கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னையில் இருந்தவாறு முதல்வர் பழனிசாமி இன்று (பிப். 19) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவுக்குப் பின்னர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடியில் இப்போது தொடங்கும் அகழாய்வுப்பணிகள் வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 கிராமங்களிலும் ஒரே நேரங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெறும்.

மேலும், அத்தகைய இடங்களில் நவீன அறிவியல் தொழில்நுட்பம் தொல்லியல் எச்சங்கள் புதைந்துள்ள இடங்கள் கண்டறியப்பட்டு துல்லியமாக அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது.

மேலும் இதற்காக தமிழக அரசு முதல்கட்டமாக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. படிப்படியாகவும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது, எனத் தெரிவித்தனர்.

கீழடி கடந்து வந்த பாதை..

கீழடியில் மத்திய தொல்லியல்துறை கடந்த 2015-ம் ஆண்டு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. தொடர்ந்து 2-வது மற்றும் 3-ம் கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. 3 அகழாய்வுகள் மூலம் கீழடியில் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், அகழாய்வுப் பணிகளை மத்திய அரசு திடீரென நிறுத்திக் கொண்டது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், தமிழக தொல்லியல் துறை கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தொடர்ந்து ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தொடங்கி அக்டோபர் 2-வது வாரம் வரை நடைபெற்றது.
இதற்காக விவசாயிகள் முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 33 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்தன.

இதில் பழங்கால இரட்டை மற்றும் வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறைகிணறுகள் கண்டெடுக்கப்பட்டன.. மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்பு பொருட்கள், செப்பு, வெள்ளிக் காசுகள், தண்ணீர் குவளை, சூது பவளம், எழுத்தாணி உட்பட 750-க்கும் மேற்பட்ட பொருட்களும் கிடைத்தன.

வெளிநாட்டினர் வருகை..

ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்து கொண்டிருந்தபோதே, 4-வது கட்ட அகழாய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டது. இதன்மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்தது. இதையடுத்து கீழடி சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

மாநிலம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள், தொல்லியல் ஆர்வலர்கள், மாணவ, மாணவியர் கீழடிக்கு வந்து அகழாய்வை ஆர்வமுடன் பார்வையிட்டனர். ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் கீழடிக்கு வந்து ஆய்வு செய்தனர்.
மத்திய, மாநில அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கனிமொழி எம்பி, மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும், உயர் நீதிமன்ற நீதிபதிகளும் கீழடிக்கு வந்து பார்வையிட்டனர்.

இதையடுத்து மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்தக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் நாள்தோறும் வந்து பார்வையிட்டு சென்றனர்.

ரூ. 12.21 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில், கீழடியில் 5 கட்டங்களில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு சமீபத்திய பட்ஜெட்டில் ரூ.12.21 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
இதற்காக கீழடி அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

6-ம் கட்ட அகழாய்வு..

தற்போது, கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 6-வது கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதையடுத்து 6-ம் கட்ட அகழாய்வுப் பணியை இன்று மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி, கீழடியில் நடக்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்