திருப்பூர் அருகே பாரத ஸ்டேட் வங்கியின் பெட்டகத்தை (லாக்கர்) உடைத்து நடந்த கொள்ளை சம்பவத்தில் 1,000 பவுன் தங்க நகைகள், ரூ.19 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருக்க வாய்ப்பு உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். வடமாநில கும்பலின் கைவரிசையாக இருக்குமா என்ற கோணத்தில் டிஐஜி தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் வே.கள்ளிப்பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 22, 23-ம் தேதிகளில் விடுமுறைக்குப் பிறகு, நேற்று முன்தினம் காலை அதிகாரிகள் வங்கியைத் திறக்கச் சென்றபோது, மர்ம நபர்கள் வங்கியில் புகுந்து பெட்டகத்தை உடைத்து, பணம், நகையை கொள்ளையடித்துச் சென்றிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். வங்கியின் உள்ளே இருந்த முக்கிய பெட்டகத்தின் கதவை உடனடியாக திறக்க இயலாமல் போனதாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் எவ்வளவு கொள்ளை போனது என்பதை கணக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. திருட்டு தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவின.
இந்நிலையில், நேற்று காலை கோவை மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவர் (டிஐஜி) கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பல்லடம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் முருகவேல் உள்ளிட்டோர் அடங்கிய போலீஸார் வங்கிக்கு சென்று மீண்டும் ஆய்வு நடத்தினர். ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல அதிகாரிகளும் உடனிருந்தனர். சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
27 பெட்டகங்கள் உடைப்பு
இதுகுறித்து மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வங்கியில் 114 பெட்டகங்கள் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 27 பெட்டகங்களை இயந்திரம் மூலமாக துளையிட்டு உடைத்து, அவற்றிலிருந்த நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.
வங்கிப் பணம் வைக்கப்படும் பெட்டகத்தையும் உடைத்து ரூ.18 லட்சத்து 97 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அடகு வைக்கப்பட்ட நகைகள் கொள்ளை போகவில்லை. வாடிக்கையாளர்களை அழைத்து, அவர்கள் வைத்திருந்த நகைகள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறோம்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், 900 முதல் 1,000 பவுன் தங்க நகைகள் வரை கொள்ளை போயிருக்க வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.
மறியல் போராட்டம்
முன்னதாக நேற்று காலை வங்கியில் நகை அடகு வைத்தவர்கள், பெட்டகம் வைத்திருப்பவர்கள், பணம் சேமித்து வைத்துள்ளவர்கள் என 80-க்கும் மேற்பட்டோர் பல்லடம் - தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் மற்றும் வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘‘கொள்ளைபோன நகைகள் எவ்வளவு? யாருடையது? பாதுகாப்பாக உள்ள நகைகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை விரைவாக கைது செய்து, நகைகளை மீட்டுத் தர வேண்டும்’’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.
சம்பவம் தொடர்பாக டிஐஜி மேற்பார்வையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கொள்ளையில் வடமாநில கும்பலுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago