நீதிமன்ற உத்தரவையும் தாண்டி ஆவின் தலைவராக ஓ.ராஜா மீண்டும் பொறுப்பேற்கிறார்

ஆவின் தலைவராக ஓ.ராஜா இன்று மீண்டும் பொறுப்பேற்கிறார்.

1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை ஆவின், 50 ஆண்டுகால வரலாறு கொண்டது. தேனி, மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை ஆவின், கடந்த ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மதுரை, தேனி எனத் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தது. இதனால், தேனி ஆவினில், 17 இயக்குநர்கள், 474 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 33 ஆயிரம் பேரிடம் தேனி ஆவின் நிர்வாகம், பால் கொள்முதல் செய்கிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, தேனி ஆவின் தலைவராக அறிவிக்கப்பட்டு, 17 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். தேனி என்.ஆர்.டி. நகரில் 50 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை கட்டிடம் எடுத்து, தேனி ஆவின் அலுவலகம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, "பொதுக்குழுவைக் கூட்டி, தலைவர், துணைத் தலைவர் மற்றும் இயக்குநர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், ஓ.ராஜா, முறைகேடாக தன்னை தேனி ஆவின் தலைவராக அறிவித்துக்கொண்டார்" எனக் கூறி, தேனி பழனிச்செட்டிபட்டியைச் சேர்ந்த அம்மாவாசி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 23-ம் தேதி, ஓ.ராஜா மற்றும் இயக்குநர்களின் நியமனத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இவ்வளவு களேபரங்கள் நடந்துள்ள நிலையில், இன்று (ஜன.30) மீண்டும் ஓ.ராஜா, தேனி ஆவின் தலைவராகத் தேர்வு செய்யப்படுவதற்கான நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இது தொடர்பாக, அம்மாவாசி தரப்பில், தேனி பால் வளத்துறை துணைப்பதிவாளர் லெட்சுமியிடம், புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE