நீட் விவகாரத்தில் தமிழக அரசு தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்திருப்பதாக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2020-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.8) நீட் விவகாரம் குறித்து நடைபெற்ற விவாதத்தின்போது, நீட் விலக்கு கோரி புதிய மசோதா நிறைவேற்றுவது உட்பட எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல், தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போல், தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்களே இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நீட் விவகாரத்தில் அதிமுக அரசு கிராமப்புற மாணவர்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 6.1.2020. கடைசித் தேதிக்கு 2 நாட்களுக்கு முன்பாக, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன. அந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறதா? அதுகுறித்து இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது?
ஏற்கெனவே சட்டப்பேரவையில், 2 மசோதாக்களை ஏகமனதாக நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். அது திரும்பி வந்துவிட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டு விட்டதா? அதுகுறித்து விவாதம் இந்த அவையில் பல மணிநேரம் நடந்திருக்கிறது. சட்டத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஆகியோர் விளக்கம் தந்துள்ளனர்.
அப்போது மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதைக் கேட்டீர்களா? அது மட்டுமின்றி, நிராகரிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அது குறித்த புதிய மசோதாவை மீண்டும் இந்த அவையில் நிறைவேற்ற வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். மத்திய அரசிடம் இருந்து விளக்கம் வந்த பிறகு, உடனடியாக அரசு வழக்குத் தொடுக்கும் என்று சட்டத்துறை அமைச்சர் அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக ஏன் ஆவேசமாகக் கூட இங்கே பதிவு செய்திருக்கிறார்.
மீண்டும் நீட் விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றத் தேவைப்பட்டால் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தையே கூட்டுவோம் என்று முதல்வர், இதே அவையில் பதிவு செய்திருக்கிறார். காலம் கடந்து கொண்டிருக்கிறதே தவிர, மத்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. முதல்வர் சொன்னது போல சிறப்புக் கூட்டமும் இதுவரை நடத்தப்படவில்லை. இப்போது போடப்பட்டுள்ள இந்தப் புதிய வழக்கால், என்ன நடந்துவிடப் போகிறது?
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியும் முடிந்து விட்டது. இன்னும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற நிலைதான் உள்ளது. ஆகவே இது சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் செய்யக்கூடிய மிகப் பெரிய, மாபெரும் துரோகம்.
நீட் தேர்வில் நாங்கள் செய்தது துரோகம் அல்ல. இப்போது நடந்து கொண்டிருப்பதுதான் துரோகம்.
தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல இந்த வழக்கு உள்ளது. கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த வரையில் நீட் தேர்வு வரவில்லை.
ஜெயலலிதா இருந்தபோதும் தமிழ்நாட்டுக்குள் நீட் நுழைய முடியவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு வரக்கூடாது என்று தடை உத்தரவைப் பெற்று வைத்திருந்தவர் கருணாநிதி. நீதிமன்றத்திற்குச் சென்றதைத் தவறு என நாங்கள் கூறவில்லை. அது காலத்தின் சூழ்நிலை.
கடைசி நாளுக்கு 2 நாட்கள் முன்னர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளீர்கள். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்திருக்கிறீர்கள் என்பதே உண்மை".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago