திருப்பத்தூரில் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியத்தால் இளம்பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் டவுன், ஆரீப் நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி இம்ரான் (27). இவரது மனைவி பரீதா (23). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், பரீதா 2-வது முறையாக கர்ப்பமடைந்தார்.
அவருக்கு இன்று (ஜன.21) அதிகாலை 4 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பரீதா ஒருங்கிணைந்த கர்ப்பிணி மற்றும் மகப்பேறு - சிசு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதிகாலை 6 மணிக்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் 2 செவிலியர்கள் பரீதாவுக்கு பிரசவம் பார்த்தனர். காலை 7 மணிக்கு பரீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, செவலியர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தை பிறந்த சில நிமிடங்களில் பரீதாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைக்கண்ட உறவினர்கள், உடனே செவிலியர்களிடம் சென்று முறையிட்டனர்.
அப்போது, செவிலியர்கள் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தாகவும், சாப்பிட்ட பிறகு வருகிறோம் என உறவினர்களிடம் அலட்சியமாக பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, மூச்சுத் திணறல் காரணமாக பரீதா குழந்தை பிறந்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட உறவினர்கள் ஆவேசடைந்தனர்.
உடனே, பரீதாவின் உறவினர்கள் அங்கு திரண்டனர். பரீதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காததாலும், மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியத்தினாலும் பரீதா உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய உறவினர்கள், மகப்பேறு அவசர சிகிச்சை மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என அனைவர் மீதும் மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியில் மெத்தனமாக இருந்த அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, மருத்துவ அலுவலர் செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மருத்துவ அலுவலர் செல்வகுமார் உறுதியளித்தார். ஆனால், அதை ஏற்காத உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்த திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு, டவுன் காவல் ஆய்வாளர் பேபி மற்றும் காவல் துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர். அதன்பேரில், போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் செல்வகுமார் கூறியதாவது:
"பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பரீதாவுக்கு ரத்தம் அதிகமாக வெளியேறி உள்ளது. இருப்பினும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. பணியில் இருந்த மருத்துவர்கள், செவலியர்கள் அனைவரும் அனுபவமிக்கவர்கள். பல பிரசவங்களை பார்த்தவர்கள், அவர்கள் தவறு செய்வதாக கூறுவது ஏற்புடையதல்ல. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தவறு இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago