அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; சமூக நீதிக்கு எதிரானது: ராமதாஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப்.25) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பாமல், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி மற்றும் குரோம்பேட்டை வளாகங்களில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கட்டிடக்கலைப் பள்ளி ஆகியவற்றில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 851 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 530 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், முந்நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நேர்மையான முறையில் போட்டித்தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.

இத்தகைய சூழலில் அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடிகள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், வருகை தரும் பேராசிரியர், புகழ்பெற்ற பேராசிரியர், கவுரவப் பேராசிரியர் ஆகிய நிலைகளில் நியமிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவில் 255.3 என்ற எண் கொண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவ்வாறு நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படும்; அவர்களின் எண்ணிக்கை மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு அநீதியானது. அண்ணா பல்கலைக்கழகத்தின் மொத்த ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 40% பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு துணைவேந்தர் சூரப்பா எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்குத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார். துணைவேந்தருக்கும், பல்கலைக்கழக உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கும் நெருக்கமான பேராசிரியர்களுக்கு மறு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமிக்கும்போது இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. சமூக நீதிக்கும் எதிரான இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் துணைவேந்தருக்கு அக்கறை இருந்தால், உயர்கல்வி அமைச்சரிடமும், உயர்கல்வித்துறை செயலாளரிடமும் கலந்து பேசி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால் அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கும். ஆனால், காலியிடங்களை நிரப்புவதைத் தவிர்த்துவிட்டு, ஓய்வு பெற்றவர்களை நியமிப்பது என்பது பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களுக்கு வேலை வழங்கும் ஏற்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது. இது பல்கலைக்கழகத்தைச் சீரழித்து விடக்கூடும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமிக்க ஏற்பாடுகள் நடந்தபோதே அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். தமிழகத்தைப் பற்றி எதுவும் தெரியாத சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டால், அண்ணா பல்கலைக்கழகம் சீரழியும் என்று நான் எச்சரித்தேன்.

ஆனால், சிறந்த கல்வியாளரான சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவார் என்று கூறி, அவரை ஆளுநர் மாளிகை நியமனம் செய்தது. அதன்பின் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த வகையிலும் முன்னேறவில்லை.

மாறாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது. அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் துணைவேந்தர் சூரப்பா, முக்கியப் பதவிகளில் தமக்கு வேண்டியவர்களை நியமித்து பல்கலைக்கழகத்தைச் சீரழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துறைத் தலைவர்கள், புலத் தலைவர்கள் ஆகியவற்றில் தமிழர் அல்லாத, பிற மாநிலத்தவர்களை சூரப்பா நியமித்திருக்கிறார்.

பாடத்திட்ட இயக்குநராக தமிழகத்தின் கலாச்சாரம் குறித்து எதையும் அறியாத வட மாநிலத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டாதால் தான், பகவத்கீதை பாடமாக அறிவிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான போக்கு கட்டுப்படுத்தப்படாவிட்டால், அப்பல்கலைக்கழகம் சீரழிவதைத் தடுக்க முடியாது. எனவே, ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மறு நியமனம் செய்யும் முடிவைக் கைவிடும்படி துணைவேந்தர் சூரப்பாவுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆட்சிக் குழுவை வலுப்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்