9 மற்றும் 10-ம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றலுக்கு ஏழ்மை, பொருளாதார சூழ்நிலைகள் காரணம் என்று கூறப்பட்டிருந்தாலும், பள்ளிக் கல்வியை வழங்குவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? என ஆய்வு செய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
“கடந்த மூன்று வருடங்களில் 9 மற்றும் 10-ம் வகுப்பு கல்வியைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் (இடை நிற்றல்) எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்து விட்டது” என்று, அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்விக்கு ஏற்பட்டு வரும் பரிதாபகரமான நிலை குறித்து, நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்வித்துறை கீழிருந்து மேல்வரை அதிமுக ஆட்சியில் எந்த அளவு மிக மோசமான சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு புதிய ஆதாரம் எதுவும் தேவையில்லை.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 2017-18ல் மட்டும் 16 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியிருக்கிறார்கள் என்றும் - அதிலும் குறிப்பாக 2015-16ல் 8 சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதமாக அதிகரித்திருக்கிறது என்றும் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், சட்டப்பேரவையில் அளிக்கும் கொள்கை விளக்கக் குறிப்புகளில் “புள்ளி விவரங்களை” எப்படி பொய்யாக இந்த அதிமுக அரசு கூறுகிறது என்ற “பூனைக்குட்டி” வெளியே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
பள்ளிக் கல்வித்துறையின் முக்கியக் குறிக்கோள்களில் “இடை நிற்றலை முழுவதுமாகக் குறைத்து 100 விழுக்காடு தக்க வைத்தல்” என்று பகட்டாக ஒவ்வொரு கொள்கை விளக்கக் குறிப்பிலும் குறிப்பிடும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், எப்படி இவ்வளவு சதவீத மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டுச் சென்றதைக் கண்டு கொள்ளாமலும் கவலை கொள்ளாமலும் இருந்தார்?
இடை நிற்றல் “2015-16ல் 3.76 சதவீதம்”, “2016-17ல் 3.75 சதவீதம்”, “2017-18ல் 3.61 சதவீதம்” என்று எப்படி ஒரு பொய்யான தகவலைச் சட்டப்பேரவையில் வைத்த கொள்கை விளக்கக் குறிப்புகளில் அதிமுக ஆட்சி தெரிவித்தது?
“இலவச மற்றும் கட்டாயக் கல்வியுரிமை” சட்டத்தினால் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் இடை நிற்றல் குறைந்தது. அதையும் சிதைக்கவே அந்த வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அதிமுக அரசு அறிவித்தது. திமுக கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு- அந்தப் பொதுத் தேர்வு கைவிடப்பட்டிருக்கிறது.
9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றல் சதவீத உயர்வை அப்படியே மறைத்து, பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்தார்.
பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முதலில் செயல்படுத்திட வேண்டும் என்ற மோகத்திலும், வேகத்திலும், 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடர்ந்திருந்தால் எத்தகைய பாதிப்புகளை மாணவர் சமுதாயம் சந்திக்க நேர்ந்திருக்கும்? அது பற்றிய கவலை எல்லாம் பள்ளிக் கல்வி அமைச்சருக்கும் இல்லை. முதல்வருக்கும் இதைப் பற்றியெல்லாம் ஆலோசிக்க நேரமில்லை.
ஆகவே 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றலுக்கு ஏழ்மை, பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணம் என்று கூறப்பட்டிருந்தாலும், பள்ளிக் கல்வியை வழங்குவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டுச் செல்வதற்கு அவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள வேலை இழப்பு காரணமா? என்பது போன்றவற்றை ஆய்வு செய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனைக் கேட்டுக் கொள்கிறேன்.
எதிர்காலத்தில் ஆரம்பக் கல்வியிலோ, இடைநிலைக் கல்வியிலோ, மேல்நிலைக் கல்வியிலோ ஒரு மாணவர் கூட பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் அபாயகரமான மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் எழாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டின் வளர்ச்சியும், தமிழகத்தின் முன்னேற்றமும் எதிர்காலத் தலைமுறையாக உள்ள மாணவர் சமுதாயத்திடம்தான் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து, எவ்விதத் தாமதமுமின்றி அதிமுக அரசு செயல்பட வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago