பாமகவின் வேளாண் நிழல் பட்ஜெட்டின் 95 அம்சங்கள்: 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்; வேளாண் துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

பாமகவின் 2020-2021 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று (பிப்.11) வெளியிடப்பட்டது.

அதன் முக்கிய அம்சங்கள்:

1. பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுதான் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மையக்கரு ஆகும். அதன்படி, 2020-21 ஆம் ஆண்டு வேளாண்மை - தோட்டக்கலை வேலைவாய்ப்புப் பெருக்க சிறப்பு ஆண்டாக அறிவிக்கப்படுகிறது.

50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

2. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

3. கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்குவார்கள். இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

4. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக, தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.

5. கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், வான்கோழிகள், மீன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். பட்டதாரி இளைஞர் குழுக்கள் மூலம் முக்கிய நகரங்களிலும், சாலையோரங்களிலும் நவீன உணவகங்கள் அமைக்கப்பட்டு, சுய உதவிக் குழுக்கள் வளர்க்கும் ஆடுகள், கோழிகள், மீன்கள் ஆகியவை சுவையாக சமைத்து வழங்கப்படும். இதனால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சிறப்புத் திட்டம்

6. வேளாண்மையை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

7. மழை, வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, அவற்றுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நிரந்தர தீர்வுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்க வகை செய்யப்படும்.

8. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.90 ஆயிரம், நிலக்கடலைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

9. பிற பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

10. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆகவும், ஒருநாள் ஊதியம் ரூ.275 ஆகவும் உயர்த்தப்படும்.

காலநிலை மாற்ற அவசரநிலை

11. காலநிலை மாற்ற அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்படும். காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை சமாளிப்பதற்கான செயல்திட்டம் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்படும்.

12. காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக திறன்மிகு வேளாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

13. காலநிலைக்கு ஏற்ற திறன்மிகு வேளாண்மை முறையை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்காக வேளாண்மை, சுற்றுச்சூழல், வருவாய், நிதி ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும்.

14. ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் தமிழக அரசின் மூலதன மானியத் திட்டத்துடன் மத்திய அரசின் மானியத்திட்டத்தையும் இணைத்துச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

15. தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம், இரண்டு ஏக்கருக்கு ரூ.26 ஆயிரம், மூன்று ஏக்கருக்கு ரூ.36 ஆயிரம், நான்கு ஏக்கருக்கு ரூ.46 ஆயிரம், ஐந்து ஏக்கருக்கு ரூ.56 ஆயிரம் வீதம் மூலதன மானியம் வழங்கப்படும். 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அடையாள உதவியாக ரூ.20 ஆயிரம், இருசம தவணைகளில் வழங்கப்படும்.

16. இதன் மூலம் இந்தியாவில் விவசாயிகளுக்கு மிக அதிக நிதியுதவி வழங்கும் மாநிலம் என்ற பெருமையையும், அனைத்து நிலை விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்கும் மாநிலம் என்ற பெருமையையும் தமிழ்நாடு பெறுகிறது.

17. விவசாயிகளுக்கு வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனைச் செலுத்தும் விவசாயிகளுக்கு 10%, அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் என்ற அளவில் வட்டிமானியம் வழங்கப்படும்.

கரும்பு சாகுபடிக்கு புத்துயிரூட்டும் திட்டம்

18. தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் கடந்த 10 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. 2019 - 20 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 5 லட்சம் டன்னுக்கும் குறைவு ஆகும். இந்த நிலையை மாற்றி, அடுத்த 3 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

19. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.1,500 கோடி வரும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடியை வட்டியில்லாக் கடனாக வழங்கும்.

20. சர்க்கரை ஆலைகளின் பிற கடன்களைச் சமாளிப்பதற்காக அவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து குறைந்த வட்டியில் தமிழக அரசு கடன் பெற்றுத் தரும்.

21. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் 10% பிழிதிறன் கொண்ட கரும்புக்கு, கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை மேம்பட மேம்பட கரும்புக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்படும். இதை அரசு கண்காணிக்கும்.

ஆண்டுக்கு 6% வேளாண் வளர்ச்சி - வல்லுநர் குழு

22. வேளாண் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன், ஆண்டுக்கு 6% வேளாண் வளர்ச்சியை எட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குழு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

23. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும். வேளாண் பணிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.

24. வேளாண் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் சிறிய பங்கு வழங்கப்படும். மீதமுள்ள ஊதியத்தை அரசு வழங்கும்.

கோடை காலத்திலும் சாகுபடி - புரட்சிகர நீர் செறிவூட்டும் திட்டம்

25. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதன் மூலம், கோடை காலங்களிலும் விவசாயம் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் புரட்சிகரமான நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

26. இதற்காக அனைத்து சிற்றாறுகள் மற்றும் ஓடைகளை அரை கிலோ மீட்டருக்கு ஒரு சிறிய தடுப்பணை அமைத்து, அவற்றில் 200 அடி ஆழத்திற்கு நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கப்படும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கோடைகால சாகுபடிக்கு உதவியாக இருக்கும்.

27. தனியார் நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீர், பிற நிலங்களில் சாகுபடி செய்யப் பயன்படுத்தப்படும்.

கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டம்

28. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும். இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், தேவையான அனுமதிகளைப் பெறுதல் ஆகிய பணிகளை மத்திய அரசு அடுத்த ஓராண்டுக்குள் முடிப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்.

29. காவிரி - கோதாவரி இணைப்புக்கான கட்டுமானப் பணிகள் 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்யும்.

30. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தி முடிக்கப்படும்.

31. மேட்டூர் அணையின் உபரி நீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 10 பாசன ஏரிகளில் நிரப்பும் திட்டம் விரிவுபடுத்தப்படும். காவிரி, சரபங்கா - திருமணி முத்தாறு இணைப்புத் திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம்

32. 2020-21 ஆம் ஆண்டு முதல் 2023-24 வரை நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும். இதன் மூலம் தமிழகத்தின் பாசனப் பரப்பை இப்போதுள்ள 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு மற்றும் நோக்கம் ஆகும்.

புதிய பாசனத் திட்டங்கள்

33. பாலாறு பாசனத் திட்டம்: பாலாற்றில் வீணாகும் நீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, பாலூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அடுத்தகட்டமாக காஞ்சிபுரம் வட்டம் பெரும்பாக்கம்; உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல்; செங்கல்பட்டு வட்டம் ஆலப்பாக்கம்; மதுராந்தகம் வட்டம் எல்.என்.புரம் என, நான்கு இடங்களில் தடுப்பணை கட்டப்படும். இத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

34. தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறு நதிகளை இணைப்பதன் மூலம், வீணாகும் தண்ணீரை தேக்கி ராதாபுரம், நாங்கு நேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு சென்று பாசனத்திற்காக பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

35. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்: கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறுமையைப் போக்குவதற்காக 69 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட திட்டம் தான் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். காவிரி, அக்கினியாறு, கோரையாறு, பாம்பாறு, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். ரூ.4,500 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

36. தென்பெண்ணை - துரிஞ்சலாறு இணைப்பு: நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாக திகழ்வது துரிஞ்சலாறு ஆகும். துரிஞ்சலாறு ஒரு காட்டாறு என்பதால் மழைக்காலத்தில் மட்டும் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். இது நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதல்ல. நந்தன் கால்வாய் திட்டம் முழுமையான பயனளிக்க வேண்டுமானால், தென்பெண்ணையாற்றுடன் நந்தன் கால்வாயை இணைப்பது தான் சிறந்த வழியாகும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தடுப்பணைகளால் செழிக்கும் தமிழ்நாடு

38. கொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில், நிறைவடையும். அத்தடுப்பணையில், 3 டிஎம்சிக்கும் கூடுதலான நீரைச் சேமிக்க முடியும். அந்த நீரைக் கொண்டு ஒரு லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

39. கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் மொத்தம் 10 தடுப்பணைகள் கட்டப்படும்.

39. காவிரியில் தடுப்பணை: காவிரி மற்றும் அதன் கிளை நதிகளான அரசலாறு, திருமலைராஜன் ஆறு, குடமுருட்டி ஆறு, வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் திறந்து விடப்படும் தண்ணீரில் பெரும்பகுதி வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்படும்.

40. 56 டிஎம்சி தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள்: கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு ஆகிய 5 ஆறுகள் கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டுவதன் மூலம் 56 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும்.

பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி

41. பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.22 ஆயிரம் கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்தத் தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு வட்டியுடன் சேர்த்து 5 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம்

42. விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.

43. வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தில் மாநில நிதித்துறை, வேளாண்துறை, உணவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

44. பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு லாபம் சேர்த்து, கொள்முதல் விலையை விளைபொருள் விலைநிர்ணய ஆணையம் தீர்மானிக்கும்.

வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம்

45. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவு தானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.

46. 2020-21 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.4,000 ஆக நிர்ணயிக்கப்படும். தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வேளாண் விலை பொருள் கொள்முதல் வாரியம் மூலமாகவே விவசாயிகள் கரும்பு வழங்க முடியும். கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட 30 நாட்களில் கொள்முதல் வாரியம் மூலமாகவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கொள்முதல் விலை வரவு வைக்கப்படும்.

47. 2020-21 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2,806.98 என நிர்ணயிக்கப்படும்.

ஹைட்ரோகார்பன் திட்டம் இல்லா தமிழ்நாடு

48. தமிழ்நாட்டில் சுமார் 7 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், காவிரிப் பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது. எனவே, தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த அரசு அனுமதிக்காது. தமிழகம் ஹைட்ரோகார்பன் திட்டம் இல்லாத மாநிலமாக திகழும்.

49. தமிழ்நாட்டில் எண்ணூர் - நாகப்பட்டினம், நாகப்பட்டினம் - மதுரை, நாகப்பட்டினம் - தூத்துக்குடி, திருவள்ளூர் - பெங்களூரு ஆகிய 4 வழித்தடங்களில் 1,175 கிலோமீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய்ப் பாதை அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் இதற்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

50. இத்திட்டத்தை மாற்றியமைத்து விளைநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்தால், அதற்கு அனுமதி தருவது குறித்து அரசு ஆராயும்.

51. கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சேலம், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பாதை அமைக்கும் திட்டமும் வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்திட்டத்தின் பாதையையும் மாற்றி அமைக்கும்படி மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக்கொள்ளும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

52. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரிப் பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகியவையும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும்.

53. இந்த மாவட்டங்களில் பூமிக்கு அடியில் மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களும், கனிமங்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவற்றை எடுப்பதற்காக வேளாண் விளை நிலங்களை நாசமாக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முயற்சிகள் முறியடிக்கப்படும்.

சேலத்தில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்

54. சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் புதிய தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.

55. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்புப் பண்ணையில் புதிய பட்டுப்புழு வளர்ப்புக் கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.

56. தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் விளையும் மானாவாரி தக்காளி மற்றும் வாழை ரகங்களை மேம்படுத்தி புதிய ரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்வற்றால் ஈடுபட மேச்சேரியில் மானாவாரிப் பயிர்களுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

வேளாண் கல்வி - 3 புதிய பல்கலைக்கழகங்கள்

57. தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக்கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி

58. நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளுடன் இணைந்து, அப்பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும்.

59. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எண்ணெய் வித்து ஆராய்ச்சி மையத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும். இது வடமாவட்டங்களில் அமைக்கப்படும் 2-வது வேளாண் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கும்.

60. வேளாண் வருமானத்தை பெருக்கத் திட்டம்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்குதல், நிலங்களின் அளவுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட வருமானம் கிடைக்க வகை செய்தல், துல்லிய பண்ணைத் திட்டத்தின் மூலம் வருவாயைப் பெருக்குதல், விவசாயிகளுக்கு கடன் வழங்க நபார்டு வங்கியில் தனி அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

61. வருவாய் வாய்ப்புகளை விரிவாக்க வேளாண்மையை மறுவரையறை செய்தல்: விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கடலோரப்பயிர் வளர்ப்பு, பால்பொருள் உற்பத்தி, கோழி வளர்ப்பு ஆகியவற்றை செய்தல், தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல், மதிப்பு கூட்டு பணிகளை செய்தல் ஆகியவற்றின் மூலம் வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல்.

62. வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல்: நவீன தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல், அறிவியல் அடிப்படையிலான பண்ணை மேலாண்மை ஆகியவற்றின் மூலம் அதிக விளைச்சல், சிறந்த தரம், தகுதியான விலை ஆகியவற்றுக்கு வழிகோலும் வகையில், வேளாண்மையை ஒரு தொழில் வடிவமாக்குவதே இந்த கொள்கையின் நோக்கம் ஆகும்.

63. தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரு நிறுவனங்கள் நிலம் குவிப்பதைத் தடுப்பது, நிலங்களை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள், சீரமைக்கப்பட வேண்டிய பகுதிகள், நிலைத்த ஆற்றல் வேளாண்மை செயல்பாட்டுக்கான பகுதிகள், தொழில்துறை பயன்பாடு மற்றும் வேளாண்மை சாராத பயன்பாட்டுக்கான பகுதிகள் என பிரித்தல், இவற்றில் கடைசி பகுதி தவிர மீதமுள்ள அனைத்துப் பகுதிகளையும் விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.

64. முதல்நிலை வேளாண்மையை மாற்றியமைத்தல்: மண்வள நிலைகுறித்த வரைபடம் தயாரிக்கப்படும், சிறு-குறு நிலங்களின் மண்வளத்தை மீட்டெடுத்தல், அவற்றின் அடிப்படையில் எந்தப் பகுதியில் எந்தப் பயிரை அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானித்தல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

65. விரிவாக்க செயல்பாடுகளை ஊரக வளர்ச்சியுடன் இணைத்தல்: நபார்டு வங்கியால் அமைக்கப்பட்ட ஊரக வணிக நடுவத்தின் மூலம் சந்தை மற்றும் தொழில் நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண்பது தான் இந்த கொள்கையின் அடிப்படை ஆகும்.

66. உணவு தன்னிறைவு: உபரி விளைச்சலை இழப்பாக மாறாமல் தடுத்தல், விலை மாற்றங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு தானியத்தின் விலைகள் நியாயமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவையே உணவு தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான உத்திகளாக இருக்கும்.

67. ஊரக பொருளாதார மறுமலர்ச்சிக்கான மும்முனைத் திட்டம்: சிறப்பு வேளாண்-பொருளாதார மண்டலங்களை அமைத்தல், கைவினைஞர்களின் தொழிற்பட்டறைத் தொகுப்புகளை அமைத்தல், ஊரகத் தகவல் தொடர்பு முன்முயற்சிகள் ஆகியவையே வளர்ச்சிக்கான மும்முனை திட்டங்கள்.

வேளாண்துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

68. வேளாண்மைக்குத் தேவையான இடுபொருட்களை வாங்க வசதியாக சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, பருவத்திற்கு ரூ.5,000 வீதம் மூலதன மானியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக நடப்பாண்டில் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.50 ஆயிரம் கோடியாக இருக்கும்.

69. மாவட்டம் தோறும் வேளாண்மை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையும் வேளாண் பொருட்களைச் சார்ந்து இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். உற்பத்தியில் தொடங்கி, மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி வரை அனைத்துப் பணிகளும் இங்கு நடைபெறும். இதன் மூலம் அப்பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

மணல் குவாரிகள் மூடல்

70. தமிழ்நாட்டில் விவசாயத்தைப் பாதுகாப்பதற்காக மணல் குவாரிகளை மூடுவது என்று தமிழக அரசு ஏற்கெனவே கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனினும், ஒரே நேரத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டால், கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக எம்-சாண்ட் ஆலைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தேவைக்கு ஏற்ற அளவுக்கு தர உறுதி செய்யப்பட்ட எம்-சாண்ட் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

71. இத்தகைய சூழலில் மணல் குவாரிகள் மூடப்பட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்துக் குவாரிகளும் உடனடியாக மூடப்படுகின்றன.

72. தஞ்சையில் நெல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்

73. சர்க்கரைத் தொழில்நுட்பம் என்ற புதிய பட்டப்படிப்பு தொடங்கப்படும்.

74. உளுந்து, துவரை, பாசிப்பயறு உள்ளிட்ட பருப்பு வகைகளை அதிக எண்ணிக்கையில் பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் தமிழகத்தில் பருப்பு விலைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க சிறப்புச் சட்டம்

75. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கும் சுற்றுச்சூலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதற்காக சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை 27.02.2017அன்று ஆணையிட்டிருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே இச்சட்டம் நிறைவேற்றப்படும்.

76. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதைவிட, அடியோடு அழிப்பதுதான் நிரந்தரத் தீர்வு ஆகும். பிரேசில், ஆஸ்திரேலியா, சிரியா ஆகிய நாடுகளில் கருவேல மரங்கள் ஒழிக்கப்பட்டு வருவதால், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

77. யூகலிப்டஸ் தைல மரங்களும், சீமைக் கருவேல மரங்களுக்கு இணையாக நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை வளர்க்கத் தடை விதிக்கப்படும்.

பனை மரம் பாதுகாப்புக்கு புதிய சட்டம்

78. அழிந்து வரும் கற்பக விருட்சமாம் பனை மரங்களை வெட்டத் தடை விதிக்கப்படும். செம்மரங்கள், சந்தன மரங்களை வீடுகளில் வளர்த்தாலும், அவற்றை வெட்டுவதற்கு வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதைப் போல பனை மரத்தை வெட்டவும் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்குவதை கட்டாயமாக்கி புதிய சட்டம் இயற்றப்படும்.

79. தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

வேளாண்மைக்கு இலவச இடுபொருட்கள்

80. வேளாண்மைக்கான இடுபொருட்களை இலவசமாக வழங்குவதே அரசின் கொள்கை. அதற்காகவும் விவசாயிகளுக்கான பிற செலவுகளுக்காகவும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மூலதன மானியம் வழங்கப்படும்.

அதேநேரத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் குறித்து ஆலோசனை தர கீழ்க்கண்ட சேவைகள் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் நிலங்களின் தன்மை ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் என்னென்ன பயிரிடலாம், அவற்றுக்கு எவ்வளவு உரம் தேவை என்ற விவரங்கள் அடங்கிய அட்டை வழங்கப்படும்.

* அந்த அட்டையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் பயிரிட விரும்பும் பயிர்களுக்கான விதைகள், வேளாண் விரிவாக்க மையங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

* விவசாயிகள் பயிரிடும் பயிருக்கு ஏற்ப தேவைப்படும் அளவுக்கு உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும், பரிந்துரைக்கப்பட்ட அட்டவணைப்படி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும்.

* உழவு செய்வதற்கான டிராக்டர்கள், அறுவடை செய்வதற்கான இயந்திரங்கள் ஆகியவை விவசாயிகள் விரும்பும் நாட்களில் ஊராட்சி மன்றங்கள் மூலம் வாடகையின்றி வழங்கப்படும்.

புதிய வேளாண் சந்தைக் கொள்கை - தனி அமைச்சகம்

81. கர்நாடகத்தில் உள்ளது போல தமிழகத்திலும் வேளாண் சந்தைக் கொள்கை உருவாக்கி வெளியிடப்படும். வேளாண் சந்தைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு அமைச்சர் நியமிக்கப்படுவார்.

82.டெல்லி, பெங்களூருவில் செயல்படுவது போன்று திருச்சியில், சஃபல் சந்தை தொடங்கப்படும். இதன் மூலம் விளைப்பொருட்களை மின்னணு ஏலமுறையில் விற்பனை செய்யப்படும்.

83. வட்டம் மற்றும் மாவட்ட அளவில் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அந்த கூட்டமைப்பின் தலைமைக் குழு அன்றாடம் அந்த வட்டத்தில் அறுவடையாகும் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும். அந்த கூட்டமைப்பு மூலமாகவே விற்பனைகள் செயல்படுத்தப்படும்.

84. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும். நகரங்களில் இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பதற்கு தனி அங்காடிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

இலவச பேருந்து வசதி

85. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும்.

86. விவசாயிகள் தாங்கள் விளைவித்தப் பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக, இரவு 8 மணிக்குப் பிறகு அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

87. தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

வேளாண்மை - 4 அமைச்சகங்கள்

88. தமிழ்நாட்டில் வேளாண் துறை சார்ந்த பணிகளைக் கவனிக்க வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் சந்தைத்துறை, நீர்வள மேலாண்மை என மொத்தம் 4 அமைச்சகங்கள் செயல்படும். ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் தனித்தனி அமைச்சர்கள் என மொத்தம் 4 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்.

89. நாட்டுக் கோழிகள், ஆடுகள், வான் கோழிகள் போன்றவை கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் மூலம் வளர்க்கப்பட்டு பட்டதாரி இளைஞர் குழுக்கள் மற்றும் கூட்டுறவுத் துறை பங்களிப்புடன் முக்கிய நகரங்கள், சாலையோர உணவகங்கள் அமைக்கப்பட்டு கிராமங்களில் ஒரே இடத்தில் அனைத்தும் சமைக்கப்பட்டு கூட்டுறவு முறை உணவகங்களுக்கு ஒரே ருசியில் வழங்கப்படும்.

90. சாலையோரங்களில் கூட்டுறவு உணவகங்கள் மூலம் தரமான உணவு, மலிவான விலையில் வழங்கப்படுவதால், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோர் தரமற்ற, சுகாதாரமற்ற, சுவையற்ற உணவுகளை அதிக விலைகொடுத்து உண்ணும் அவலநிலை மாறும்.

91. புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்புச் சத்து குறைந்த இறைச்சியான முயல் கறியை பிரபலப்படுத்தி, அதிக கொழுப்புச் சத்து மிகுந்த ஆடு, மாடு இறைச்சியின் பயன்பாடு குறைக்கப்படும்

92. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவீன மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விரும்பும் மாடுகள் எண்ணிக்கையில் வாங்கி மாட்டுப் பண்ணைகளில் ஒப்படைத்து விட்டால், அவர்களே 1000 மாடுகளை நவீன தொழில்நுட்பத்துடன் வளர்த்து அதில் கிடைக்கும் பாலினை உள்நாட்டுத் தேவைக்கு போக மீதமுள்ளதை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் அதிக வருவாய் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

93. உழவர்களின் நிலங்களில் அவர்களின் நில அளவுக்கு ஏற்றாற்போல் தனியார் பங்களிப்பு மற்றும் அரசு மானியத்துடன் குட்டைகள் தோண்டப்பட்டு, மீன் வளர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

94. தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

95. வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 69 தலைப்புகளில் 265 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பாமகவின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பாமகவின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

தவறவிடாதீர்

தங்கத்தின் விலை குறைந்தது; இன்றைய நிலவரம் என்ன?

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சிறப்பு வேளாண் மண்டலம்: முதல்வருக்கு நேரில் நன்றி தெரிவித்த நெடுவாசல் போராட்டக் குழுவினர்

ராஜீவ் காந்தி சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்றுக: மத்திய அமைச்சரிடம் தமிழச்சி தங்கபாண்டியன் மனு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்