தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படாததால் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கப்படும்: மருத்துவப் படிப்பும் எட்டாக்கனியாகி விடும் என ஆசிரியர்கள் வேதனை

By சி.பிரதாப்

தமிழக அரசின் இலவச பயிற்சிவகுப்புகள் முறையாக நடத்தப்படாததால் நீட் தேர்வில் அரசுப் பள்ளிமாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிமாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 412 மையங்களில் தனியார் நிறுவனத்துடன் இணைந்துஇந்த பயிற்சியை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை சுமார் 42 ஆயிரம் பேர் இங்கு பயிற்சி பெற்றபோதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர 11 பேருக்குத்தான் இடம் கிடைத்தது. இதனால் அரசு பயிற்சிமையங்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து நடப்பு ஆண்டு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அரசு பயிற்சி மையங்களில் சேர விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

அவ்வாறு தேர்வான 19,000 பேருக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த செப்டம்பரில் தொடங்கியது. வாரம்தோறும் மாதிரி குறுந்தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல், தொடர்விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் நீட் பயிற்சி வகுப்புகள் டிசம்பருக்குப்பின் முறையாக நடத்தப்படவில்லை. தற்போது தேர்வுக்கு குறைந்த காலஅவகாசமே இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

35 நாட்கள் மட்டுமே பயிற்சி...

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

நடப்பு ஆண்டு மிகவும் காலதாமதமாக, செப்டம்பர் 24-ம் தேதிதான் அரசின் பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதுவரை 35 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றுள்ளன. குறுந்தேர்வுகள் நடத்தப்பட்ட தினங்களைச் சேர்த்தாலும் ஒட்டுமொத்தமாக 51 நாட்களே நீட் தேர்வுக்கு, அரசு சார்பில் பயிற்சி தரப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1 முதலே நீட் தேர்வுக்கு தீவிரமாக பயிற்சி பெறுகின்றனர்.

குறைந்தபட்சம் ஓராண்டாவது முழுமையான பயிற்சி பெற்ற பின்னரே அவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களால் தங்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.

கண்துடைப்பு நடவடிக்கை

இதை உணர்ந்துதான் தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி தர முடிவானது. ஆனால், ஓராண்டுகூட பயிற்சியை முறையாக அரசு வழங்கியதில்லை. அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகபட்சம் 2 மாதம்தான் பயிற்சி பெறுகின்றனர்.

அவையும் கண்துடைப்பாகவே இருப்பதால் மாணவர்களால் போட்டித் தேர்வுகளுக்கு முழுமையாக தயாராக முடிவதில்லை. அமெரிக்காவில் இருந்து நிபுணர்களை அழைத்துவந்து பயிற்சிஅளிக்கப் போவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார். ஆனால், பல பகுதிகளில் பயிற்சிகூடமுறையாக நடைபெறுதில்லை. இந்நிலை நீடித்தால் மருத்துவ படிப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதுதொடர்பாக பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கூறும்போது, ‘‘வகுப்பறையில் பாடம் நடத்துவதைப் போலவே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நீட் தேர்வில்எவ்விதமான கேள்விகள் கேட்கப்படும், நேர மேலாண்மையை எவ்வாறு கையாள்வது என்பன போன்ற உத்திகள் கற்றுதரப்படுவதில்லை.

நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் 3 மாதமே அவகாசம் உள்ளது.இதில் ஜனவரி இறுதியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கிவிடும். அதன்பின் மார்ச் வரை பொதுத்தேர்வு நடைபெறுவதால் பயிற்சி வகுப்புகள் நடைபெறாது.

பொதுத்தேர்வுக்கு தயாராகவே முக்கியத்துவம் தந்தாக வேண்டும். ஏப்ரல் மாதம் மட்டும் படித்து நீட் தேர்வுக்கு தயாராக முடியுமா என்றால் அது சிரமமான காரியம்.எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பலர் தற்போது தங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ளும் நிலையை உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்