சிஏஏ: இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை; யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை? - ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சிஏஏ குறித்து முதல்வரும் துணை முதல்வரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.22) வெளியிட்ட அறிக்கையில், "குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வலிந்து சென்று ஆதரித்து வாக்களித்து, இன்றைக்கு நாட்டையே கிளர்ச்சிக் களமாக்கி, இந்தியாவில் வாழும் அனைத்து மக்கள் மத்தியிலும் நிலவி வந்த சமூக நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும், சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அதிமுக அரசு செய்யாது என்றும் அலறித் துடித்து ஒபிஎஸ்- இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டிருப்பது, குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழியும் பறித்த கதையாக இருக்கிறது.

பொய் என் அரசியல் மூலதனம்; துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம் என்று ஆட்சி செய்யும் முதல்வர் பொய், அவதூறுப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தத் திமுக முயற்சிக்கிறது என்று இன்னொரு கடைந்தெடுத்த கோயபல்ஸ் பிரச்சாரத்தைத் துவக்கியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வரைப் பொறுத்தமட்டில், அவர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதகங்களை வாக்களிக்கும் முன்பு படிக்கவே இல்லை என்பதும் படித்தறிய விரும்பவில்லை என்பதும், கண்ணை மூடிக்கொண்டு பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஒத்துழைத்திடும் ஊதுகுழலாகச் செயல்பட்டதும், இந்த அறிக்கை வாயிலாகவே தெரியவருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் என்ன பாதிப்பு சொல்லுங்க என்று சட்டப்பேரவையில் வெற்று ஆவேச முழக்கமிட்டார் முதல்வர். என்பிஆர் விவரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகின்றன என்று சட்டப்பேரவையில் பச்சைப் பொய் சொன்னார் அமைச்சர் உதயகுமார்.

ஆனால், இப்போது , தாய்மொழி, தந்தை, தாயார் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றைத் தவிர்க்கலாம் என்பதோடு மட்டுமின்றி, ஆதார், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களைக் கேட்க வேண்டாம் என்றும் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூட்டறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.

என்பிஆர் விவகாரத்தில் முதல்வருக்கும் அமைச்சர் உதயகுமாருக்குமே கருத்தொற்றுமை இல்லை, புரிதலும் இல்லை. எதுவுமே தெரியாமல், தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்யாமல், நாடு எதிர்கொண்டுள்ள விபரீதமான பிரச்சினையில் விளையாட்டுத்தனமாக அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

2003 குடியுரிமை சட்டத் திருத்தத்தில் மத அடிப்படையிலான பிளவுகொண்ட குடியுரிமை வழங்கும் திட்டம் இல்லை. அதன் அடிப்படையில் முதன் முதலாக எடுக்கப்பட்ட என்பிஆரில் மதரீதியாக பிளவுபடுத்தி குடியுரிமை வழங்கும் பாஜக அரசின் 2019 ஆம் வருட குடியுரிமைச் சட்டத் திருத்தம், புதிய என்பிஆர் படிவம்.பிறந்த தேதி கண்டுபிடிக்கும் கேள்வியில் முஸ்லிம்களின் பண்டிகைகள் புறக்கணிப்பு என்று எதுவும் இல்லை என்ற அடிப்படை விவரத்தைக் கூட பழனிசாமி தெரிந்து கொள்ள நாட்டம் காட்டவில்லை. என்ன செய்வது? அவரது கவலை பதவியைக் காப்பாற்றிக் கொள்வது, எஞ்சியிருக்கின்ற நாட்களில் எப்படி கஜானாவைக் காலி செய்வது என்பது மட்டுமே!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று அதிமுக எம்பிக்களுக்குச் சொன்ன ஒரு அறிவுரை சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்கள் நலன் ஆகியவற்றைச் சீர்குலைத்து, தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதற்கும், சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் பெண்கள் மீதே தடியடி நடத்துவதற்கும் உத்தரவிட்ட பழனிசாமி, இப்போது அச்சத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்.

பாஜகவின் செய்தித் தொடர்பாளராக மாறி, குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டைப் பிளவு படுத்தும் என்பிஆர், அதன் மூலம் வரவிருக்கும் என்ஆர்சி போன்றவற்றுக்கு வக்காலத்து வாங்குகிறார். மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருப்பது உண்மை என்றால், அந்தக் கடிதத்தை வெளியிட வேண்டியதுதானே? ஏன் ரகசியமாக வைத்துக்கொள்கிறார்?

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு என்ற திமுகவின் வாதத்தை, நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக சட்டப்பேரவையில் பட்டியலிட்ட பாதகங்களை இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது உண்மை என்றால் தமிழ்நாட்டில் என்பிஆரை அனுமதிக்க மாட்டேன் என்று அறிவித்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டியதுதானே!

ஏன் அடங்கி இத்தனை நாட்களாக ஒடுங்கி, அஞ்சிப் பதுங்கி நிற்கிறார்? மத்திய அரசை எதிர்த்தால், ஊழல் வழக்குகளில் ஒன்றன் பின் ஒன்றாகச் சிறைக்குள் செல்ல வேண்டியதிருக்கும் என்பதுதானே காரணம்!

பாதிப்பே இல்லை என்று பிடிவாதம் பிடித்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை விவாதம் நடத்தாமலேயே, ஜனநாயகத்திற்குப் புறம்பாக நிராகரித்து, என்பிஆர்-ஐ அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் ஏற்க மறுத்து இப்போது மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம் என்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை?

நீட், ஜிஎஸ்டி, உதய் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாகக் கடிதம் எழுதிய தொடர் நாடகம் போல், இதுவும் ஏமாற்றுவதற்கான புதிய நாடகமா? ஆகவே சிறுபான்மையினர் நலனில் அக்கறை இருப்பது போல் பாஜக போர்வை போர்த்திக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிப்பதை எந்த சிறுபான்மையின மக்களும் ஏன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்படும் இந்திய மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அந்தச் சட்டத்தை ஆதரித்தவர்களை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.

அதிமுகவின் வாக்கை அளித்து அரசியல் சட்டத்திற்கும், அதன் அடிப்படை அம்சங்களுக்கும் இழைத்தத் துரோகத்திற்குப் பிராயச்சித்தம் தேட, இப்போதாவது என்பிஆரை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உடனடியாக அறிவித்து, இன்றே அமைச்சரவையைக் கூட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். இல்லையென்றால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து மாபெரும் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து, நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டு, ஒரு கூட்டறிக்கையை வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்