தேர்தல் பணியின்போது இறந்த ஆசிரியைக்கு ரூ.10 லட்சம்: மேலும் 2 பேருக்கும் நிவாரணம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியை, தலைமை ஆசிரியர், இளைஞர் காவல்படை வீரர் ஆகியோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சனிக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 42 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளன.

மே 16-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30-க்கு தொடங்கும். வாக்கு எண்ணும் பணியில் சுமார் 16 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

பயிற்சி நாளை தொடக்கம்

இதற்கான பயிற்சி வகுப்புகள் சென்னையில் 5-ம் தேதி, கோவையில் 6-ம் தேதி, திருச்சி மற்றும் மதுரையில் 7-ம் தேதி நடக்கின்றன. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், முதன்மை உதவித் தேர்தல் அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர்கள் என 308 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் கீழ்நிலையில் உள்ள மற்ற ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். வாக்குப்பதிவு இயந்திரத்தைத் திறப்பது முதல் முடிவு அறிவிப்பது வரையிலான அனைத்து நடைமுறைகளும் அவர்களுக்கு விளக்கப்படும். சென்னை வள்ளுவர் கோட்டம், அன்னை தெரசா வணிக வளாகத்தில் 5-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் பயிற்சியில் தேர்தல் அதிகாரிகள் உள்பட 77 பேர் கலந்து கொள்கின்றனர்.

42 மையத்திலும் வெப்கேமரா

வாக்கு எண்ணும் பணியில் யார், யார் ஈடுபடவுள்ளனர் என்பது பற்றி வாக்கு எண்ணும் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு முடிவு செய்யப்படும். யார் எந்த தொகுதி வாக்குகளை எண்ணுவார்கள் என்பது ஒருநாளைக்கு முன்பும், யார் எந்த டேபிளில் வாக்கு எண்ணுவார்கள் என்பது 16-ம் தேதி காலை 5 மணிக்கும் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கையை துல்லியமாகக் கண்காணிக்க தமிழ்நாட்டில் முதல்முறையாக 42 வாக்கு எண்ணும் மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்படுகிறது.

நிவாரணம் 2 மடங்கு

தேர்தல் பணியின்போது உயிரிழந்த அரக்கோணம் ஆசிரியை பூங்கொடி, சேலம் எடப்பாடி தலைமை ஆசிரியர் தங்கராசு, கிருஷ்ணகிரி மாவட்டம் வீரணகுப்பத்தைச் சேர்ந்த இளைஞர் காவல்படை வீரர் வினோத்குமார் ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கடந்த தேர்தலின்போது இந்த நிவாரணத் தொகை ரூ.5 லட்சமாக இருந்தது.

அனைத்து தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை முடிந்து 6 மாதங்கள்வரை பத்திரமாக வைக்கப்படும். அதற்குள் தேர்தல் வெற்றியை எதிர்த்து நீதிமன்ற வழக்கு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லையென்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள பதிவுகள் அழிக்கப்பட்டு, வேறு தேர்தலுக்கு அந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஏன் உங்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்படும்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

4 பேர்தான் அனுமதி

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தங்களது தேர்தல் சான்றிதழை வாங்க வரும் வேட்பாளரோடு அதிகபட்சம் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்