'பிகில்' பட விவகாரத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், அன்புச்செழியன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதனையடுத்து நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையில் அர்ச்சனா கல்பாத்தி இன்று ஆஜரானார்.
நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களில் கடந்த 5-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்தில் ரூ.77 கோடி ரொக்கப் பணம், 1.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறை தரப்பில், “நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக ரசிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர் தரப்பில் கொண்டாடப்பட்டது. ரூ.300 கோடி வசூலானதாகக் கூறப்பட்டது. அதையொட்டி திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது” எனத் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர், நடிகர் விஜய், அவரது படத்தின் பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் இரண்டு நாட்கள் இந்தச் சோதனை நடந்தது.
வருமான வரித்துறை சோதனையில் முக்கியமான அம்சம் பைனான்சியர் அன்புச்செழியனிடம் கணக்கில் காட்டாப்படாத ரூ.77 கோடி ரொக்கப் பணம், 1.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத ரூ.160 கோடிக்கான வருமான வரியை அன்புச்செழியன் கட்டுவதாகத் தெரிவித்தார் என்று வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது.
இது தவிர இந்தச் சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், காசோலைகள், முன் தேதியிட்ட காசோலைகள் கைப்பற்றப்பட்டன. இந்த முழு சோதனையில் கிடைத்த ஆவணங்கள், சாட்சிகள் அடிப்படையில் மறைக்கப்பட்ட பணம் ரூ.300 கோடியைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இதுதவிர படத்தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர் கல்போத்தி அகோரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு அலுவலக வரவு- செலவு கணக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், வவுச்சர்கள், நடிகருக்கு வழங்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட விவரங்களை ஆராயும் பணியும் தொடர்வதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் நேரில் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரது வீட்டில் 2 நாட்கள் சோதனை நடைபெற்றது. சோதனையில் விஜய்யின் சொத்து ஆவணங்களில் அவரது முதலீடு குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும், அவருக்கு 'பிகில்' திரைப்படத்தில் தயாரிப்பாளரிடமிருந்து அளிக்கப்பட்ட சம்பளம் குறித்த விசாரணையே இந்தச் சோதனையின் முக்கிய அம்சம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.
இதுதவிர, நடிகர் விஜய் பட விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக அடையாறு சாஸ்திரி நகரில் தனியாக அலுவலகம் வைத்துள்ளார். அந்த இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு அங்கு 'பிகில்' சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் நடிகர் விஜய், கல்போத்தி அகோரம், அன்புச்செழியன், ஸ்க்ரீன் சீன் நிர்வாகி உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை இன்று ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி அனைவரும் ஆஜராக சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.
இந்நிலையில் விஜய் விசாரணையில் இன்று ஆஜராகவில்லை. பின்னொரு நாளில் ஆஜராக அனுமதிக்கும்படி விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அன்புச்செழியன் தரப்பில் வழக்கறிஞர், விஜய் தரப்பில் வழக்கறிஞர் மற்றும் ஆடிட்டர் ஆஜரானார்கள்.
நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜய்யின் வழக்கறிஞர் ஆடிட்டர், அன்புச்செழியனின் வழக்கறிஞர், ஆடிட்டர் ஆஜரானார்கள். இந்நிலையில் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் 'பிகில்' படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி ஆஜரானார். அவரிடம் பட வசூல், விஜய்க்கு அளிக்கப்பட்ட சம்பளம், படத் தயாரிப்புச் செலவு, அன்புச்செழியனின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
'பிகில்' படம் வெளியான சில வாரங்களில் அதன் தலைமைச் செயல் அதிகாரியும், தயாரிப்பாளரின் மகளுமான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் படம் மிகப் பெரிய வெற்றி எனப் பதிவிட்டிருந்தார். இதுவும் வருமான வரித்துறையினரின் விசாரணைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த விசாரணையில் நடிகர் விஜய் என்று ஆஜராவார்? ஒருவேளை அவர் ஆஜரானால் வரும் கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்பது பிரச்சினை என்பதால் அவர் ரகசியமாக வந்து செல்லக்கூடும் எனத் தெரிகிறது. இல்லாவிட்டால் அவருக்கு விதிவிலக்கு எதுவும் அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தவறவிடாதீர்!
சிறப்பு வேளாண் மண்டலம் அறிவிப்பு: விவசாயிகளை ஏமாற்றும் நாடகம்; ஸ்டாலின் விமர்சனம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago