திருப்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 14-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருப்பூரிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திருப்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்குத் தடை கேட்டு கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்துங்கள், கைது செய்யுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், திருப்பூர் போராட்டம் தொடர்பாக நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக் கோரி வழக்கறிஞர்கள் வைகை, மோகன், சங்கரசுப்பு ஆகியோர் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (மார்ச் 6) முறையீடு செய்தனர். அப்போது இந்த வழக்கு மீண்டும் வரும் 11-ம் தேதி விசாரணைக்கு வரும்போது அனைத்துத் தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, திருப்பூர் போராட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கோபிநாத் மீது ஏற்கெனவே குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது எனவும், தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனவும் வழக்கறிஞர்கள் கோரினர். மேலும், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு திருப்பூருக்கு மட்டுமா அல்லது தமிழகம் முழுமைக்குமா என்பதில் தெளிவு இல்லை எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அப்போது அந்த உத்தரவு திருப்பூருக்கு மட்டுமே பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த உத்தரவில் தெளிவு இல்லாததால், நிறுத்தி வைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரினர். இதையேற்று, அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்யுமாறு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு தடையாக இருக்கக் கூடாது என காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் வரும் 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago