தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக் கொள்ள “பரம்பரை எதிரிகள்” துடிக்கிறார்கள் , தமிழர்களின் நாகரிகத்தை - கலாச்சாரத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்தால் திமுக சார்பில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும், என ஸ்டாலின் எசாரித்துள்ளார்.
திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
“மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம்” என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், திருக்கோயில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து - பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில் “தொல்லியல் துறை”ஒன்று செயல்பட்டு வருகிறது.
» மீனம்பாக்கத்தில் அனைத்து வசதிகளுடன் ஆர்டிஓ அலுவலகம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து - பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை எடுக்க முயன்று - அதற்கு கலைஞரும், தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக - அத்திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட்டது. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கூட கைப்பற்ற முயன்று - அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது.
இதுபோன்ற சூழலில், பாஜகவின் கலாச்சாரத் திணிப்பை தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும், தமிழைப் புறக்கணித்து இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் “தாலாட்டு”பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து - இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பாஜக அரசு ஈடுபட விரும்புகிறது.
மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது; மத்திய - மாநில உறவுகளுக்கு எதிரானது; திருக்கோயில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்து - வட நாட்டவருக்கும், மொழி தெரியாதோர்க்கும் கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க்கும் முயற்சி ஆகும்.
திருக்கோயில்கள் நிர்வாகத்தினை தமிழக அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் பாஜக மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு, எதிர்ப்பு காட்டாமல், இதுவரை அதிமுக அரசும் - தமிழக கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனும் மவுனமாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக “தாராளமாக” தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு, இப்போது திரைமறைவில் சம்மதம் தெரிவித்து விட்டார்களோ என்ற சந்தேகமே எழுகிறது.
குறிப்பாக “தமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன”என்று மத்திய அமைச்சர். பிரகலாத் சிங் பட்டேல் சுட்டிக்காட்டியிருப்பது - தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டு - தமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம்.
திருக்கோயில்களை மாநில அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக எம்.பி மூலம் மக்களவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர வைத்த “பரம்பரை எதிரிகள்” தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.
தமிழர்களின் நாகரிகம் - பண்பாடு ஆகியவற்றைச் சிதைக்க இரவு பகலாகத் தூக்கமின்றிச் செயல்படுகிறார்கள். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கிறோம் என்ற ஒரே ஆணவத்தில் நடத்திட நினைக்கும் இந்த கலாச்சாரப் படையெடுப்பை திமுக ஒரு போதும் அனுமதிக்காது.
ஆகவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் கைப்பற்ற நினைக்கும் கபட எண்ணத்தை மனதிலிருந்து மத்திய கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் உணர்வை மீறி - மாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை - கலாச்சாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் - அதை எதிர்த்து திமுக சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்’.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago