தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரணை ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனை, ரஜினிகாந்த் வழக்கறிஞர் இளம் பாரதி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க மக்கள் பேரணியாகச் சென்றபோது வன்முறை ஏற்பட்டது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த சம்பவத்தையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு நேரில் சென்றார். பின்னர், சென்னை திரும்பிய அவர், ''போராட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவினர். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினர், போலீஸாரைத் தாக்கிய பிறகுதான் இந்தச் சம்பவமே நடந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கடைசி நாளில் ஊடுருவியதுபோல் இதிலும் கடைசி நாளில் சமூக விரோதிகள் ஊடுருவிக் கலவரத்தை ஏற்படுத்தினர். சில போராட்டங்கள் தூண்டப்படுகின்றன. ஆனால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்'' என்று பேசினார்.
இது சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒருநபர் ஆணையம் முன்பாக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், நேரில் ஆஜராவதலிருந்து ரஜினிகாந்த் விலக்கு கேட்டார்.
ரஜினி ஆஜராக விலக்கு கேட்டிருந்த நிலையில், ஆணையம் முன்பாக ரஜினியின் வழக்கறிஞர்கள் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞரிடம், அவரிடம் கேட்கப்படக் கூடிய கேள்விகள் அடங்கிய சீலிடப்பட்ட கவரை ஆணையம் வழங்கி உள்ளதாக ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி தெரிவித்தார். ரஜினி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட மனுவும் ஏற்கப்பட்டதாகத் தெரிவித்தார்.