வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த புதிய தண்டனை சட்டம் வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப்.28) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் அண்மைக்காலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், இனி வரும் காலங்களில் மக்கள் நட்புடனும், நல்லிணக்கத்துடனும் வாழ முடியுமா? என்பதே ஐயமாகியிருக்கிறது. அடுத்தவர்கள் மீது வெறுப்பை உமிழக்கூடிய பேச்சுகளும், தீய பிரச்சாரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணமாகும். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் சட்ட அமைப்புகள் வலியுறுத்தியும் அது செவி மடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
ஒரு காலத்தில் வாயும், வார்த்தைகளும்தான் அன்பைப் பொழியும் ஆயுதங்களாக திகழ்ந்தன. ஆனால், காலப்போக்கில் வார்த்தைகளும், சமூக ஊடகங்களும் சமூக ஒற்றுமையை குலைக்கும் கருவிகளாக மாறிவிட்டன. வெறுப்புப் பேச்சு, வெறுப்புப் பிரச்சாரம் ஆகியவற்றால் அடிக்கடி மோதல்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டன. இத்தகைய வெறுப்புப் பேச்சும், வெறுப்புப் பிரச்சாரமும் அரசியல் தளங்களிலும், சமூகத் தளங்களிலும் நுழையும்போதுதான் மிகவும் மோசமானதாக மாறுகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் மோதல்களுக்கு இத்தகைய வெறுப்புப் பிரச்சாரங்கள் முக்கியக் காரணமாகும்.
தேர்தலின்போது வெறுப்புப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, வாக்குகளை வாங்கத் துடிப்பதை சில கட்சிகள் வாடிக்கையாகவே வைத்துள்ளன. இத்தகைய பிரச்சாரத்தைச் செய்வதற்காக கோடிகளைக் கொட்டிக் கொடுத்து தனியார் அமைப்புகளை நியமிக்கும் கட்சிகளும் உள்ளன. சுயநல நோக்கத்துடனும், குறுகிய மனப்பான்மையுடனும் செய்யப்படும் இத்தகைய அரசியல் மக்களை பிணைப்பதற்குப் பதிலாக பிளவுபடுத்துகின்றன. இது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் எதிரான செயலாக அமைந்துவிடக்கூடும்.
» ஹாட் லீக்ஸ்: அண்ணன்கிட்ட வாங்கலே பாக்கலாம்!
» குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்; இரு நாட்களில் 2 எம்எல்ஏக்கள் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இத்தகைய வெறுப்புப் பிரச்சாரம் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஒரு தரப்பினர் குறித்து இன்னொரு தரப்பினர் மத்தியிலும், இன்னொரு தரப்பினர் குறித்து முதல் தரப்பினர் மத்தியிலும் பொய்யான தகவல்களை பரப்பி பகைமைத் தீயைப் பற்ற வைக்கும் சதியில் சில கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இது ஆபத்தானது.
ஒரு நாட்டில் பேச்சு சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட வெறுப்புப் பேச்சுகளும், வெறுப்புப் பிரச்சாரமும் முறியடிக்கப்பட வேண்டியது முக்கியம் ஆகும். இதை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவில் பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைத் தடுப்பதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டிருப்பதைப் போன்று, அனைத்து மக்களுக்கும் எதிரான வெறுப்புப் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன் அடிப்படையில், இந்தியாவில் அனைத்துப் பிரிவினருக்கும் எதிரான வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்திய தண்டனைச் சட்டத்தில் 153சி, 505ஏ ஆகிய இரு பிரிவுகளைச் சேர்க்க வேண்டும். அதற்கேற்றவாறு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட 267-வது அறிக்கையில் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
அதனடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் 'குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த மசோதா'வை 2018-ம் ஆண்டில் தயாரித்தது. அந்த மசோதாவை சட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம், வெறுப்புப் பேச்சுகள் குறித்து பேஸ்பரூவா குழு, டி.கே.விஸ்வநாதன் குழு ஆகியவற்றின் அறிக்கைகளையும் ஆய்வு செய்து, 153சி, 505ஏ ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்தித் தரும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி, சட்ட ஆணையம் திருத்தப்பட்ட பரிந்துரைகளை 2018-ம் ஆண்டு மே மாதத்தில் வழங்கிய போதிலும் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் வெறுப்புப் பேச்சுகளும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனைகளுடன் கூடிய சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
எனவே, அனைத்துப் பிரிவினருக்கும் எதிரான வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்கும் வகையில் இந்திய தண்டனைச் சட்டத்தில் 153சி, 505ஏ ஆகிய பிரிவுகளைச் சேர்ப்பதற்கான குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த மசோதாவை அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago