மின்வாரியத்தில் 1300 பணியிடங்கள்; தமிழில் தேர்வு நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலைநிறுத்தி, மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை.

“தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 1300 மின் கணக்கீட்டாளர்கள் (ASSESSOR) பதவிக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என்று அதிமுக அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஏற்கெனவே இந்தி படித்தவர்களை எல்லாம் உதவிப் பொறியாளர்களாக நியமித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அந்த மோசமான முன்னுதாரணத்தை தொடர்ந்து இப்போது, வீடு வீடாகச் சென்று மீட்டர் ரீடிங் எடுக்கும் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான தேர்வினை, முழுவதும் தமிழில் நடத்திட மறுப்பது, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு, பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இந்தத் தேர்வுக்கான அறிவிப்பில், “இப்பதவிக்கு விண்ணப்பிப்பவருக்குக் கட்டாயம் தமிழ் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” - “தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்” - “தமிழ் மீடியம் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும்” என்றெல்லாம் “ஒப்பனைக்கு”க் குறிப்பிட்டு விட்டு, "ஆன்லைன் தேர்வு மட்டும் முழுக்க முழுக்க தமிழில் நடைபெறாது" என்று அறிவிப்பது, முற்றிலும் அநீதியான தேர்வு முறையாகும்.

தவறான கேள்விகளுக்கு “நெகடிவ் மதிப்பெண்” வழங்கும் முறையும், படித்துவிட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞர்களை அடியோடு புறக்கணிக்கும் செயலாகும். தேர்வில் வெற்றி பெறுபவர்களில், “ஒரு பதவிக்கு இருவர் என்ற அளவில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைக்கப்படுவார்கள்” என்பது, முறையற்ற - எவ்வித நியாயமும் இல்லாத அளவுகோலாக இருக்கிறது.

மின் வாரியப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்துவது, ஏதோ “மின் கொள்முதல்” போன்றதல்ல; மாறாக, வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, தமிழ்நாட்டில் தமிழில் ஆன்லைன் தேர்வு நடத்துவது முக்கியம். அதுவே பொருத்தமானது, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதை மின்துறை அமைச்சர் தங்கமணி உணர்ந்து, ஏற்பட்டுவிட்ட தவறை உடனடியாகத் திருத்திக் கொண்டு, மறு அறிவிப்பு வெளியிட முன்வர வேண்டும்.

ஆகவே, கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புறங்களில், ஏழ்மையான சூழ்நிலையில் பட்டப் படிப்புகளை முடித்துள்ள இளைஞர்களும், மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில், இந்தப் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கிராமப்புறப் பட்டதாரிகளின் நலன் கருதி, முதலமைச்சரும் மின்துறை அமைச்சருக்கு உரிய ஆணை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்