அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டிய குரூப்-1 தேர்வு முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.7) வெளியிட்ட அறிக்கையில், "டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதனைப் பார்த்து தலைகுனிய வேண்டிய தமிழக அரசும், அமைச்சர்களும் சிறிதும் நாணமின்றி நடமாடி வருகிறார்கள். குரூப்-4 மற்றும் குரூப்-2 ஏ ஆகியவை குறித்த செய்திகளை வெளியிட்டு, 'தமிழக அரசு நியாயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது' என்ற மாயமானதும், பொய்யானதுமான தோற்றத்தை உருவாக்கிட அரும்பாடுபட்டு வருகிறார்கள்.
இந்த ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டியது குரூப்-1 தேர்வில் நடந்த முறைகேடு ஆகும். இந்த ஊழலை அப்படியே மறைக்க தமிழக அரசு ஆலாய்ப் பறக்கிறது. ஆளும் கட்சி சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களைக் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்ட விரும்புகிறேன்.
குரூப்-1 தேர்வு 2016-ல் நடைபெற்றது. அதில் தேர்வு எழுதிய ஒருவரின் விடைத்தாள், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. இதனைப் பார்த்த தேர்வாளர் சொப்னா என்பவர், புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2017-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் தொடர்புடைய டிஎன்பிஎஸ்சி ஊழியர்களான சிவசங்கரன், பெருமாள், புகழேந்தி ஆகியோர் கைதானார்கள். விடைத்தாளில் முறைகேடு செய்ததாக ராம்குமார் என்பவரும், குமரேசன் என்பவரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கத் தொடங்கியபோது, மலையளவு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை நான் சொல்லவில்லை. இந்த வழக்குத் தொடர்பாக விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாரே நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ளார்கள்.
மத்தியக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த விசாரணை அதிகாரி செங்குட்டுவன், நீதிமன்றத்துக்குக் கொடுத்த அறிக்கையில் சொல்லி இருப்பதாவது:
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்த தேர்வர்களான 74 பேரில், 62 பேர் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று முறைகேடாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது பற்றி உயர் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அது சம்பந்தமான காவல் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்விசாரணையில் மனித நேயம் மற்றும் அப்போலோ பயிற்சி மையத்தின் இயக்குநராகச் செயல்பட்டு வரும் சாம் ராஜேஸ்வரன் என்பவர் தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் பல முறைகேடுகள் செய்திருப்பதாகத் தெரியவந்தது.
விசாரணையில் சாம் ராஜேஸ்வரன் தேர்வாணையத்தில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு கேள்வித் தாள்களைத் தயாரிக்கும் பணியில் சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்களுடனும் மற்றும் போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்களுடனும் தேர்வாணையத்தில் பணிபுரியும் சில ஊழியர்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டு பல தேர்வாணைய முறைகேடுகள் செய்திருப்பதாக அவர்கள் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரியவந்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இவரின் அப்போலோ பயிற்சி மையத்தை 18.1.2018 அன்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்கிறார்கள். பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். அந்த ஆவணங்கள் இவர்கள் குற்றம் இழைத்திருப்பதற்கு ஆதாரமாக உள்ளதாக போலீஸ் அறிக்கை சொல்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இவர்களுக்கு உதவி செய்ததாக காசி ராம்குமார் என்ற டிஎன்பிஎஸ்சி அலுவலரும் கைது செய்யப்படுகிறார். மனிதநேயம், அப்போலோ ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டு, விசாரணை செல்வதை விரும்பாத தமிழக அரசு மேலிடம், அதுவரை விசாரணை செய்து வந்த போலீஸ் அதிகாரிகள் குழுவைக் கலைத்து விடுகிறது. இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மாற்றப்படுகிறார்.
2017-ம் ஆண்டு பதிவான வழக்கு 2018-ம் ஆண்டு ஜனவரியில் முடக்கப்பட்டது. ஓராண்டு கழித்து 2019-ம் ஆண்டு ஜூன் 18 அன்று விசாரணை அதிகாரியான உதவி கமிஷனர் சுந்தரவதனன் ஒரு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அவரும் சில உண்மைகளை வெளியில் கொண்டு வருகிறார்.
1. வெற்றி பெற்ற 74 பேரின் விடைத்தாள்களை ஆராய்ந்து பார்த்ததில் 3 விடைத்தாள்கள், ஒரே நபரின் கையெழுத்தில் உள்ளது.
2. வெற்றி பெற்ற 74 பேரில் 65 பேர் ஒரே சென்டரில் படித்துள்ளார்கள். எனவே இந்த சென்டரில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி விட்டோம்.
என்று இவரும் அறிக்கை தருகிறார். உடனடியாக விசாரணை அதிகாரி சுந்தரவதனன் மாற்றப்படுகிறார். புதிதாக உதவி கமிஷனர் சுப்பிரமணிய ராஜூ என்பவர் நியமிக்கப்படுகிறார். இவர் தான் இறுதி அறிக்கையை முன்வைக்கப் போகிறார் என்று தகவல்கள் வருகின்றன.
யாரோ ஒரு மாணவர், இம்மாதிரியான முறைகேட்டில் இறங்க முயற்சித்ததாகவும், அதில் தோல்வி அடைந்த காரணத்தால், விரக்தியால் இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்பி, தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு விடைத்தாளைத் தயாரித்து அனுப்பியதாகவும் சொல்லி, இந்த வழக்கை மூடி முடித்து வைப்பதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
மூன்று விசாரணை அதிகாரிகளை மாற்றி, மூன்று நீதிபதிகள் மாறும் வரை காத்திருந்து, தமிழக அரசு செய்த தில்லுமுல்லான காரியங்கள் அனைத்தும், ஆளும்கட்சிக்கு சார்பான ஒரு சில நபர்களைக் காப்பாற்றுவதற்குத் தான் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.
குரூப்-1 தேர்வில் நடந்த அனைத்து முறைகேடுகளும் விரைவில் வெளிச்சத்துக்கு வர வேண்டும். 2017-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரச்சினையில் தொடர்புடைய மனிதநேயம், அப்போலோ நிறுவனங்கள், விருப்பு வெறுப்பின்றி நியாயமாகவும் முழுமையாகவும் விசாரிக்கப்பட வேண்டும்.
'டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான்' என்று பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர முன்வருவாரா?" என ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
தவறவிடாதீர்!
குரூப்-2 முறைகேட்டில் கைதான பதிவுத் துறை அலுவலர்கள் 6 பேரும் சஸ்பெண்ட்
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago