'இந்தியன் - 2' விபத்து குறித்து கமல் எழுதிய கடிதத்துக்கு பதில் கடிதமொன்றை லைகா நிறுவனம் கமலுக்கு அனுப்பியுள்ளது.
கடந்த 19-ம் தேதி பூந்தமல்லி ஈவிபி மைதானத்தில் 'இந்தியன்-2' படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து சினிமாத் துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டை கமல் வழங்கினார்.
அதன்பிறகு படப்பிடிப்பில் குழுவினர் பாதுகாப்பு, அவர்கள் மனநிலை, தயாரிப்பு நிறுவனம் வழங்கவேண்டிய பாதுகாப்பு, குடும்பத்தினருக்கான உதவி உள்ளிட்டவை குறித்து கமல் ஒரு கடிதத்தை லைகா நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.
அதில், ''விபத்து நடந்தபோது சில மீட்டர் தூரத்தில் சில நொடிகளில் அந்தக் கோர விபத்திலிருந்து நான் தப்பித்தேன். அந்தச் சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் படப்பிடிப்பில் கலந்துகொள்கின்றனர். நமது தலையாயக் கடமை விபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான். இனிவரும் காலங்களில் கலைஞர்கள், படக்குழுவினர், டெக்னீஷியன்கள் ஆகியோரின் பாதுகாப்பு முக்கியம். அவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும், அவர்களுக்கான காப்பீடு போன்றவற்றையும் செய்வது சரியானது என்று நினைக்கிறேன். ஏதாவது இழப்பு, பொருளிழப்பு, சேதம் போன்றவை ஏற்பட்டால் தயாரிப்பு நிர்வாகம் அவர்களுக்கான இழப்பீட்டை விரைவாக வழங்கிட வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
» திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி மறைவு: மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காக இருந்தவர்; ஸ்டாலின் இரங்கல்
இந்நிலையில் கமலின் கடிதத்துக்கு லைகா நிறுவனம் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''லைகா நிறுவனத்தின் இயக்குநராக கடந்த வாரம் எங்கள் சேர்மேனுக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்துக்கு பதில் அளிக்க விரும்புகிறேன்.
பிப். 19 நடந்த அந்தத் துயரச் சம்பவத்திலிருந்து நாங்கள் அனைவரும் மீண்டு கொண்டிருக்கிறோம். உயிர்நீத்த நம் மூன்று சக ஊழியர்களின் குடும்பத்தினருக்காகப் பிரார்த்திக்கிறோம். சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடனே சுபாஸ்கரன் மற்றும் மூத்த நிர்வாகி ஒருவரும் கிடைத்த முதல் விமானத்தைப் பிடித்து சென்னை வந்தனர்.
உடனடியாக மார்ச்சுவரிக்குச் சென்று இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர். நீங்கள் மார்ச்சுவரிக்குச் சென்று பார்த்த 15 நிமிடங்களுக்குப் பிறகு அங்கு சென்ற நாங்கள் அதன் பிறகு உங்கள் அலுவலகத்தோடு தொடர்ந்து பேசி வந்தோம். அந்த தருணத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடியும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்வதாகவும் லைகா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அறிவித்தார்.
இவை அனைத்தும் உங்கள் கடிதம் எங்களுக்குக் கிடைக்கும் முன்னரே நடந்தவை. துரதிர்ஷ்டவசமாக இவை யாவும் பிப். 22க்கு முன்னால் உங்கள் கவனத்துக்கு வராமல் போய்விட்டது.
நமது படப்பிடிப்புத் தளங்களில் உலகத்தரமான பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பின்போது இந்தத் துயரச் சம்பவம் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இயற்கையாக நடந்த இதுபோன்ற சம்பவங்களுக்கு அனைவரும் கூட்டாகப் பொறுப்பேற்று கையாளப்பட வேண்டியதும் திருத்தப்பட வேண்டியதும் ஆகும்.
அனுபவமும் திறமையும் வாய்ந்த சிறந்த நடிகரும், தொழில்நுட்பக் கலைஞருமான உங்களுடைய மற்றும் முன்னணி இயக்குநரான ஷங்கருடைய சிறந்த ஈடுபாடும் பாதுகாப்பு அமசங்கள் மீதான் எங்கள் நம்பிக்கையை இரட்டிப்பாக்குகிறது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் உங்களுடைய மற்றும் இயக்குநருடைய கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும்தான் இருந்தது என்பதையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது.
படத்தின் தயாரிப்புக்கு நாங்கள் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்துள்ளோம். எனவே பாதுகாப்பு அம்சங்களில் நாங்கள் சமரசம் செய்யமாட்டோம் என்பதை நீங்கள் பாராட்டுவீர்கள். பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை. படப்பிடிப்புத் தளத்தின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய மிகவும் அனுபவம் வாய்ந்த நிர்வாக தயாரிப்பாளரான சுந்தர்ராஜன் மற்றும் இயக்குநரால் பரிந்துரை செய்யப்பட்ட கே.ஐ.மணிகண்டன் ஆகியோரை பணியமர்த்தியுள்ளோம். முன்பே கூறியது போல் இவர்கள் இருவரும்தான் மொத்தப் படத்தின் தயாரிப்புப் பணிகளுக்கும், பாதுகாப்பு அம்சங்களுக்கும் பொறுப்பாளர்கள்.
ஒரு பிரபல காப்பீட்டு நிறுவனத்தில் படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் காப்பீடு செய்துள்ளோம். மேற்கொண்டு சுந்தர்ராஜன் மற்றும் கே.ஐ.மணிகண்டனிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கூடுதல் விளக்கங்களைக் கேட்டிருக்கிறோம்.
மேலே குறிப்பிட்டபடி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, துரதிர்ஷ்டவசமான இந்த இழப்பிலிருந்து மீண்டு வர இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வலிமையை வழங்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்''.
இவ்வாறு அக்கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago