கலைமாமணி எஸ்.எம்.உமர் காலமானார்: தமிழ்த் திரைப்படங்களுக்கு வியட்நாமில் வரவேற்பு பெற்றுத் தந்தவர்!

By திரை பாரதி

தமிழ்த் திரையுலகுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவரும், முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான எஸ்.எம்.உமர் இன்று அதிகாலை காரைக்காலில் காலமானார். அவருக்கு வயது 94.

தனது 20-வது வயதில் திரைத்துறையில் ஒரு உதவி இயக்குநராக வாழ்க்கையைத் தொடங்கி, இயக்குநர், தயாரிப்பாளர் என்று உயர்ந்தவர் உமர். கருப்பு – வெள்ளை தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் படங்களான 'ஞானசௌந்தரி', 'லைலா மஜ்னு', 'அமரகவி', 'குடும்ப விளக்கு', 'ஜெனோவா' ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பில் பங்கேற்றவர். 1969-ல் பத்மினி நடிப்பில் வெளிவந்த ‘வசந்த சேனா’ என்ற படத்தைத் தயாரித்தவர். 1982-ல் வெளிவந்த ‘நாடோடி ராஜா’என்ற படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். மிக முக்கியமாக, தமிழ் உள்ளிட்ட 600 இந்திய மொழிப் படங்களை வியட்நாம் மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு அங்கே தமிழ் மற்றும் இந்தியப் படங்களுக்கான சந்தையை உருவாக்கியவர்.

பழம்பெரும் நடிகர்கள், இயக்குநர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எஸ்.எம்.உமர், காரைக்கால் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். வியட்நாம் தலைநகர் சைகோனில் ஒரு சைவ உணவகத்தை 1958-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை நடத்தியவர். சென்னை, தியாகராயநகரில், பனகல் பார்க் அருகில் இவர் நடத்தி வரும் உமர் கயாம் உணவு விடுதி மிகவும் பிரபலமான ஒன்று.

‘மதமாச்சரியங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினருடனும் நெருக்கமாகவும் இனிமையாகவும் பழகிய வெள்ளை மனதுக்காரர். கடைசி வரை வெள்ளை பேண்ட்டும், சட்டையும் அணிந்தவர்’ என்று அவரது திரையுலக நண்பர்கள் கூறுகிறார்கள்.

எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.எஸ்.சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியினர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் அப்துல் சமது என்று திரையுலக, அரசியல் பிரமுகர்கள் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை ‘இசையரசி எம்.எஸ்.’என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் உமர் எழுதியுள்ளார்.

பிரெஞ்சு நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள இவர், தமிழ், பிரெஞ்சு மொழிகளில் புலமை கொண்டவராக இருந்தார். திரைப்படத் துறையில் செய்த சாதனைக்காக, தமிழக அரசு 1997-ல் இவருக்கு ‘கலைமாமணி’விருதும், 2010-ம் ஆண்டில் புதுவை அரசு ‘கலைமாமணி’ விருதும் வழங்கிக் கௌரவித்துள்ளன.

நாடகத்துறையில் தமது பங்களிப்பை வெளிப்படுத்தியதோடு, பத்திரிகைத் துறையில் நுழைந்து 1939-ல் ‘இளம்பிறை’, ‘கதம்பம்’,‘குரல்’,‘உமர் கய்யாம்’ போன்ற இதழ்களையும் ஆசிரியராக இருந்து தொடர்ந்து பதிப்பித்தவர்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதுமை காரணமாக வீட்டிலேயே இருந்துவந்த அவர், இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் காலமானார். இன்று பகல் 11.30 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்