கரோனா வைரஸ்; பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 தடுப்பு நடவடிக்கைகள்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்தும், தமிழக சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.

இது தொடர்பாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (பிப்.1) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழகத்தில் கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ். இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவி இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நோய் அறிகுறிகள் கண்ட நபர்கள் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நேரடியாகவும், நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.

1. 19.01.2020 அன்று மத்திய அரசின் தேசிய நோய் கண்காணிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட்ட எச்சரிக்கைத் தகவலை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, மாநில மற்றும் மாவட்ட அளவிலான தொற்றுநோய் தடுப்பு விரைவு குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நெறிமுறைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிரப்பட்டு அவற்றைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

2. இதன் தொடர்ச்சியாக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் கரோனா வைரஸ் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தினமும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

3. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பது தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்டறியப்படுகிறது. மருத்துவக் குழுவினர் பரிசோதனை மூலமும் கண்காணித்து வருகின்றனர். விமான நிலையங்களில் பொது சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

4. 31.01.2020 வரை சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 394 பயணிகளுக்கும் கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அனைவரும் பொது சுகாதாரத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்படுவர்.

5. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மேற்கூறிய 4 விமான நிலையங்களிலும் கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிந்தால் அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக சிறப்பு அவரச ஊர்தி மற்றும் சுய பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுய பாதுகாப்பு உபகரணங்கள், என் 95 பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் மூன்று அடுக்கு முகக் கவசங்கள் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

6. அரசு மருத்துவமனைகளில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

7. மேலும், கரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் செயல்படும் 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி எண்கள் – 044-29510400, 044-29510500 மற்றும் கைபேசி எண் 94443 40496, 87544 48477 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 104 சேவை மையத்தினையும் தொடர்பு கொள்ளலாம்.

8. கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசுரங்கள் பொது சுகாதாரத் துறை மூலமாக சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பகிரப்படுகிறது.

பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்

1. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. இருமும் போதும் தும்மும்போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.

3. 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

4. அசைவ உணவு உண்பவர்கள் நன்கு வேகவைத்த பின்னர் சாப்பிட வேண்டும்.

5. கரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்குப் பயணம் செல்வதைத் தவிர்க்கலாம்".

இவ்வாறு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE