தருமபுரம் ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தர் மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் அமர்ந்து பவனி வரும் பட்டினப் பிரவேசத்தை மீண்டும் தொடங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் தருமபுரம் 26-வது ஆதீனம் ல சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த டிச. 4-ம் தேதி முக்தியடைந்தார். இதைத்தொடர்ந்து, 27-வதுஆதீனகர்த்தராக ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த டிச.13-ம்தேதி ஞானபீடம் ஏற்றார். அன்று தருமபுரத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசத்தில் வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் வீதியுலா வந்தார். இந்தப் பல்லக்கை பக்தர்கள் சுமந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, டிச. 24-ம் தேதி வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலுக்குச் சென்றபோதும், புதிய ஆதீனகர்த்தர் வெள்ளிப் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் சென்றார். இந்தப் பல்லக்கையும் பக்தர்கள் சுமந்து வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் கும்ப மரியாதை அளித்து, ஆசி பெற்றனர்.
இந்நிலையில், வரும் பிப்.12-ம் தேதி திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு வரும் புதிய ஆதீனகர்த்தருக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் நடத் தப்பட்ட முறைப்படி பட்டினப் பிரவேசத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திராவிடர் கழகம் எதிர்ப்பு
இதற்கிடையே மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் நடத்தக் கூடாது. மீறி நடைபெற்றால் திராவிடர் கழகம் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என அதன் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடந்த பிப். 6-ம் தேதி அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்ட, மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப் பிரவேசம் என்ற,மனித உரிமையை சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியை தருமபுரம் புதிய ஆதீனகர்த்தர் புதுப்பித்து வருகிறார். பிப். 12-ம் தேதிதிருப்பனந்தாளில் புதிய ஆதீனகர்த்தருக்கு பட்டினப் பிரவேசம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு இதே தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசத்தை தடுப்பது என திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தலையீட்டின்பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடத்தப்பட்டு, அதன் பின்னர் நிறுத்தப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனத்திலும் பட்டினப் பிரவேசம் நிறுத்தப்பட்டுவிட்டது.
எனவே, பிப். 12-ம் தேதி தருமபுரம் புதிய ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமக்கும் பட்டினப் பிரவேசத்தை கைவிட வேண்டும். இல்லையேல் திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
பழமையான மரபுதான்
இதுகுறித்து தருமபுரம் ஆதீன வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியது: ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் ஆதீனத்தை நிறுவிய குருஞான சம்பந்தரின் குருபூஜையின்போது, ஆதீனகர்த்தர்கள் பல்லக்கில் செல்லும் பட்டினப் பிரவேசம் நடைபெற்று வந்தது.
இதற்கு எதிர்ப்புகள் எழுந்ததால், குருஞான சம்பந்தரின் விக்ரகம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதை பல்லக்கில் வைத்து கடந்த சில ஆண்டுகளாக வீதியுலா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின்போது முன்பிருந்த ஆதீனகர்த்தர் பல்லக்குக்கு முன்பாக நடந்து வருவார்.
தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வரும் கோயில்களுக்குச் செல்லும் புதிய ஆதீனகர்த்தர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், பல்லக்கில் சுமந்து செல்லும் பட்டினப் பிரவேசம் என்பது வழக்கமாக ஆதீனங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுதான். ஆதீனகர்த்தர் செல்லும் இடங்களில் உள்ள மக்கள் விருப்பத்துடன்தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்றனர். எஸ்.கல்யாணசுந்தரம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago