வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை அறிக்கையை அனுமதியின்றி அனுப்பியது ஏன்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை அரசுக்கு அனுப்பியது ஏன் என்றும் வேலுமணிக்கு எதிரான புகாரை கைவிடுவதாக அரசு எடுத்த முடிவை ஏன் உயர் நீதிமன்றத்தில் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி பொன்னி விசாரணை நடத்தி கடந்த ஜன.23 அன்று ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி பொதுத்துறைச் செயலர் தரப்பில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதால், அமைச்சருக்கு எதிரான விசாரணையை கைவிட கடந்த ஜன.18 அன்று அரசு முடிவெடுத்துள்ளதாகவும் எனவே, அதனடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.

அப்போது குறுக்கிட்டு அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த வழக்கில் சாட்சியாக உள்ள ஒரு ஒப்பந்ததாரரை சிலர் மிரட்டியுள்ளனர் என்றும் அமைச்சருடன், அதிகாரிகளும் கூட்டுசேர்ந்து செயல்படுகின்றனர் என்றும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி அமைச்சரின் முகவர் போல செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

அதற்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் கடும் ஆட்சேபம் தெரிவித்து அந்த வாதங்களை திரும்பப்பெற வேண்டும் எனக் கோரினார். அமைச்சர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘மாநகராட்சி டெண்டரில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என விசாரணை அதிகாரியே தெரிவித்துள்ளார்’ என்றார்.

மாநகராட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘அறப்போர் இயக்கத்துக்கும் திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பொதுநல வழக்கு என்ற பெயரில் அரசியல் ரீதியாக போர் நடத்த இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான இந்த வழக்கில், சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை, நீதிமன்றத்தின் அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன், அவ்வாறு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டது யார், வேலுமணிக்கு எதிரான விசாரணையை கைவிடுவதாக அரசு கடந்த ஜன.18 என்று எடுத்த முடிவை ஏன் கடந்த ஜன.23 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர் இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்