அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: கடந்து வந்த பாதை 

By மு.அப்துல் முத்தலீஃப்

அயனாவரம் சிறுமி 17 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருக்கு 7 ஆண்டும், ஒருவருக்கு 5 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கு கடந்து வந்தபாதை சற்று திரும்பிப் பார்ப்போம்.

பொதுவாக அமைதியான மாநிலம் என பெயரெடுத்த தமிழகத்தில் கொடூரமான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாகவே நடந்துள்ளது. சில அரிய வழக்குகள் மட்டுமே கொடூரமாக நடந்துள்ளது சட்டத்தில் பதிவாகியுள்ளது. ஆனால் சிறுமி ஒருத்திக்கு 17 மனித மிருகங்களால் நடந்த கொடுமை அதுவும் தலைநகர் சென்னையில் அயனாவரத்தில் நடந்த அந்தக்கொடூரம் தமிழகத்தையே உலுக்கியது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி அயனாவரம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸார் முன் சிறுமி ஒருத்தியைஅ அழைத்துக்கொண்டு வடமாநில இளம்பெண் ஆஜரானபோது சாதாரண வழக்கு என்றுதான் போலீஸார் நினைத்தனர். அழுதுக்கொண்டே இளம்பெண் சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை கேட்க கேட்க போலீஸார் அதிர்ந்துப்போயினர்.

இப்படிக்கூட நடக்குமா என்னம்மா சொல்கிறாய் என் பெண் ஆய்வாளர் விஜயசந்திரிகா அதிர்ச்சியால் கேட்க ஆமாம் மேடம் இதுதான் நடந்தது என 17 பேர் கும்பலால் கடந்த 6 மாதங்களாக மாற்றுத் திறனாளியான தனது சகோதரிக்கு நேர்ந்த அந்த கொடுமைகளை அந்த இளம்பெண் விளக்கிக்கூற மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்ற சிறுமியைப்பார்த்த ஆய்வாளர் இந்தச் சிறுமிக்குப் போயா அப்படிப்பட்ட கொடுமை நடந்தது என்று நம்பமுடியாமல் மலைத்தார்.

உடனடியாக தகவல் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. பணியில் கண்டிப்பும், நேர்மையுமிக்க ராஜேந்திரன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டு நடந்த விபரங்களை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு கொண்டுச் சென்றார்.

தகுந்த நடவடிக்கை எடுங்கள், குற்றவாளிகள் ஒருவர்கூட தப்பக்கூடாது, சிறுமிக்கு தகுந்த பாதுகாப்பு கொடுங்கள் என உத்தரவிட்டார் ஆணையர். உடனடியாக காவல்துறை விரைவான செயலில் இறங்கியது. சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை உறுதிப்படுத்தியது.

சிறுமி தனது சகோதரியிடம் தெரிவித்த நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். சிறுமி வசிக்கும் அபார்ட்மெண்டுக்குச் சென்ற போலீஸார் இரண்டுநாளில் அனைவரையும் கைது செய்தனர். நடந்தது என்ன? 12 வயது நிரம்பாத அந்த சிறுமி, காது கேட்கும் திறன் குறைந்தவர். ஆனால் வாய்ப்பேச முடியும்.

சிறுமியின் தந்தை எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். காலையில் சென்றால் இரவு வெகுநேரம் கழித்தே வீடு திரும்புவார். மகளின் நிலையை கருத்தில் கொண்டு அவரை அதே பகுதியில் பள்ளியில் சேர்த்திருந்தார். வசதியான குடும்பம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அயனாவரத்தில் 360-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அபார்ட்மெண்டில் வசித்தார். சிறுமியுடன் ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளித்தவர் அவரது மூத்த சகோதரி. அவர் மஹாராஷ்டிராவில் பட்டப்படிப்பை படித்து வந்தார். இவர்கள் வசிக்கும் அபார்ட்மெண்டில் பராமரிப்பு வேலைகளுக்காக 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்துள்ளனர்.

சிறுமியின் தாய் வேலை எதுவும் செய்யவில்லை. வீட்டை கவனித்து வந்தார். சிறுமி 12 வயது நிரம்பாதவர். ஆனால் துரு துருவென்று அபர்ட்மெண்ட் முழுதும் வலம் வரக்கூடியவர். இயல்பாக அனைவருடனும் ஒட்டிக்கொள்ளும் சிறுமி பணியாட்களுடனும் இயல்பாக பழகுவார். அவர்கள் வசித்த அபார்ட்மெண்டில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றியவர் 66 வயது முதியவர் ரவிகுமார்.அயனாவரத்தைச் சேர்ந்தவர்.

லிப்டில் சிறுமி போகும்போதும் வரும்போதும் பழகியுள்ளார். தாத்தா போன்ற வயதானவர்தானே என சிறுமியும் இயல்பாக பழகியுள்ளார். தாத்தா வயதையும் தாண்டிய வயதுடைய ரவிகுமார் சிறுமியிடம் மோசமான எண்ணத்துடன் பழக ஆரம்பித்துள்ளார். தொட்டு விளையாட ஆரம்பித்தவர் ஒருநாள் யாருமில்லாத நேரத்தில் சிறுமியை தனி இடத்துக்கு அழைத்துச் சென்று கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் சிறுமியை மிரட்டி நடந்ததை வெளியில் சொன்னால் உன் அப்பா, அம்மாவை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி அனுப்பியுள்ளார். அதனால் சிறுமியும் பயந்துக்கொண்டே தனக்கு நேர்ந்ததை வெளியில் சொல்லவில்லை.

இது நடந்தது கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், அதன் பின்னர் தனக்கு விருப்பப்பட்டபோதெல்லாம் ரவிகுமார் சிறுமியை மிரட்டி அழைத்து பயன்படுத்தியுள்ளார். பின்னர் ஒருநாள் சிறுமியை அழைத்துச் செல்வதைப் பார்த்த ஒரு நபர் ரவிகுமாரை மிரட்ட அவர் உண்மையைச் சொல்ல ரவிகுமாரை கண்டித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய அந்த நபர் தன்னையும் அதே குற்றத்தில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. சிறுமியை மிரட்டி இரண்டாவது நபரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி யாரிடம் சொல்வது என தெரியாமல் விழித்துள்ளார். இது அந்த கொடூரர்களுக்கு வசதியாகி போனது. போகப்போக விஷயம் ஒவ்வொரு நபர்களுக்காக கசிய அவரவர் தங்கள் தேவைக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அபார்ட்மெண்டில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும் பராமரிப்பு பணியில் இருந்த மிருகங்களில் சில அதில் சிக்காமல் சிசிடிவி கேமரா இல்லாத இடமாக குடியிருப்பு மொட்டை மாடி, தரைத்தளத்தில் உள்ள அறை, கார் பார்க்கிங் பின்புறம் கேமரா இல்லாத பகுதி என பல இடங்களை பயன்படுத்தியுள்ளனர்.

தினம் தினம் நடக்கும் கொடுமையை, புதிது புதிதாக ஆட்கள் வருவதும், கொடுமை புரிவதும், விதவிதமாக துன்புறுத்துவதும், அடிப்பதும் சிறுமிக்கு புரியாத ஒன்றாக இருந்தது. அப்பா, அம்மாவிடம் சொல்ல பயம் இப்படியே 6 மாதம் கடந்துள்ளது.

ஆறுமாதத்தில் எத்தகைய கொடுமையை சிறுமி அனுபவித்திருப்பார் என்பதை எண்ணிப்பார்க்கவே பீதியைக் கிளப்பும். இதில் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட அனைவரும் குடும்பம் குழந்தைக்குட்டிகள், பேரன் பேத்திகளுடன் வாழ்பவர்கள்.

அனைவரும் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள். அவர்கள் அனைவருக்கும் சிறுமி ஒரு போகப்பொருளாக மட்டுமே தெரிந்துள்ளார். இந்த நிலையில்தான் சிறுமியின் வாழ்க்கையில் ஒரு திருப்பம். அதே ஆண்டு ஜூன் மாதம் மும்பையிலிருந்து விடுமுறையில் அவரது அக்கா சென்னை திரும்பியது ஆறுதலாக அமைந்தது.

தங்கைமேல் அதிகம் பாசம் கொண்ட அவர் தங்கை வழக்கமான உற்சாகத்தில் இல்லாமல் இருப்பதைப்பார்த்து என்ன காரணம் என தாயிடம் விபரம் கேட்டுள்ளார். அவள் கொஞ்ச நாளாவே இப்படித்தான் இருக்கிறாள் என தாயார் கூறியுள்ளார். ஆனால் சம வயதுக்கு சற்று கூடுதலான வயதுடைய சகோதரிக்கு ஏதோ மனதில் பட சகோதரியிடம் கேட்டுள்ளார்.

அப்பொழுதுதான் அவர் கழுத்தில் இருந்த காயத்தைக் கவனித்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தக்காயம் எப்படி வந்தது என்ன விபரம் எனக்கேட்க அப்போதுதான் 6 மாதகாலமாக தனக்கு நேர்ந்த கொடுமையை கடகடவென கொட்டியுள்ளார் அந்தச்சிறுமி. அக்கா இதை யாரிடமும் சொல்லிவிடாதே அப்பா அம்மாவை கொன்றுவிடுவார்கள், அவர்கள் பெரிய கும்பல் என கதறியுள்ளார் அந்தச்சிறுமி.

தங்கைக்கு நேர்ந்த கொடுமையைக் கேட்ட சகோதரிக்கு தலைச்சுற்றி மயக்கம் வரும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட அவர் சிறுமியிடம் பயப்படாதே என்ன நடந்தது என்று தெளிவாகச் சொல் என கேட்க அனைத்தையும் சிறுமி கூறியுள்ளார். யார் யார் அந்த கொடூரர்கள் எனக்கேட்க வரிசையாக அவர்களைப்பற்றி கூறியுள்ளார்.

உடனடியாக பெற்றோரை அழைத்து மெதுவாக சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை கூறியுள்ளார். ஆறுமாதமாகவா? அடப்பாவிகளா என அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதன் பின்னரே போலீஸுக்கு சென்றுள்ளனர். சென்னை போலீஸாரின் பணி இந்த வழக்கில் மகத்தான பணியாகும். சிறுமிக்கு நேர்ந்த பிரச்சினை குறித்து தனது கவனத்துக்கு வந்தபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என துணை ஆணையர் ராஜேந்திரன் கூறியதாவது:

”பிரச்சினை என் பார்வைக்கு வந்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக இதற்கென தனிக்குழுவைப்போட்டு குற்றவாளிகளை கைது செய்யவும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும், சாட்சியங்களை தயார் செய்யவும் அறிவுறுத்தினேன். பாதிக்கப்பட்ட குழந்தைக்காக பேச ஒரு கவுன்சிலரை ஏற்பாடு செய்தோம். ஏனென்றால் சிறுமி மனந்திறந்து தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லவேண்டும் அல்லவா அதற்காக அதைச் செய்தோம்.

காவல் ஆணையர் இந்த வழக்கில் மிகுந்த கவனம் செலுத்தினார். வழக்கை எப்படி கொண்டுச் செல்வது என அவ்வப்போது ஆலோசனை கூறினார். குழந்தைகள் நல அலுவலர், தொண்டு நிறுவனங்களை உதவிக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசனை தெரிவித்தார்” என துணை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை திரட்டுவதிலும், ஒருங்கிணைத்து வாதிடுவதிலும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் சிறப்பாக செயல்பட்டார். காவல்துறை, அரசுத்தரப்பு சேர்ந்து செயல்பட்டதும், அரசுத்தரப்பு வழக்கறிஞர் ரமேஷின் வலுவான வாதத்தினாலும் 16 பேரில் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டு 15 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார் சென்னை மாவட்ட போக்ஸோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா.

வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்திய அளவில் நிர்பயா வழக்குப்போன்று தமிழகத்தில் இந்த வழக்கு கவனிக்கப்பட்ட வழக்காக இருந்தது. தீர்ப்பில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு வாழ்நாள் முழுதும் ஆயுள் சிறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விபரம்:
1. ரவிக்குமார் (66) 2. சுரேஷ் (32) 3. அபிஷேக் (28), 4. பழனி (40) -- சாகும்வரை ஆயுள்
5. ராஜசேகர் (28) ஆயுள் தண்டனை
6..எரால்பிராஸ்(58) 7 ஆண்டு கடுங்காவல்
5 ஆண்டு கடுங்காவல்
1. சுகுமாரன் (60)
2. முருகேசன்(54)
3. பரமசிவம் (60)
4. ஜெய்கணேஷ் (23)
5. தீனதயாளன்(50)
6. ராஜா (32)
7. சூர்யா(23)
8. ஜெயராமன்(26)
9. உமாபதி(42)

ஆகியோருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் நடராஜன் குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் பலரது வாதத்தை தனது வலுவான வாதத்தால் வென்றுள்ளார். அவரது சரியான வழிகாட்டுதலும் வாதமும் வழக்கை விரைவாக முடிக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை விரைவாகவும் கிடைத்தது.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் வழிகாட்டுதல்களை சரியாக செயல்படுத்தி சந்தர்ப்ப சாட்சியங்களை தயார்ப்படுத்தி சிறுமியை பாதுகாத்து, மற்றவர்கள் மிரட்டளுக்கு அஞ்சாமல் தடயங்களை சேகரித்து சாட்சிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றப்பத்திரிக்கையை சரியாக தாக்கல் செய்த ஆய்வாளர் விஜய சந்திரிகா கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுப்பெற்றார். அவருக்கு துணையாக சிறப்பு உதவி ஆய்வாளர் ராபின்சன் சிறப்பாக செயல்பட்டார்.

ஆய்வாளர் விஜய சந்திரிகா

தனது பணிக்காலத்துக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டார். ஆனாலும் ஒன்றரை மாதம் கழித்து தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்றத்துக்கு அவர் வந்திருந்தார். அவரது பணியை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டினர் அவருக்கான கௌரவம் விரைவில் காவல்துறையில் அளிக்கப்படும் என காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் வெற்றி பெற்றதன்மூலம் இனி வரும் வழக்குகளில் இந்த வழக்கு மற்றும் வாதங்கள் போலீஸுக்கும், வழக்கறிஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கப்போகிறது என்பது நிச்சயம். இந்த வழக்கில் அரிதிலும் அரிதான வழக்கில் தான் தூக்குத்தண்டனை வழங்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்கிறது, அதற்கு முக்கியமான காரணம் சமுதாய அழுத்தம் இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் இந்த வழக்கு உள்ளது, அதனால் தூக்குத்தண்டனை கொடுக்கும் என்று தெரிவித்த நீதிபதி ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது என்று கருதினாலும், வேறு எந்த தண்டணையும் கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது என்ற பட்சத்தில் மட்டுமே தூக்குத்தண்டனை கொடுக்கப்படவேண்டும். அதனால் நான் ஆயுள் தண்டனை அளிக்கிறேன் எனக்குறிப்பிட்டு ஆயுள் தண்டனை வழங்கினார்.

தண்டனை வழங்கிய சென்னை மாவட்ட போக்ஸோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா. ஏற்கெனவே மாநில மனித உரிமை ஆணையத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்