திமுக ஆட்சியில் இருந்த ரூ.1 லட்சம் கோடி கடனுக்கு தற்போது வரை வட்டி செலுத்தப்பட்டு வருவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (பிப்.24) செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை தொடங்கி வைத்துள்ளீர்கள். அவர்களின் பாதுகாப்புக்காக ஏதேனும் சட்டம் இயற்றப்படுமா?
ஜெயலலிதாவின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாக, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் அறிவிக்கப்பட்டு இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, மாநில அரசுகளை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசுக்கும் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது.
» அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கு: மார்ச் 4-ல் ஆஜராக ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவு
» ஜெ., பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் கோவை முதலிடத்திலும், பெருநகரங்களில் சென்னை முதலிடத்திலும் உள்ளது. தமிழகத்தில் பெண்கள் இரவு நேரங்களில் கூட சாலைகளில் செல்லும் பாதுகாப்பான நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். குற்றங்களைக் குறைப்பதற்காக ஆங்காங்கே நகரில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
பெண்கள் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளாரே?
ஒவ்வொரு ஆண்டும் திட்டம் அறிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் எங்களின் ஆட்சி முடிய காலம் இருக்கிறது. அதற்கடுத்தும் இந்த ஆட்சி தொடரும். ஸ்டாலின் என்ன ஆட்சிக்கு வரப்போகிறாரா? அந்த கனவில்தான் இருக்கிறார். முதல்வர் கனவில் இருக்கிறார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்கிறோம். மனமிருந்தால் அதனை ஏற்கட்டும். அவருக்கு மனம் இல்லை. நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படுவதால், அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், எரிச்சலில் வரும் வார்த்தைகள்தான் அவை.
சிஏஏவை எதிர்த்து முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனரே?
ஏற்கெனவே சட்டப்பேரவையில் இதுகுறித்துத் தெளிவுபடுத்தியிருக்கிறோம். நானும் வருவாய்த் துறை அமைச்சரும் தெளிவுபடுத்தியிருக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் எந்த சிறுபான்மையின மக்களும் அச்சப்படத் தேவையில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுவது. என்பிஆரும் அப்படித்தான்.
2003-ம் ஆண்டு திமுக மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த போதுதான் என்பிஆர் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தனர். இந்தச் சட்டத்தை இயற்றினர். 2010 காங்கிரஸ் ஆட்சியில் அது இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 2011, பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் இருக்கும் போதுதான் முதன்முறையாக என்பிஆர் கணக்கெடுப்பைத் தொடங்கி வைத்தனர்.
இன்றைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு, இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் சிறுபான்மையின மக்களிடத்தில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக தவறான, பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
என்பிஆரைப் பொறுத்தவரைக்கும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததை விட 3 அம்சங்களைச் சேர்த்திருக்கின்றனர். மொழி, தாய் - தந்தை வசித்த இருப்பிடம், ஆதார் - குடும்ப -வாக்காளர் அடையாள அட்டைகளின் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனச் சேர்த்திருக்கின்றனர். இதுகுறித்து விவரம் தெரிந்தால் சொல்லலாம், ஆதாரமிருந்தால் கொடுக்கலாம், கட்டாயம் அல்ல என்று மத்திய சட்டத்துறை அமைச்சரே தெளிவுபடுத்திவிட்டார். அதனால், முன்பு இருந்த நடைமுறையின்படிதான் இப்போது கணக்கெடுப்பு எடுக்கப்பட உள்ளது. இருந்தாலும், சிறுபான்மையினரிடத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிப் பேசி, தவறான செய்தியைப் பரப்பியுள்ளனர்.
இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது. இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உண்டு. போராட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. யாருடைய போராட்டங்களையும் தடை செய்யவில்லை. யார் போராடுகின்றனர் என்பது ஊடகங்களுக்குத் தெரியும்.
தாழ்த்தப்பட்டவர்களை நீதிபதிகளாக்கியது திமுக போட்ட பிச்சை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார். தரக்குறைவான வார்த்தையைப் பேசியிருக்கிறார். ஆணவத்தில் பேசியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இப்படிப் பேசுவது சரியா?
தமிழகத்தில் கடன் சுமை அதிகரிப்பதை திமுக தலைவர் விமர்சித்துள்ளாரே?
திமுக ஆட்சியில் இருந்து இறங்கும்போது ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்தது. அன்றைய மதிப்புக்கு ரூ.1 லட்சம் கோடி என்றால், இன்றைய நிலைக்கு அதன் மதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் பத்தாண்டுகளுக்கு முன் வைத்த கடனுக்கு நாங்கள் தொடர்ந்து வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக நிதி செலவிடப்படுகிறது. இதனால் இன்று கடன் தொகை உயர்ந்திருக்கிறது.
கே.சி.பழனிசாமி தொடர்ந்து அதிமுக குறித்து புகார் கூறி வருகிறாரே?
கே.சி.பழனிசாமி அதிமுகவில் இல்லை. கே.சி.பழனிசாமி எப்படிப்பட்டவர் என கோவையில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். பல தவறுகளுக்காக சிறை சென்றவர் அவர்.
எழுவர் விடுதலை குறித்து?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தமிழக அரசு தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுக்கு உண்டான அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது இது தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்தில், நளினியை மட்டும் விடுதலை செய்யலாம், மற்றவர்களுக்குத் தண்டனையை நிறைவேற்றலாம் என முடிவெடுக்கப்பட்டது. துரைமுருகன் இதுகுறித்துப் பேசுகிறார். அந்த சமயத்தில் அவரும் அமைச்சராக இருந்திருப்பார். அவரும் அந்த முடிவில் கையெழுத்திட்டிருக்கிறார். ஸ்டாலின் துணை முதல்வராக அப்போது இருந்திருக்கிறார். எழுவர் விடுதலை குறித்துக் கேட்பதற்கு இவர்களுக்குத் தகுதியில்லை.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago