பிரதமர் மோடி - அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் காலம் தொலைவில் இல்லை: கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடி - அமித் ஷா கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே நீடித்து வருவதால் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.1 சதவீதமாகவே இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.7 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த 2018 - 19 ஆம் ஆண்டில், இதே காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்தது.

அதேபோல, நாட்டின் நிதி பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையின் மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் கூறப்படட இலக்கை விட, ஜனவரி இறுதியில் நிதி பற்றாக்குறை 128.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதன்படி நிதிப்பற்றாக்குறை ரூபாய் 9 லட்சத்து 85 ஆயிரத்து 472 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தகைய நிதி பற்றாக்குறைக்கு காரணம் மத்திய அரசின் வருவாய் குறைந்தது தான்.

மத்திய அரசின் மொத்த வருமானம் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டில் 12 லட்சத்து 82 ஆயிரம் கோடியாக தான் இருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் மொத்த செலவீனம் ரூபாய் 22 லட்சத்து 68 ஆயிரம் கோடியாக இருக்கிறது.இதில் 4 லட்சத்து 71 ஆயிரம் கோடி கடனுக்கான வட்டியாகவும் ரூபாய் 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி மானியங்களுக்கு மத்திய அரசு செலவிட்டுள்ளது. வரவிற்கும் செலவிற்கும் இடைவெளி கடுமையாக அதிகரித்திருப்பதனால் இந்திய பொருளாதாரத்தை பற்றிய மதிப்பீடுகள் எதிர்மறையாக இருக்கின்றன.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் நடப்பு நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் என நிர்ணயிக்கப்படட இலக்கை தளர்த்தி 3.8 சதவீதமாக நிர்ணயம் செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. அதை தவிர பங்கு சந்தையில் கடந்த 11 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரே நாளில் ரூபாய் 5 லட்சத்து 53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் பங்கு சந்தையில் ஏற்படட மொத்த இழப்பு ரூபாய் 11 லட்சத்து 63 ஆயிரம் கோடி. அதோடு வெளிநாட்டு நிறுவன முதலீடடாளர்கள் இந்த வாரத்தில் மட்டும் ரூபாய் 6 லட்சத்து 812 கோடியை விலக்கிக்கொண்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்படட பொருளாதார வீட்சியை அன்றைய மத்திய அரசு உரிய அணுகுமுறையோடு சமாளித்தது. ஆனால் இன்று இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கு தீவிரமான முயற்சிகளில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. மாறாக மலிவான அரசியல் தந்திரங்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 50 டாலராக சரிந்திருக்கிறது. இதை ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தவறி விட்டது.

பொருளாதார வளர்ச்சி சரிவு குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறும்போது, ‘மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த கவனம் செலுத்தவில்லை. மாறாக, அரசியல் செய்வதிலும் மற்றும் சமூக ரீதியான கொள்கைகளிலும் தான் கவனம் செலுத்துகிறது. பொருளாதார சரிவிற்கு இதுதான் முக்கிய காரணம்” என கூறியுள்ளார். இதை விட நாட்டு நிலையை எவரும் துல்லியமாக மதிப்பிட்டு கூற முடியாது.

இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வேன் என்று வாக்குறுதி கொடுத்து அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்த நரேந்திர மோடி அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா மூலமாக மக்களை மதரீதியாக பிளவு படுத்துகிற அரசியலை செய்து வருகிறார். 136 கோடி இந்திய மக்களின் குடியுரிமைக்கு ஆபத்து ஏற்படுகிற வகையில் குடியுரிமை சட்டத்தை திருத்தியிருக்கிறார். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டு கடுமையான போராட்ட்ங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக குடியுரிமை பாதுகாப்பு கோரி இரவு பகல் பாராமல் ஷாகின்பாக் பகுதியில் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் போராடடம் நடத்தி வருகிறார்கள். இந்த போராடடக்காரர்களை சந்திப்பதற்கு பிரதமர் மோடிக்கு அவகாசம் இல்லை என்றாலும் உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். ஆனால் மத்திய அரசு செய்யவேண்டிய பணியை உச்சநீதிமன்றம் செய்து வருகிறது.

அதேபோல மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் வெறுப்பான பேச்சுக்களை பா.ஜ.க.வை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா போன்றவர்கள் பேசியதை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளீதர் குறிப்பிட்டு அவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று காவல்துறையினரை கடுமையாக கண்டித்தார். அதையொட்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு பதிலாக நீதிபதி முரளீதரை பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்திற்கு இரவோடு இரவாக இடமாற்றம் செய்யப்பட்டு பழிவாங்கப்படடார். இது தான் நரேந்திர மோடி - அமித்ஷா ஆட்சியின் அணுகுமுறையாகும். இதை விட ஜனநாயகத்திற்கு விரோதமான சர்வாதிகார ஆட்சிமுறை வேறெதுவும் இருக்க முடியாது.

எனவே, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின்படி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதற்கு மாறாக படுபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. மக்களிடையே வாங்கும் சக்தி இல்லை, முதலீடுகள் இல்லை, வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர்கள் வேலை இழப்பு என அனைத்து நிலைகளிலும் இந்திய பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கிறது. இதன்மூலம் எழுகிற கடுமையான விமர்சனங்களை திசை திருப்புவதற்காக மதவாத அரசியலை தீவிரப்படுத்தி, செயல்படுத்தி வருகிற மோடி - அமித்ஷா கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை. இதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்