தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கும் மையம் திறப்பு: காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான அனுமதியை காஞ்சிபுரத்தில் மட்டுமே பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கா.பாஸ்கரன் தலைமையில், அத்தொகுதியைச் சேர்ந்த, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் பேசியதாவது:

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் பணிகளை எளிமையாக்கும் விதமாக, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்திருந்தோம்.

அந்தந்த தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், பேரணி, ஊர்வலம், ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவது, வாகனங்களை பயன்படுத்து வது ஆகியவற்றுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களே இது வரையில் அனுமதி வழங்கி வந்தனர்.

தற்போது, தேர்தல் பிரச்சார கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமத அனுமதி வழங்கும் மையம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, விமான நிலைய விரிவாக்க திட்டப் பிரிவு அதிகாரி ரவீந்திரநாத் தலைமையில் இயங்கும். இனி, அங்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இனி எதற்கும் அனுமதி வழங்க மாட்டார்கள்.

தேர்தல் தொடர்பான அனுமதிகளைப் பெற, 7 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும். ரத்து செய்வதாக இருந்தால், 48 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்ய வேண்டும்.

அனுமதி கேட்டு விண்ணப்பிப்போருக்கு, அடுத்த 36 மணி நேரத்தில் அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜய குமார் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE