விளைநிலங்களில் பெட்ரோலிய எண்ணெய்க் குழாய்களைப் பதிக்கும் திட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ இன்று (மார்ச் 6) வெளியிட்ட அறிக்கையில், "கோவை மாவட்டம் இருகூர் முதல், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில், விவசாய விளைநிலங்களில் குழாய் பதித்து, பெங்களூரு தேவனகொந்தி வரை, பெட்ரோலிய எண்ணெய் கொண்டு போகும் திட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனம் அறிவித்தது.
பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-ன்படி, எண்ணெய்க் குழாய் பதிப்பில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விபத்துகள் நேர்ந்தாலோ, நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பு ஆக்கப்படுவர். இச்சட்டத்தில், 2012-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, நில உரிமையாளர்கள் நிலத்தையும் ஒப்படைத்துவிட்டு, அதில் பதிக்கப்பட்ட குழாய்களையும் காவல் காக்க வேண்டும்.
குழாய் பதிக்கப்பட்ட நிலங்களில் தென்னை, மா போன்ற மரப்பயிர்கள் வளர்க்கக் கூடாது; குடியிருப்புகள், மாட்டுச் சாலைகள், கோழிப் பண்ணைகள், ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்ட எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது; கனரக இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் திட்டத்தை அறிவித்தபோதே, விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர்.
» வருங்கால வைப்பு நிதி வட்டிக் குறைப்பு அநீதி; குறைந்தபட்ச வட்டியை உறுதி செய்க: ராமதாஸ்
» ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த ஓட்டுநர்: தொடரும் நேர்மையால் குவியும் பாராட்டு
2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், விளைநிலங்களில் அளவீடு செய்யும் பணியைத் தொடங்கியபோது, 7 மாவட்டங்களின் விவசாயிகள் அறப்போராட்டங்களில் இறங்கினர். அதைப் பொருட்படுத்தாமல், பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தாமல், தான்தோன்றித்தனமாக, பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-ன்படி, 317 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 6,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 1,300 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி, பயன்பாட்டு உரிமையை எடுத்துக் கொள்ள, பாரத் பெட்ரோலிய நிறுவனம் குறிப்பாணை வெளியிட்டு இருக்கின்றது. இதற்கு, எடப்பாடி பழனிசாமி அரசுதான் காரணம் ஆகும்.
2013-ல் கெயில் நிறுவனம், விளைநிலங்களில் குழாய் பதித்து எரிகாற்று கொண்டு செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த முயன்றபோது, நானே நேரடியாகச் சென்று பார்வையிட்டு, விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றேன். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, விவசாயிகளின் குரலுக்குச் செவிமடுத்து, விளைநிலங்களில் எரிகாற்றுக் குழாய் பதிக்கும் திட்டத்திற்குத் தடை விதித்தார்.
ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, இரு முறை சந்தித்து மனு அளித்துள்ளனர். பிப்ரவரி 18-ல் தலைமைச் செயலகத்தில், தற்சார்பு விவசாய சங்கத் தலைவர் கி.வெ.பொன்னையன் தலைமையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தைச் சந்தித்துப் பேசினர்.
ஆனால், 'விவசாயிகளின் காவலர்' என்று கூறிக்கொள்ளும் முதல்வர், விவசாயிகளின் நியாயமான கோரிக்கையைத் தட்டிக் கழித்துவிட்டு, விளைநிலங்களைப் பாழ்படுத்தும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது வேதனை அளிக்கின்றது.
எண்ணெய்க் குழாய்களை விளைநிலங்களில் பதிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, சாலை வழியாக எடுத்துச் செல்ல தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மார்ச் 9-ம் நாள் சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, மதிமுக ஆதரவு அளிக்கின்றது. மதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும், பெருமளவில் கலந்துகொண்டு, உரிமை முழக்கம் ஓங்கி ஒலித்திடத் துணை நிற்க வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago