உலகமயமாதல் பூதத்திடம் எச்சரிக்கையாய் இருப்போம்; தாய்மொழியைக் காக்க சபதமேற்போம்: கவிஞர் வைரமுத்து பேச்சு

By அ.முன்னடியான்

எல்லா பூதங்களையும் தின்று செரித்து நின்று வரக்கூடிய ஆற்றலைத் தமிழ் மொழிக்குத் தர வேண்டும் என தமிழர்கள் சபதம் ஏற்போம் என்று, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 'உலகத் தமிழ்க் கவிதை ஓராயிரம்' என்ற நூல் வெளியீட்டு விழா புதுச்சேரி கூட்டுறவுச் சங்க அரங்கில் நேற்று (பிப்.20) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சம்பத் வரவேற்றார். இந்த விழாவில் சபாநாயகர் சிவகொழுந்து நூலை வெளியிட்டார். முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் லட்சுமிநாராயணன் எம்எல்ஏ உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

"தமிழ் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை நிகழ்ந்திடாத ஒரு அபூர்வ நிகழ்வு புதுச்சேரி மண்ணில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அகநானூறு தொகுப்பு 400 பாட்டும், புறநானூறு தொகுப்பு 400 பாட்டும் கொண்டது.

ஆனால், ஆயிரம் கவிஞர்கள் கொண்ட ஒரு பெருந்தொகுப்பு என்பது தமிழ் வரலாற்றுக்குப் புதியது. அதுமட்டுமின்றி ஆயிரம் கவிஞர்களும் வாழும் கவிஞர்கள் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு. இங்கு பேசிய முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் லட்சுமிநாராயணன் இந்த நூல் எப்போதோ வெளிவந்திருக்க வேண்டிய நூல், 7 ஆண்டுகள் தாமதமாக வருகிறது என்று சொன்னார்.

இந்த நூல் வெளியிடப்படும் மண், பாரதி இருந்த மண். பாரதிதாசன் பிறந்த மண். கவிஞர்கள் சுவாசித்த, சுவாசிக்கும் மண். ஒரு கவிஞன் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம். ஆனால், புதுச்சேரியில் இறக்கலாம். அவ்வளவு பெரிய மரியாதை இங்கு படைப்பாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு தமிழ்க் கவிஞர்கள் சார்பில் என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன்.

கவிதை எழுதுவது எளிது; வெளியிடுவது கடினம். கவிதை படைப்பது எளிது; தொகுப்பது கடினம். தமிழ்நாட்டில் தமிழ்ச் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆயிரம் கவிஞர்கள் கிடைப்பார்கள். வேறு எந்த மொழியிலும் கிடைக்க மாட்டார்கள்.

தமிழ்க் கவிதை பெரிய பாரம்பரியத்தோடு இடையறாது ஓடிக்கொண்டிருக்கிறது. 3 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் இடையூறின்றி, இடைவெளியின்றி, தொடர்ச்சியாக மண்ணில் வந்து விழுந்துகொண்டிருக்கிறது. இந்த மொழியின் சிறப்பை வேறு எங்கும் பார்க்க முடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை கவிதையாகவும், கற்பனையாவும், மொழியாகவும் வாழக்கூடிய வாழ்வு தமிழனுக்கு என்று வகுக்கப்பட்ட வரம்.

இந்த நூல் அனைத்துப் பல்கலைக்கழகம், கல்லூரிகளிலும், ஒவ்வொரு தமிழ்ப் பேராசிரியர், ஆசிரியர் வீட்டிலும் திகழ வேண்டும். இந்தத் தொகுதியை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

உலகத் தாய்மொழி நாளன்று தமிழுக்கென்று சில திட்டங்களும், சில கொள்கைகளும் வகுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். உலகமயமாதல் என்ற பெரும் பூதம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் புகுந்து உள்ளூர் கலாச்சாரத்தைத் தின்கிறது. உள்ளூர் பண்பாட்டைத் தின்கிறது. கடைசியில் மொழியின் மீது வாய் வைக்கிறது. மொழியைத் தின்று செரித்துவிட்டு இந்த உலகமயமாதல் என்ற பூதம் தன்னுடைய சுவடுகளைப் பதிப்பதற்கு முயல்கிறது.

இந்தியாவில் அப்படி எந்த மொழிக்கும் ஆபத்து வரலாம். வரக்கூடும். எந்த மொழிக்கும் வரக்கூடாது என்பது நமது பொதுவான எண்ணம். தமிழ் மொழிக்கு வரக்கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். எந்த மொழியையும் உலகமயமாதல் என்ற பூதம் விழுங்கி விடக்கூடாது. எங்கள் தாழ்மொழியை விழுங்கினால், அந்த பூதத்தை விழுங்கிவிடக்கூடிய சக்தியை நம் தாய்மொழிக்கு நாம் தர வேண்டும். தமிழ் மொழியை எந்த உலகமயமாதல் பூதம், எதிர் பூதம், பிறமொழி பூதம், பண்பாட்டு பூதம் விழுங்க வந்தாலும், அந்த பூதத்தைத் தின்று செரித்து நின்று வரக்கூடிய ஆற்றலைத் தர வேண்டும் என தமிழர்கள் சபதம் ஏற்போம்.

வடமொழி, பிரிட்டீஷ், மராட்டியம், போர்ச்சுகீசியம், பிரெஞ்சு, இந்தி போன்ற எல்லாவற்றையும் கடந்து தமிழ் வந்துள்ளது. இப்போது தமிழ் தன்னைத்தானே கடக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது.

இதெல்லாம் தமிழில் இல்லை, தமிழ்மொழிக்குள்ளேயே எல்லாம் அடங்கி விட்டது என்று பூட்டுப் போட்டு விடாதீர்கள். தமிழில் எல்லாம் இருக்கிறது என்றால் கூட, அறிவியல் இல்லை. மேற்குலகத் தத்துவம், புதிய தத்துவம், கண்டுபிடிப்புகள் இல்லை. யாரோ கண்டுபிடிக்கின்றனர். அதற்கு நாம் பெயர் கண்டுபிடிக்கிறோம். பெயர் கண்டுபிடிப்பதே பெரிய போராட்டம். மொழிபெயர்ப்புகளிலும் பெரிய சிக்கல். நம்முடைய வாழ்க்கை மொழிபெயர்ப்பில் முடிந்து விடக்கூடாது. விஞ்ஞான அறிவு பெற வேண்டும் தமிழ். உலகத்துக்குள் தமிழ் வரட்டும். தமிழ் உலகத்துக்குச் செல்லட்டும். இதுதான் 21-ம் நூற்றாண்டில் நான் வைக்கும் வேண்டுகோள்".

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

தவறவிடாதீர்!

உலகத் தாய்மொழி நாள்: விழிபோல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்; முதல்வர் பழனிசாமி வாழ்த்து

குறைகள் இருந்தாலும் வேளாண் மண்டல சட்டம் வரவேற்கத்தக்கது- காவிரி டெல்டா பகுதி விவசாய சங்கங்கள் கருத்து

வேளாண் மண்டலத்தில் புதிய திட்டங்களுக்கு அனுமதி இல்லை

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு எதிரொலி- தி.மலையில் ஒரே நாளில் 5 கஞ்சா வியாபாரிகள் கைது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்