கருணாநிதியோடு மாறாத நட்பு பூண்டு கைம்மாறு கருதாத நட்புக்கு சான்றாகத் திகழ்ந்தவர் க.அன்பழகன் ஆவார்.
திமுக அமைச்சரவையில் தான் பொறுப்பு வகித்த துறைகளில் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றியவர், சாதனைகளை நிகழ்த்தியவர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களின் வரிசையில் கடைசிக் கொழுந்தாக மீதமிருந்த க.அன்பழகன் 98 வயது கண்டு நிறைவாழ்வு வாழ்ந்தவர்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் பொதுச்செயலாளராக இருந்து அக்கட்சியை லட்சியப் பாதையில் வழிநடத்தியவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும், தனிப்பட்ட முறையில் என் மீதும் எப்போதும் அன்பு பாராட்டியவர்.
பொதுவாழ்வில் இருப்போர் எப்படி காட்சிக்கு எளிமையாக, கடுஞ்சொல் இல்லாதவராக, கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவராக இருக்க வேண்டும் என்பதற்கு அவரைவிடவும் பொருத்தமான உதாரணம் வேறு எவரும் இருக்க முடியாது. க.அன்பழகனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீர வணக்கத்தையும், அவரை இழந்து நிற்கும் திமுகவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago