சிலைக் கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சிலைக் கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து மாயமானது. இது குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், ஆவணங்கள் மாயமானதாகக் கூறி சிலைக் கடத்தல் வழக்குகளை முடிக்கத் தடை விதிக்கக் கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இது தொடர்பான மனுவில், ’’சிலைக் கடத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு, வழக்கு ஆவணங்களை காவல்துறை அதிகாரிகள் திருடியுள்ளனர். வழக்கு ஆவணங்கள் மாயமாகி விட்டதாகக் கூறி இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில் வைரவேல் திருடப்பட்ட விவகாரத்தில் செயல் அதிகாரி கொலை செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி பால் ஆணையம், அறிக்கை அளித்தும், அது தற்கொலை என இந்து சமய அறநிலையதுறை வழக்கை முடித்து வைத்துள்ளது. பின்னர் வைரவேல் கோயில் உண்டியலில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை'' என யானை ராஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு இன்று (பிப்.25) நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து 2018-ம் ஆண்டு மனுதாரர் புகார் அளித்தது குறித்து தற்போதுவரை பதிலளிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது தான் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதால் அவற்றை ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

இதனையடுத்து, சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 31-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்