திருப்பூர் மாவட்டத்தில் அனுப்பர்பாளையம் மற்றும் அதனை சார்ந்த அங்கேரிபாளையம், செட்டிபாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட எவர்சில்வர், செம்பு, பித்தளை உலோகங்களைக் கொண்டு பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பட்டறைகள் செயல்படுகின்றன. இங்கு பல தலைமுறைகள் கடந்து, பாத்திர உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது.
அனுப்பர்பாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்களின் 80 சதவீத உற்பத்தி, கை வேலைப்பாடு மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. பாத்திர உற்பத்திக்கென பிரத்யேக இயந்திரங்கள் தற்போது வந்துவிட்டாலும், இங்கு ஆரம்பம் முதல் தற்போது வரை கை வேலைப்பாடு மூலமாகவே பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, பாத்திரங்களின் ஆயுள் அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதுவே, மக்களிடம் அனுப்பர்பாளையம் பாத்திரங்களுக்கான மவுசு நிலைத்திருக்க காரணம் என்கின்றனர், உற்பத்தியாளர்கள்.
இந்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், அனுப்பர்பாளையத்தில் பொங்கல் பானை விற்பனை களைகட்டி வருகிறது. சுமார் அரை கிலோ அரிசி வேக வைக்கும் அளவில் இருந்து, ஒரு கிலோ, 2 கிலோ, 5 கிலோ, 10 கிலோ வரை அரிசி வேக வைக்கும் அளவுக்கு, பல்வேறு வடிவங்களில் கை வேலைப்பாடுகளுடன் கூடிய பளபளக்கும் சில்வர், பித்தளை, செம்பு உலோகங்களால் செய்யப்பட்ட பொங்கல் பானைகள், அங்குள்ள பாத்திர உற்பத்தி மையங்கள், கடைகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. பித்தளை பானை, அதன் எடைக்கு ஏற்ப கிலோ ரூ.700 முதல் ரூ.730 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழர்கள் அனைவரது வீடுகளிலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது தவிர்க்க முடியாத அம்சமாக உள்ள நிலையில், பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைக்க அச்சப்படும் பெண்களின் அடுத்த தேர்வு, பித்தளை பொங்கல் பானைகளாகவே உள்ளன.
அனுப்பர்பாளையம் வீதிகளில் சில்வர் பானைகளைவிட, பித்தளை பானைகள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும்.
இதுதொடர்பாக அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த பாத்திர உற்பத்தியாளர் சிவசுப்ரமணியன் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, ‘பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் பானைகளின் விற்பனைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது அதே அளவில் ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று, அனைத்தையும் முடித்து வெளியூர்களுக்கு அனுப்பிவிட்டோம். கடந்த ஆண்டு ரூ.5 லட்சத்துக்கு ஆர்டர்கள் கிடைத்தது என்றால், தற்போதும் அதே அளவுக்கு கிடைத்துள்ளன. பெரிய வித்தியாசம் இல்லை.
உள்ளூர் விற்பனையை பொறுத்தவரை குறைவு எனக் கூற முடியாத அளவுக்கு, சராசரியாக உள்ளது. செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.
வியாபாரிகள் சிலர் கூறும்போது, ‘பொங்கல் பானை விற்பனை, கடைசி தினங்களில் மட்டும் சூடுபிடிப்பது வழக்கம். கடந்த 11, 12-ம் தேதிகளில் விற்பனை ஓரளவு இருந்தது. நேற்று மாலை தொடங்கி விற்பனை அதிகரித்தது. நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு வரை வியாபாரம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago