பொறியியல் கல்வியில் வேதியியல் கட்டாயப் பாடமாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல் 

By செய்திப்பிரிவு

பொறியியல் கல்விக்கான சேர்க்கைக்கு கணிதம், இயற்பியல், வேதியியலை கட்டாயத் தேர்வுப் பாடங்களாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று வைகோ பேசியதாவது:

''பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் இடம் பெற்றுள்ளது. அண்மையில், இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலை வகுப்பில் வேதியியல் படித்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; வேதியியல் மதிப்பு எண்களைக் கணக்கிட வேண்டியது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, பொறியியல் கல்விக்கான பாடங்களை மாணவர்களின் விருப்பத் தேர்வுக்கு விட்டுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மாணவர்களைக் கடுமையாகப் பாதிப்பதுடன், மேனிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேதியியல் பயிற்றுவிக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வேலை வாய்ப்பினை இழக்கவும் வழிவகுத்துள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வில், 500க்கு 400க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மேனிலை முதலாம் ஆண்டில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே, ஆராய்ச்சி மேற்படிப்புகளுக்குத் தகுதி பெற்று, அதன்வழியாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு அறிய முடியும். வேளாண்மைப் பொறியியல், கட்டுமானம், வேதியியல் மற்றும் பல தொழில்நுட்பக் கல்விக்கு, மேனிலை வகுப்பில், வேதியியல் படித்திருக்க வேண்டும்.

ஆனால், புதிய அறிவிப்பின்படி, மாணவர்கள், வேதியியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுப்பது கட்டாயம் அல்ல என்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது. இது, வேதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெருந்தடையாக அமைந்து விடும். அதன்பிறகு, வேதியியல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, வேற்று நாட்டு அறிஞர்களின் உதவியைத்தான் நாட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். துணித்தொழில், வண்ணப் பூச்சுகள், பிளாஸ்டிக், உரங்கள், வேளாண்மை, தோல் பதனிடும் தொழில், சாயம் ஏற்றுதல், மருந்துகள், பெட்ரோல், மின்தகடுகள், சிமெண்ட், உணவு பதப்படுத்துதல், மண்ணியல் ஆய்வுகள், தரக் கட்டுப்பாடு ஆகிய முதன்மையான துறைகளில், வேதியியல் தொழில்நுட்ப அறிஞர்களின் பணி கட்டாயத் தேவை ஆகும்.

இன்று வேதியியல் அறிவு, அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் தேவையாக இருக்கின்றது. அறிவியல் தொடர்பான எந்தக் கல்விக்கும், தனித்திறன் கொண்ட வேதியியல் அறிஞர்கள் தேவை.

பொறியியல் பட்டதாரிகளைக் காட்டிலும், ஒரு வேதியியல் பட்டதாரி, இன்று எந்தத் துறையிலும் வேலைவாய்ப்புகளை மிக எளிதாகப் பெற முடியும். இந்நிலையில், வேதியியல் கட்டாயப் பாடம் அல்ல என்றால், திறன் குறைந்த மாணவர்கள், வேதியியல் தொடர்பு இல்லாத ஏதேனும் ஒரு பணிக்குள் தங்களை முடக்கிக் கொண்டு விடுவார்கள்.

வேதியியல் கட்டாயப் பாடம் என்பது, பொறியியல் கல்லூரிக்கான சேர்க்கைகளில் எந்தத் தடங்கலையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால், வேதியியல் விருப்பப் பாடம் இல்லை என்றால், அதனால், கலைக்கல்லூரிகளும், பி.எஸ்சி வேதியியல் துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

எனவே, இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு வெளியிட்டு இருக்கின்ற அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, பொறியியல் கல்விக்கான சேர்க்கைக்கு, கணிதம், இயற்பியல், வேதியியலை கட்டாயத் தேர்வுப் பாடங்களாக அறிவிக்க வேண்டும்''.

இவ்வாறு வைகோ பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்