குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்: மேலும் மூவர் கைது; இடைத்தரகரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம்

By செய்திப்பிரிவு

குரூப்-4 தேர்வு முறைகேடு விவ காரத்தில் மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடு தொடர்பாக தேடப் பட்டு வரும் முக்கிய இடைத்தரகர், அரசியல் பிரமுகர் ஒருவரின் கட்டுப் பாட்டில் இருப்பதாக கூறப்படு கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குருப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தர தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன் (35), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் (45), இடைத்தரகர்களாக செயல்பட்ட சென்னை ஆவடி வெங்கட்ரமணன் (38), தேனி மாவட்டம் சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ் (45), இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து முதல் நூறு இடங்களுக்குள் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் (31), கடலூர் ராஜசேகர் (26), சென்னை ஆவடி காலேஷா (29), திருவல்லிகேணி நிதிஷ்குமார் (21) ஆகிய 9 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

3 பேர் பணியிடை நீக்கம்

கைது செய்யப்பட்டவர்களில் 3 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ரமேஷ், எரிசக்தி துறையில் பணியாற்றும் திருக்குமரன், டிஎன்பிஎஸ்சி அலுவலக ஊழியர் ஓம்காந்தன் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்தான் மோசடி கும்பலுக்கு ஒருங்கிணைப்பாளர் போல செயல்பட்டு வந்துள்ளார். குரூப்-4 தேர்வு எழுதியவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளார். 99 பேரிடம் அவர் ரூ.4 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வசூலித்ததாக தெரிகிறது. சுமார் ரூ.10 கோடி வரை பணம் வசூலித்து இருக்க வாய்ப்புள்ளது என்று சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜெயக்குமார் மூலம்தான் அனைத்து மோசடிகளும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அவர் பிடிபட்டால் குரூப்-4 தேர்வில் நடந்த மோசடிகள் அனைத்தும் முழுமையாக தெரிந்துவிடும்.

காவலர் தேர்விலும் முறைகேடு

கடந்த 5 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட பல தேர்வுகளில் ஜெயக்குமார் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக போலீஸ் தேர்வில் இவர் அதிக முறைகேடு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தேர்வு தொடர்பாக பயிற்சி அளிக்கும் மையங்களுடனும் ஜெயக்குமா ருக்கு தொடர்பு இருந்துள்ளது. அந்த பயிற்சி மையங்கள் உதவி யுடனும் அவர் மோசடியில் ஈடு பட்டுள்ளார். சென்னை, மதுரை உட்பட பல இடங்களில் உள்ள பயிற்சி மையங்களில் அவர் தொடர்பு வைத்துள்ளார். மதுரை யில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பயின்ற 65 பேர் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த தேர்வு மையத்துக்கும் ஜெயக்குமாருக்கும் தொடர்பு இருப்பதை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

‘தரகர் ஜெயக்குமார் தனி நபராக இருந்து இந்த மோசடியை செய்யவில்லை. தனி நபராக இத்தகைய மோசடியை செய்யவும் இயலாது. அவருக்கு அரசின் பல் வேறு துறை ஊழியர்கள், அதி காரிகள் உதவிகள் செய்துள்ளனர்’ என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். ஜெயக்குமார் சிக்கினால் அவருக்கு உதவி செய்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றியும் தெரியவரும்.

தலைமறைவான ஜெயக்குமார், தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பது சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்வது குறித்து உயர் அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் ஜெயக்குமார் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

மேலும் 3 பேர் கைது

இதற்கிடைய, இடைத்தரகர் களுக்கு பணம் கொடுத்து பணியில் சேர முயன்றதாக ராணிப்பேட்டை யைச் சேர்ந்த கார்த்தி (30), திரு வள்ளூரைச் சேர்ந்த வினோத்குமார் (34), கடலூரைச் சேர்ந்த சீனி வாசன் (33) ஆகிய 3 பேரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர் திருக் குமரன் (35) என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இவர் 2017-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வு மூலம் தேர்வாகி இந்தப் பணியில் சேர்ந்தார். அப்போதும் ராமேசுவரம் தேர்வு மையத்தில்தான் திருக்குமரன் தேர்வு எழுதியுள்ளார். இந்த குரூப்-2ஏ தேர்வு முடிவில் முதல் 50 இடங்களில் 30 பேரும், 100 பேரில் 37 பேரும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 37-வது இடத்தைப் பிடித்த திருக்குமரன், மோசடி செய்தே இந்தப் பணியில் சேர்ந்து இருக் கலாம் என்று சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர். குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் தொடர்பாக அப்போதே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்தபோதும், பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக விசாரித்து வரும் நிலை யில், மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

53 mins ago

மேலும்