‘கரோனா’ வைரஸ் பாதிப்பால் முகக் கவசங்களுக்கு திடீர் தட்டுப்பாடு- மதுரையில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி

சீனாவில் ‘கரோனா’ வைரஸ் பாதிப்பால் மக்கள் அணியும் முகக் கவசங்களுக்கு (மாஸ்க்) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மதுரையில் தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் சீனாவுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படு கின்றன.

சுற்றுச்சூழல் சீர்கேட்டால் காற்று மாசில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், தொற்று நோய் பாதிப்பில் இருந்து தப்பவும் மருத்துவத் துறையினர் மட்டுமல்லாது, பொதுமக்களும் முகக் கவசம் அணியத் தொடங்கி விட்டனர். தற்போது சீனாவில் ‘கரோனா’ வைரஸ் தாக்கத்தால் அந்த நாட்டில் மட்டுமில்லாது சர்வதேச அளவில் முகக் கவசத்துக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் மக்கள் கரோனா பாதிப்பில் இருந்து தப்ப முகக் கவசங்களை அணிந்து கொள்கின்றனர். அதனால், தற்போது அங்கு தேவையும், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளதால், மதுரையில் இருந்து முகக் கவசங்கள் அதிக அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சீனாவுக்கு ஏற்றுமதியாகும் முகக் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. 95 சதவீத காற்று மாசையும், பாக்டீரியாக்களையும் தடுக்கும் 6 அடுக்கு N95 முகக் கவசங்களுக்கு தற்போது சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது அதற்கு அடுத்தநிலையில் உள்ள முகக் கவசங்களுக்கு சந்தைகளில் தேவை அதிகரித்துள்ளது. அதனால், மதுரையில் தயாரிக்கப்படும் 3 அடுக்கு முகக் கவசங்கள் தற்போது அதிகஅளவு சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த முகக் கவசமும், 6 அடுக்கு முகக் கவசம்போல் மிகவும் நுண் தன்மை கொண்ட பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை தடுக்கும் தன்மை கொண்டவை ஆகும். இந்த வகை முகக் கவசங்கள் பிரத்யேக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மதுரையில் தயாரிக்கப்பட்டு வருவதாக அதன் உற்பத்தியாளர் தெரிவிக்கின்றனர்.

தற்போது ‘கரோனா’ வைரஸ் மட்டுமில்லாது காற்று மாசில் இருந்து தப்பவும், மற்ற நோய்பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளவும் தமிழகம் மற்றும்இந்தியாவின் பிற மாநிலங்களுக் கும், மதுரையில் தயாரிக்கப்படும் இந்த முகக் கவசங்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால், இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரவு, பகலாக முகக் கவசங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் முகக் கவசங்கள் மட்டுமல்லாமல் அங்கி (கவுன்), ஷூ கவர், தலை குல்லா உள்ளிட்ட மற்ற பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

இதுகுறித்து உற்பத்தியாளர் அபிலாஸ் கூறியதாவது: 6 அடுக்கு முகக்கவசத்தை மற்ற நிறுவனங்களில் இருந்து வாங்கி விற்பனை செய்கிறோம். சீனாவுக்கு ஏற்றுமதியாவதால், 2 அடுக்கு மற்றும் 3அடுக்கு முகக் கவசங்களை, 6அடுக்கு முகக் கவசங்கள் போலவேபாதுகாப்பான மருத்துவத் துணிகளைக் கொண்டு தயாரிக்கிறோம்.

சீனாவுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்வதில்லை. எங்களிடம் வாங்கும் ஏற்றுமதியாளர்கள், சீனாவுக்கு வேண்டும் எனக் கூறியே வாங்குகின்றனர். சாதாரணமாக ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் முகக் கவசங்களை தயாரிப்போம். தற்போது ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால் 25 லட்சம் முகக் கவசங்களைத் தயாரிக்கிறோம்.

மூலப் பொருட்கள் விலைஉயர்வால் தற்போது முகக் கவசத்தின் விலையும் அதிகரித்துள்ளது. காற்றில் பரவும் பாக்டீரீயாவை முழுமையாகத் தடுப்பதால், மருத்துவத் துறையில் இந்த முகக் கவசங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE